ஆகஸ்ட் ரஜினி மாதம். தயாரிப்பு சன் பிக்சர்ஸ் என்பதால், இண்டர்நெட்டைத் திறந்தாலே மோனிகா பெலூச்சியும், கூலி பவர் ஹவுஸூம் நிறைந்திருந்தது. ஆகஸ்ட் 2இல் நடந்த கூலி ஆடியோ லாஞ்ச் குறித்த பதிவுகள் கொஞ்சம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆகஸ்ட் 10இல் அது தொலைக்காட்சியிலும் யூட்யூபிலும் வெளிவந்தபின்னர் அதன் ஸ்பீடா மீட்டர் இன்னும் வேகமாக சுழன்றது. ரஜினியின் மேடைப்பேச்சு, நாகார்ஜூனா, சத்யராஜின் பேச்சுகள், அனிருத்தின் லிப் சிங்க் பெர்ஃபார்மென்ஸ்கள் என்று இணையம் கூலிமயமானது.
முதல் வாரத்தில் வந்த ஹவுஸ்மேட்ஸ் மட்டும் கொஞ்சம் கவனம் பெற்றது. பாக்கி எல்லாம் எப்படியும் கூலி ரிலீஸினால் தியேட்டர் கிடைக்காது என்று தள்ளிப்போடப்பட்டன. வேறு சொல்லிக்கொள்ளும்படியான படம் எதுவும் தமிழில் ரிலீஸாகவில்லை. ஒண்ணு ரெண்டு படம் மட்டும்தானா என்று யோசித்து ஒரு படத்துக்கு தியேட்டருக்குப் போய் இடைவேளை வரை உட்காரமுடியாமல் வந்தது வேறு நடந்தது. பெரிய ஜாம்பவான்களே திரைக்கதை, காட்சி அமைப்புகளில் சொதப்பும்போது சின்ன்ன்ன பட்ஜெட்டில் வந்த அந்தப் படத்தை ஏன் திட்டுவானேன் என்று விட்டுவிட்டேன்.
தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ, காளி வெங்கட், வினோதினி வைத்யநாதன் நடிப்பில் வெளியானது ஹவுஸ் மேட்ஸ். படத்தின் கரு பிடித்துப்போய் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இணைந்து கொண்டு படத்தை வெளியிட்டதால் படத்துக்கு வெளிச்சம் கிடைத்தது.
தர்ஷனும், அர்ஷாவும் காதலர்கள். பெற்றோரை இழந்த தர்ஷன், அர்ஷாவின் வீட்டினரின் எதிர்ப்பை மீறி அவரைக் கரம் பிடிக்கிறார். வேளச்சேரியில் ஒரு வீட்டை வாங்கிக்குடியேறுகிறார். தர்ஷன் பணிக்கு போனதும் வீட்டில் சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன.
அதன் பின்னணியை தர்ஷனும் அர்ஷாவும் தேடிச்செல்ல, சில அதிர்ச்சிகள்... நெகிழ்ச்சிகள். இப்படியான ஒரு கதைதான் டி.ராஜவேல் இயக்கியிருக்கும் ஹவுஸ்மேட்ஸ்.
இடைவேளைக்கு கொஞ்சம் முன் விரியும் அந்த ட்விஸ்ட் அருமை. ஒரே வீடு, இரண்டு காலகட்டங்கள் எனும் கான்செப்ட்டும் நன்றாகவே இருந்தது. இதுதான் என்று தெரிந்த பின் வரும் இடைவேளைக்குப் பின்னான சில காட்சிகளிலும் நம்மை ரசிக்க வைக்கிற இயக்குநர். க்ளைமாக்ஸை நோக்கிப் போகும்போது கொஞ்சம் தடுமாறுகிறார். காளிவெங்கட், வினோதினி நடிப்பு படத்துக்கு பெரும் பலம். அதுவும் காளிவெங்கட் இறுதிக்காட்சிகளில் பெரும் பங்கைச் செலுத்தியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் பேசப்பட்டிருக்க வேண்டிய படம்!
அடுத்தது... கூலி!
ராயப்பேட்டையில் தேவா மேன்ஷன் என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்திக்கொண்டிருக்கிறார் ரஜினி. நண்பன் ராஜசேகர் - சத்யராஜ் - ஹைதராபாத்தில் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசனிடம், சொல்கிறார் ரஜினி.
ஹைதராபாத்தில் ஹார்பரில் சிலபல கடத்தல் வேலைகளைச் செய்து வரும் சைமனின்- நாகர்ஜுனா - வலதுகரம் தயாள் - சௌபின் சாஹிர். அங்கே அட்டகாசம் செய்துவரும் சௌபினுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கும் ரஜினி - ஸ்ருதி, அவர்களிடம் நெருங்குகிறார்கள். என்ன உண்மை என்று பாதியிலேயே கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அதற்குப்பிறகும் ட்விஸ்ட் தொடர்கிறது. ரஜினி, சத்யராஜ் நட்பின் முன் கதை என்ன, சைமனுக்கு அதில் என்ன சம்பந்தம் என்று கலந்து கட்டி முடிகிறது படம்.
சமூக ஊடகங்கள் கொந்தளித்த அளவு படம் மோசமும் இல்லை. ஆடியோ லாஞ்சில் தூக்கி வைத்துப் பேசிய அளவுக்கு அட்டகாசமாகவும் இல்லை. காரணம், லோகேஷ். சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின், ஸ்ருதி, ரச்சிதா ராம், கடைசியில் அமீர்கான் என்று ஆட்களை நம்பித்தான் எழுதுகிறார்களே ஒழிய கதையோ காட்சிகளோ முக்கியமாகப் பார்ப்பதில்லை இவர்கள். சத்யராஜின் மகள் ஸ்ருதி ஏன் ரஜினியிடம் கோபப்படுகிறார், சத்யராஜ் ஏன் சென்னைக்கு வந்தும் ரஜினியை சந்திக்காமல் போகிறார் என்பது உள்ளிட்ட ஆயிரம் கேள்விகள் படத்தில் இருக்கிறது. அதனாலே சூப்பர் பவர் ஹவுஸாக வந்திருக்க வேண்டிய படம், வோல்டேஜ் டிராப்பில் தத்தளிக்கிறது.
ஆனாலும் ரஜினி, நாகார்ஜூனா, சௌபின், ரச்சிதா, உபேந்திரா உட்பட்ட பலரும் படத்துக்குக் கொடுத்திருக்கும் உழைப்பு படத்தை ரொம்பவும் போரடிக்காமல் கொண்டு சென்று காப்பாற்றுகிறது.
ஆனால் இதே மாதிரி இன்னொன்று வந்தால் மக்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் - ரஜினியோ கமலோ - யாராக இருந்தாலும் புறம்தள்ளிவிடுவார்கள் என்று தோன்றுகிறது. அழுத்தமான காட்சிகளுக்கான மெனக்கெடல் இல்லாமல் அஞ்சாறு கேரக்டர், ஆறேழு சண்டைகள், ஒன்றிரண்டு ட்விஸ்ட்டுகள் என்று போவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!