கலகலவென்று போனது நவம்பர்!

கலகலவென்று போனது நவம்பர்!

டைம் டேபிள் வைத்து எழுதவேண்டிய அளவுக்கு நவம்பரில் நிறைய படங்கள் ரிலீஸாகின. விக்ரமும், பொன்னியின் செல்வனும் கொடுத்த தெம்பில் தமிழ்த் திரையுலகம் உற்சாகமானது நவம்பரில் தெரிந்தது.

சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, ரைசா, யோகி பாபு என்று - இந்த மாசம் விமர்சனத்துக்கு நாலு பக்கம் தரமுடியுமா ஆசிரியரே, சுந்தர் சி. படக்குழு பேரை எழுதணும், என்று கேட்கும் அளவுக்கு - நட்சத்திரப் பட்டாளம்.

ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் அண்ணன் தம்பிகள். இந்தப் பக்கம் அம்ரிதா, மாளவிகா, ரைசா என்று மூவர். இவர்களில் ஒருவரோடு நிச்சயம் ஆனவரை இன்னொருவர் காதலிக்கிறார், வேறொருவருக்கு ஏற்கெனவே ஒரு காதல், ஒருவருக்கு இவர்களில் ஒருவரோடு ஏற்கெனவே உறவு என்று ஒரு பத்தியில் விளக்க சிரமப்படுகிற அளவுக் காதல் குழப்பங்கள். இவற்றை திரைக்கதை மூலம் நேர்த்தியாகக் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

இத்தனை கதாபாத்திரங்கள் இருந்தும், நச்சென்று மனதில் ஒட்டுகிற அல்லது பிரமிக்கவைக்கிற அல்லது சிரிக்க வைக்கிற என்று ஒரு காட்சியும் இல்லாதது படத்தை ரசிக்கவிடாமல் செய்கிறது. சுந்தர்.சி-யின் ஃபேவரைட் ஏரியாவான காமெடியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பதும் வருத்தம். அடுத்து, நித்தம் ஒரு வானம். திருமணம் நின்றதால் மன அழுத் தத்துக்குள்ளாகும் அசோக் செல்வனுக்கு இரண்டு கதைகளை வாசிக்கத் தருகிறார்  மருத்துவர் அபிராமி. அதன் இறுதிப்பக்கங்கள் இல்லாததால், அந்தக் கதை மாந்தர்கள் இருக்குமிடத்தைச் தேடிச்செல்கிறார் அசோக் செல்வன். அவர் பயணம் நமக்கும் சொல்லும் கதைதான், நித்தம் ஒரு வானம்.

டிராவல் சினிமாக்கள் எனும் ஜானரில் முக்கியமானதொரு படைப்பைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக். அசோக் செல்வன் படிக்கும் கதைகளில் வரும் ஜோடிகளில் அசோக் செல்வன்&- அபர்ணா பாலமுரளி ஃபைவ் ஸ்டார் வாங்குகிறார்கள். அர்ஜுன், வீரா, பிரபா என்று மூன்று வித கதாபாத்திரத்தில் அசோக், நடிப்பில் பாராட்டுப் பெறுகிறார்.

அழுத்தமான திரைக்கதை மூலம் நல்லதொரு ஃபீல் குட் படமாக மாறுகிறது நித்தம் ஒரு வானம்.  

அடுத்து லவ் டுடே. தன்னுடைய குறும்படத்தை, பட்டி டிங்கரிங் பார்த்து திரைப்படமாக்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

காதலுக்குப் பச்சைக்கொடி காட்டச்சொல்லும் மகள் இவானாவிடம், காதலனை அழைத்துவரச் சொல்கிறார் சத்யராஜ். வரும் பிரதீப் ரங்கநாதனிடம் ஒரு கண்டிஷன் வைக்கிறார். இருவரும் தங்கள் செல்போனை மாற்றி ஒருநாள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அது. அதனால் வரும் விளைவுகளே படம். நச்சென்ற ஒன்லைனை அøசதவிட நச்சென்ற திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் படமாக்கி 2கே கிட்ஸிடம் வைரல் ஸ்டாராகியிருக்கிறார் பிரதீப்.

அனல் மேலே பனித்துளி, கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆன்ட்ரியா நடிப்பில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நாயகி, தன் மன உறுதி மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தரும் கதைக்களம். இந்த மாதம் வந்தவற்றில் முக்கியமான கருவைக் கொண்ட படம் இதுதான். வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், அதை எப்படி  எதிர்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். ஆண்ட்ரியாவின் அட்டகாசமான நடிப்புக்கு கைகொடுக்கின்றன வசனங்கள். ஆதவ் கண்ணதாசனும் தன் பங்குக்கு படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.  அனல் மேலே பனித்துளி நிச்சயம்  இன்னும் பேசப்படவேண்டிய படைப்பு.

இந்த மாதம் வந்த இன்னொரு முக்கியமான படம் கலகத்தலைவன். உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படம், கார்ப்பரேட் அத்துமீறல்களால் நடக்கும் பட்டர்ஃப்ளை எபெக்ட் பாதிப்புகளைப் பேசுகிறது. கார்ப்பரேட் ரகசியங்களைத் திருடி விற்கும் கும்பலை இயக்குவது யார் என்று கண்டுபிடிக்க வஜ்ரா என்ற நிறுவனத்தால் நியமிக்கப்படும் நபராக ஆரவ். அவர், ஒவ்வொரு புள்ளியாகக் கோத்து உதயநிதியை நெருங்குகிறார். ஸ்டண்ட் காட்சிகள் படத்தின் பெரும் பலம். விறுவிறுப்பான அந்த ஸ்டேஷன் காட்சியும். ஆனால் ரொமாண்டிக் காட்சிகள் ஜவ்வாக இழுப்பது பெரும் சோதனை.

ஏஜென்ட் கண்ணாயிரம், காரி, பட்டத்து அரசன் என்று கடைசி வாரத்தில் வந்த படங்களில் பட்டத்து அரசன்... கொஞ்சம் ஏமாற்றம்தான். ஏஜென்ட் கண்ணாயிரம், ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா தெலுங்குப் படத்தின் ரீமேக். அப்படியே எடுத்திருந்தால் கொஞ்சம் ஹிட்டாகியிருக்கலாம். எக்ஸ்ட்ரா செண்டிமெண்ட்சேர்த்ததுதான் கொஞ்சம் படத்தை ஸ்லோவாகிவிட்டது.

மூன்றில் காரி, கொஞ்சம் சர்ப்ரைஸாக இருந்தது. இரண்டு ஊர்களுக்குப் பொதுவான கோயிலின் நிர்வாகப் பொறுப்பு எந்த ஊருக்கு என்பதை ஜல்லிக்கட்டு நடத்தி முடிவு செய்ய முடிவெடுக்கிறார்கள். அதற்காக மீண்டும் ஊருக்குள் வருகிறார் சசிகுமார். என்ன ஆகிறது என்பதே படம்.

சுவாரஸ்யமான ஒன்லைன். ஆனால் ஒரே படத்தில் நிறைய கருத்துகளைக் கையாள நினைத்ததுதான் படத்தை கொஞ்சம் நீளமாக்கியதோடு, சோர்வும் அடையச் செய்கிறது.

ஏகப்பட்ட படங்கள் என்றாலும், கொஞ்சம் கலகலவென்று போனது நவம்பர். இந்த டிசம்பர் எப்படி இருக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com