எகிறி அடிக்கும் எயினர்கள்!

எகிறி அடிக்கும் எயினர்கள்!

மார்ச் இறுதி வாரத்தில் வெளியான இரண்டு படங்கள் முக்கியமானவை. ஒன்று பத்துதல. இன்னொன்று விடுதலை பாகம் -1.

ஒபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பத்துதல, சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கன்னட ‘மஃப்டி'யின் மறுஆக்கம் இது.

அரசியல் கேங்ஸ்டர் படம். முதல்வர் காணாமல் போக அந்த இடத்தில் மணல் மாஃபியாவான சிம்பு தேர்வு செய்கிற ஆள் அமர்கிறார். கவுதம் கார்த்திக், சிம்புவின் கூட்டத்தில் அடியாளாக ஊடுருவுகிறார். முதல்வர் என்ன ஆனார், சிம்புவின் திட்டங்கள் பலித்ததா என்பதே கதை.

ஸ்டைலிஷான மேக்கிங், நிறைவான நடிகர்கள், படத்தின் ஜானருக்கு ஏற்ற பின்னணி இசை - பாடல்கள் என்று பலவும் ஒன்றாகக் கலந்திருந்தும். நச்சென்று சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் இல்லாததால் டல்லடிக்கிறது படம்.

இன்னொரு தலையான விடுதலை, வெற்றிமாறன் இயக்கம். ஒரு நக்சல் இயக்கப் போராளியை  கைது செய்து ஜீப்பில் கொண்டு போகும்போது, அந்தப் போராளிக்கும் ஒரு கான்ஸ்டபிளுக்கும் நடைபெறும் உரையாடல்தான் ஜெயமோகனின் ‘துணைவன்' கதை. அந்தக் கதையைப் படமாக்க ஆரம்பித்து, விஜய் சேதுபதி படத்தில் வந்ததும், படம் வேறு வடிவம் எடுக்க, இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிற படம் விடுதலை. அதன் முதல் பாகம் மார்ச் இறுதி வாரத்தில் வெளிவந்தது.

அருமபுரி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் காவலர் முகாமில் ஜீப் ஓட்டுநராகப் பணிபுரிய வருகிறார் சூரி. அந்தப் பகுதியில் கனிம வள சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் படை' என்ற அமைப்பினர் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டக்குழுத் தலைவரான விஜய் சேதுபதியை நெருங்கும் முயற்சியில் இருக்கிறது காவல்துறை.

போலீஸ் பிடித்துவந்து விசாரிக்கும் குழுவில் தன் காதலியும் இருக்க, அவரையும் காக்கும்பொருட்டு மேலதிகாரிகளிடம் முறையிட்டு விஜய் சேதுபதியைப் பிடிக்க விரைகிறார் சூரி. அவர் பிடிப்பதோடு முதல் பாகம் முற்றுப்பெறுகிறது.

சூரிக்கு வாழ்நாளுக்குமான படம். படம் ஆரம்பம் முதலே காமெடி நடிகர் சூரியை மனது மறந்துவிடுகிறது. குமரேசனாகவே வாழ்ந்திருக்கிறார். பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் வாசுதேவ் என்று அனைவரும் அவரவர் பணியை செம்மையாகச் செய்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி பற்றி குறிப்பிடவேண்டியதே இல்லை. படத்தின்  பெரும்பலமாக இசைஞானி இளையராஜாவும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும், கலை இயக்குநர் ஜாக்கியும் பங்காற்றியிருக்கிறார்கள். வெற்றிமாறன் இந்தமுறையும் ஏமாற்றவில்லை!

ஏப்ரலில் வந்த படங்களில், ஆகஸ்ட் 16, 1947 முதலில்.

பிரிட்டிஷ் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்ட கிராமம் ஒன்றிற்கு சுதந்திரம் கிடைத்ததையே  சொல்லாமல் தவிர்க்கிறார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். நடுவே கௌதம் கார்த்திக்கின் காதல். ஆர்ட் டைரக்‌ஷன், புகழ், கௌதம் உள்ளிட்ட பலரின் உழைப்பு என்று பாராட்ட நிறைய உண்டு. அடிமை விலங்குகள் அறுக்கப்பட்ட வரலாறு என்று கெத்தாகக் கூறலாம். ஆனால் சினிமாத்தனம், வலுவற்ற காட்சிகளால் இயக்குநரின் நல்நோக்கம் நிறைவேறாமல் தடுமாறுகிறது. புதுமுக இயக்குநர் என்.எஸ்.பொன்குமரன், நிச்சயம் அடுத்த படைப்பில் குறைகளை களைவார் என்று நம்பலாம்.

 தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ருத்ரன். அப்பாவின் கடனை  அடைக்க வெளிநாடு செல்லும் ஹீரோ. ரவுடிகளால் தாக்குதலுக்குள்ளாகும் ஹீரோ குடும்பம். ஹீரோவின் பழிவாங்கல் என்ற அரதப் பழைய மசாலா என்பதைத் தவிர  சொல்ல ஒன்றுமே இல்லை. ராகவா லாரன்ஸ் தானாக இப்படிப்பட்ட கதைகளில்தான் நடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது ஏனென்பதுதான் புரியவே இல்லை.

அடுத்து வெளியான திருவின் குரல், தெய்வமச்சான்,  சொப்பன சுந்தரி மூன்று படமுமே  சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதால் மூன்றாவது வாரத்தில் வந்த யாத்திசை படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

ஏழாம் நூற்றாண்டுக் கதை. பாண்டிய அரசனால் பாலை நிலத்துக்கு விரட்டப்பட்ட தொல்குடிகளான எயினர் குழுவினர், பின்னர் சோழர்கள் உதவியுடன் பாண்டிய வம்சத்தை வெல்ல முயலும் கதையே யாத்திசை. வென்றார்களா, பாண்டிய அரசு வீழந்ததா என்பதை நல்லதொரு திரையனுபவம் மூலம் நமக்குத் தருகிறார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.

சவாலான கதை. சவாலான காட்சியமைப்புகள். நிறைவாகவே செய்திருக்கிறார்கள். முக்கியமாக இனக்குழுக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் உடைகள், நிலப்பரப்பு என்று பலவற்றையும்  சிரத்தையோடு பதிவு செய்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பின்னாலான உழைப்புக்கு மொத்தக்குழுவும் பாராட்டுக்குரியது. கிராபிக்ஸில் சிறு குறைகள் இருந்தாலும், நிச்சயம் அதையும் தாண்டி படம் கவனிக்க வைக்கிற படைப்பாக மிளிர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்தக்குழுவுக்கும் பாராட்டுகள்!

மே, 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com