சிலிர்ப்பைக்கொடுத்த ஜிகர்தண்டா

சிலிர்ப்பைக்கொடுத்த ஜிகர்தண்டா
Published on

ஜப்பான், ஜோக்கர், குக்கூ இயக்குநர் ராஜூ முருகனுடன் கார்த்தி கைகோக்கும் படம் என்பதால் இது ராஜூ முருகன் படத்தில் கார்த்தி நடிக்கிறாரா, கார்த்தி படத்தை ராஜூ முருகன் இயக்குகிறாரா என்ற பேச்சு எழுந்தது. டிரெய்லரிலேயே  'இல்லப்பா.. இது ஒரு ஜாலி எண்டர்டெய்னர்தான்' என்று சொல்ல்லியிருந்தார்கள்.

திருச்சி பிரபல நகைக்கடையில் நடந்த நகைத்திருட்டுதான் கதைக்களம். கோவையில் ஒரு நகைக்கடைத் திருட்டு. செய்தவர் ஜப்பான் (கார்த்தி) என சந்தேகிக்கிறது போலீஸ். அவரைத் தேடுகிறது. அவர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓட.. கடைசியில் குற்றவாளி யார், ஜப்பானுக்கு என்ன ஆச்சு என்று நகர்கிறது கதை.

கதையாக ஓகே. ஆனால் படமாக பெரும் சொதப்பலாக வந்திருக்கிறது. போலீஸையே கதி கலங்க வைக்கிற திருடனான ஜப்பான், அப்படி என்ன செய்து கதி கலங்க வைத்தார் என்பதைக் காட்சியாக உணரவைக்கத் தவறியிருக்கிறார்கள். வசனங்கள் பெரும் ப்ளஸ். ஆனால் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் இல்லாததாலும், ஏனோ தானோ காட்சிகளாலும் படம் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

அதே நாளில் வெளியான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. ஜிகிர்தண்டா போலவே ஒரு கதை. 

போலீஸ் வேலை கிடைக்கும் நேரத்தில் ஒரு கொலைவழக்கில் சிக்கிக்கொள்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஜெயிலில் இருக்கும் அவருக்கு, காவல்துறை மூலமாகவே ஒரு ரகசிய அசைன்மெண்ட் வருகிறது. அது ராகவா லாரன்ஸைக் கொலை செய்யும் ப்ராஜக்ட்.

சினிமா ஆசை கொண்ட ராகவா லாரன்ஸை, தானொரு சினிமா இயக்குநர் என்று கூறிக்கொண்டு நெருங்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. அவரைக் கொல்லும் முயற்சியை நெருங்குகிற சமயத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. அந்த சினிமா எனும் ஆயுதத்தை தானும் ரசிக்க, எஸ்.ஜே.சூர்யா என்ன செய்தார், லாரன்ஸுக்கு என்ன ஆனது என்று சொல்லி முடிகிறது கதை.

கார்த்திக் சுப்பராஜ்... அருமையான கதை. திரைக்கதை இயக்கம் மூலம் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தொட்டதெல்லாம் வெற்றி என்பதாக நகர்கிறது எஸ்.ஜே.சூர்யாவின் நடிகர் பயணம். இதிலும் தன் பங்குக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால் சர்ப்ரைஸ் ராகவா லாரன்ஸ். நடிப்பில் மிரட்டியிருக்கிறார். போலவே ராகவாவின் மனைவியாக வரும் நிமிஷா சஜயனும் என்னவொரு நடிப்பு என பிரமிக்க வைக்கிறார்.

இளவரசு, சத்யன், ஷைன் டாம் ஜாக்கோ, நவீன் சந்திரா, முதல்வராக வரும் கபிலா வேணு என்று அனைவருமே தனித்தனியாக பாராட்டலாம் எனுமளவு சிறப்பான பங்களிப்பு. சந்தோஷ் நாராயணனின் இசை... அட்டகாசமான ப்ளஸ்!

இந்த இரண்டு படங்களைத் தவிர பிற படங்கள் பெரிதாக கவராத நிலையில் கடைசி வாரத்தில் வந்த ‘ஜோ' கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா நடிப்பில் வந்திருக்கிறது ‘ஜோ'.

கல்லூரிக் காதல் திருமணமாகக் கைகூடாத நிலையில் வேறொருவரை மணம் செய்துகொள்கிறார் ரியோ. மனைவியோ, வேண்டா வெறுப்பாக கைப்பிடித்ததை அறிகிறார். இவர்களின் மனப்போராட்டத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம். எஸ், நல்ல சில காட்சிகள் மூலமும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமும் படமாகக் கொடுத்திருக்கிறார். ஆங்காங்கே திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டாலும் இளமைப் பட்டாளம்  மூலமும் அளவான பின்னணி இசை, சில கலகலப்பான தருணங்கள் இவை மூலம் ஒரு நல்ல படைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சமே கொஞ்சம் முயன்றிருந்தால் இன்னும் அதிகமாகப் பேசக்கூடிய படமாக இருந்திருக்கும். ஆனாலும் ஏமாற்றவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com