இதையேன்பா திட்னாங்க!

இதையேன்பா திட்னாங்க!

தீபாவளிக்கு சில தினங்கள் முன் வெளியானது காந்தாரா என்ற கன்னடப்படம். ஏதோ ஒரு காட்சி என்று திரையிடப்பட்ட இந்தப் படம், படமெடுக்கப்பட்ட விதத்தால் வாய்மொழியாகவே பிரபலமானது. உடனேயே பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

நிம்மதி தேடி அலையும் மன்னர் ஒருவருக்கு காட்டுக்குள் இருக்கும் சாமி சிலை அந்த நிம்மதியைத் தருகிறது. பெரும் நிலப்பகுதியை அம்மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு சிலையைக் கொண்டு வந்துவிடுகிறார் மன்னர். அவரின் வாரிசான அச்யுத்குமார், நிலத்தை மீண்டும் கைப்பற்ற நினைக்கிறார். காட்டுப்பகுதியில் வசிக்கும் ரிஷப் ஷெட்டி மற்றும் கூட்டத்தினரை நல்லவர் போல நடித்து இதைச் செய்ய நினைக்கிறார், அவரை ரிஷப் புரிந்துகொண்டதும், என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்.

அதகளமான முதல் மற்றும் கடைசி நிமிடங்கள் மட்டும்தான் படம். நடுவில் கொஞ்சம் அயரவைத்தாலும், மேக்கிங்கிலும் நடிப்பிலும், இயக்குநர் ரிஷப், நின்று விளையாடுகிறார். படத்தில் அத்தனை கவனமீர்த்த வராஹரூபம் பாடல், கோவிந்த் வசந்தா அங்கமாக இருக்கும் தாய்க்குடம் ப்ரிட்ஜ் பாடலின் அப்பட்டமான தழுவலாக இருந்தது பெரும் வருத்தம்!

தீபாவளிக்கு வந்த சர்தார், நீர் அரசியலைப் பேசும் படம். காவல் ஆய்வாளர் கார்த்தி, உளவுத்துறையின் ஃபைல் ஒன்றைத் திருடிய லைலாவைத் தேடிச் செல்கிறார். அப்போதுதான் தன் தந்தை சர்தார் - அதுவும் கார்த்திதான்! - பற்றிய பல உண்மைகளை அறிகிறார் கார்த்தி. அந்த உண்மைகள் என்ன... படம் சொல்லும் தண்ணீர் அரசியல் என்னவென்பதே படம்.

பரபரவென நகர்கிறது படம். கார்த்தியும் நடிப்பில் கெத்து காட்டுகிறார். சண்டைக்காட்சிகள் படத்தின் பலம். ஆனாலும் பல காட்சிகள் ஜஸ்ட் லைக் தட், நம்மை உசுப்பேற்றிவிட்டுப் போகமட்டுமே செய்திருப்பதாகவே படுகிறது. இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்.

அதே நாளில் வெளியான ப்ரின்ஸ், காமெடி கலாட்டா. காதல் திருமணம் மட்டுமே செய்யச் சொல்லும் சத்யராஜ். பிரிட்டன் பெண் மரியாவைக் காதலிக்கும் சிவகார்த்திகேயன் (எஸ்கே) ஆனால் இடைவேளை ட்விஸ்டில் எந்த நாடுன்னாலும் ஓகே, ஆனால் நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரி இவள், முடியாது என்று சிவப்புக்கொடி காட்டுகிறார் சத்யராஜ். நடுவில் மரியாவின் பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் பிரேம்ஜி. எப்படிச் சமாளிக்கிறார் எஸ்கே?

எஸ்கே காமெடி ஒன்லைனர்கள் கலகல. அதைத்தாண்டி நடனத்தில் இன்னுமின்னும் முன்னேற்றம்.

சர்ப்ரைஸ் நமக்கு மரியாதான். இப்படி ஒரு ஃபாரின் ஹீரோயின் என்றால் மெழுகுபொம்மையாக வந்து போவார்கள். மரியா, நடிப்பு, நடனம் இரண்டிலும் கலக்குகிறார். சத்யராஜிடம் ஸாரி கேட்கும் காட்சி.. ஒரு சோறு பதம்.

உருவ கேலி, இரட்டை அர்த்தம், இன்னொருவரை வலிந்து திட்டி எழுதப்பட்ட நகைச்சுவை என்று எதுவுமில்லாமல் இப்படி காமெடி படம் எடுத்ததற்கே இயக்குநர் அனுதீப்புக்கு சபாஷ். பல இடங்களில் காமெடிகள் சிரிக்க வைத்தாலும் அதே அளவு ஆடியன்ஸ் காமெடியைப் புரிந்து கொள்ளாமல் அமைதி காப்பதை தியேட்டரில் பார்க்க முடிந்தது. ஏனென்பது தெரியவே இல்லை. ஓடிடியில் வந்தபிறகு ‘இதையேன்பா திட்னாங்க ரிவ்யூஸ்ல?‘ என்று பலரும் கேட்கப்போவது மட்டும் கண்கூடாகத்தெரிகிறது.

ஆனால் இந்த தீபாவளி மாதத்தை... தீபாவளி Vibe ஐ சென்ற மாத இறுதியிலேயே ஆரம்பித்து வைத்த ஒரு படத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அதைச் செய்தவர்.. The மணிரத்னம்!

ஆம். கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் ரிலீஸ். எத்தனை பேரின் கனவுப் படம். கல்கியின் எழுத்தில் எழுதப்பட்ட இந்த வரலாற்றுப்புனைவு பல தாசாப்தங்களாக தமிழர்கள் மனதுக்குள்ளேயே படமாக்கப்பட்டுக்கொண்டே இருந்த ஒரு நாவல்.

எவ்வளவு பெரிய சவால் இதைப் படமாக ஆக்குவது.... இந்த நாவலைப் படித்த லட்சணக்கானவர்களுக்கு அவரவருக்கென்று ஒரு வந்தியத்தேவன் உருவம் மனதில் இருக்கும். லட்சக்கணக்கான ஆதித்தகரிகாலனும், நந்தினியும் குந்தவையும் அவர்கள் மனதில் கதாபாத்திர உருவங்களாகப் பதிந்திருக்கும். அவர்களையெல்லாம் திருப்திப்படுத்தவேண்டும் என்பது லேசுப்பட்ட காரியமா என்ன!

ஆனால் அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார் மணி. ஐந்து பாகங்கள் கொண்ட - எக்கச்சக்க கிளைக்கதைகள் கொண்ட - ஒரு நாவலை இரண்டு பாகங்களாக படமாக எடுப்பதென்ற சவாலில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். விக்ரம், பொன்னியின் செல்வன் என்று திரையங்கங்கள் குடும்பத்தோடு அத்தனை உற்சாகமாக வந்து செல்வது தமிழ் திரையுலகுக்கு நற்செய்தியே.

கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் என்று நட்சத்திரப்பட்டாளங்களின் பெயர் எழுதினாலே ஒரு பத்திக்கு வரும். அத்தனை பேரும் பொருத்தமாக நடித்துக்கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான், ரவி வர்மன், தோட்டாதரணி, பிருந்தா என்று டெக்னீஷியன்கள் கலக்க நல்லதொரு அனுபவமாக இருந்தது பொன்னியின் செல்வன். திரைக்கதையில் உதவிய குமரவேலும், வசனத்தில் ஜெயமோகனும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை அளித்திருந்தனர். பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தமிழ் திரையுலகத்துக்கொரு நல்வரவு.

ஆக.. செப்டம்பரில் ரிலீஸாகி தீபாவளிப்படங்கள் இரண்டின் வரவுக்குப் பின்னும் நின்று விளையாடிக்கொண்டிருக்கிறான் பொன்னியின் செல்வன்!

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com