2017ல் வெளியான ‘மல்லி ராவா’ [தெ] மூலம் அறிமுகமாகி ‘22ல் வெளியாகி பல மொழிகளில் ஹிட் அடித்த ‘ஜெர்சி’ இயக்குநர் கவுதம் தின்னனூரியின் மூன்றாவது படம், ’கிங்டம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜெர்சியில் சிக்சர் அடித்த தின்னனூரி கிங்டம் மூலம் தனது வெற்றிக்கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டாரா ?
முரட்டு புத்திசாலித்தனம் கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சூரி (விஜய் தேவரகொண்டா). சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போன தனது அண்ணன் சிவாவை (சத்யதேவ்) தேடிக் கண்டுபிடிக்க ஏங்கிக்கொண்டிருக்கிறார். முரட்டு குணம் எட்டிப்பார்க்கும் ஒரு சமயத்தில் தனது உயரதிகாரியை அறைந்ததால் ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகிறார். முதலில் மறுக்கும் அவர், அந்த ஆபரேசனில் ஈடுபட்டால் ஆடிமாத ஆஃபராக அண்ணன் கிடைப்பார் என்று சொல்லப்பட்டவுடன் வீராவேசமாக களம் இறங்குகிறார். அண்ணனைச் சந்தித்து மீட்டாரா, ஆபரேசனின் சேதாரங்களின்றி ஆந்திரா திரும்பினாரா என்று இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது கதை.
வளவளா காட்சிகள் இன்றி முதல் பாதியை டேக் ஆஃப் செய்த வகையில் இயக்குநர் கவுதம் கவனிக்க வைக்கிறார். விஜய் தேவரகொண்டாவுக்காக ஆங்காங்கே சில பில்ட் அப் காட்சிகாள் இருந்தாலும் அவற்றை சுவாரசியமாக சொன்ன வகையில் இயக்குநர் அவர் பக்கத்தில் இருந்துகொண்டே இருந்தார்.
‘என்னய்யா நீ கொடுத்த மருந்துல துத்தி இலை வாசம் வருது’ என்கிற சூர்யா படத்து டயலாக் போலவே சூர்யா நடித்த ‘ரெட்ரோ’, பிரபாஸின் ‘சலார்’ தொடங்கி சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களின் வாடை வருவதை தவிர்க்க முடியவில்லை. அதிலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் கொட்டாவிகளுக்குக் குறைவில்லை.
விஜய் தேவரகொண்டா, அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பு. நாயகி பாக்யஸ்ரீ போஸுக்கு ஒன்றிரண்டு இடங்களில் சிறப்பாக போஸ் கொடுத்தது தாண்டி படத்தில் எந்த வேலையும் இல்லை.
ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் இரடையர்கள் பிரமாதம். நம்ம ஊரில் பலர் காதுகளை பதம் பார்த்த தம்பி அனிருத் பாடல்களிலும் பின்னணி இசையிலும் அதகளம் செய்திருக்கிறார். அண்ணய்யா காரு மீ செவுலு பத்தரமண்டி.
முடிவில் இது என்ன வகையான ஜானர் படம் என்று யோசித்தால், ... சரித்திரக்கதை இருக்கி, பழங்குடியின மக்கள் அக்கறை காட்சிகள் இருக்கி, அண்ணன் தம்பி செண்டிமென்ட் இருக்கி, ஆக்ஷன் இருக்கி, அவ்வளவு ஏன் அண்ணி கொழுந்தனார் பாசமும் இருக்கி...
ஸோ ஒகே ஒக வாட்டி பாக்கலாமண்டி.