
கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த மாதம், கடைசி வாரத்தில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’. ரங்கூனை அடுத்து, இந்தப் படமும் கதைத்தேர்வில் பாஸாகிறார் கௌதம் கார்த்திக். காரணம் அனுபவ இயக்குநர் ஆர். கண்ணன். பல காட்சிகளில் இயக்குநரின் அனுபவம், வசனங்களின் மூலம் பளிச்சிடுகிறது. வழக்கமாக வந்துபோகும் கதாநாயகியாக அல்லாமல், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தைக் கதையோடு ஒட்டிப் பயணப்பட வைத்ததற்கும் இயக்குநருக்கு சபாஷ்.
மனிதவளத்துறை அமைச்சரான சூப்பர் சுப்பராயன் வீட்டில் சிசிடிவி கேமரா மாட்டிய காசு ரூபாய் 23 ஆயிரத்தை வசூலிக்கப் படாதபாடுபடுகிறார் கௌதம் கார்த்திக். ஒரு கட்டத்தில் அமைச்சர், கல்லூரிகள் விவகாரத்தில் பெரும் ஊழல் செய்வதைக் கண்டுபிடித்து அதை அம்பலப்படுத்துகிறார். யாரால் இந்த விஷயங்கள் வெளியில் லீக் ஆனது என்று குழம்பும் அமைச்சர் வட்டாரம் ஒருகட்டத்தில் கௌதம் கார்த்திக்கை எப்படி நெருங்குகிறார்கள் என்பதைப் பரபர திரைக் கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் பெரிய பலம் ஆர்.ஜே.பாலாஜி. முதல்பாதி முழுவதையும் தன் கலகலப்பால் தாங்கிப்பிடிக்கிறார். கௌதம் கார்த்திக், பாலாஜிக்கு உண்டான ஸ்பேஸ் கொடுத்து நடித்திருப்பதற்குப் பாராட்டுகள். கடைசிக் காட்சிகளில் கண்களில் தெரியும் ஏமாற்றமும், கோபமும் நடிப்பின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஜுலை முதல் வாரம், ஜி.எஸ்.டி வரிக்கான... இல்லையில்லை... கேளிக்கை வரிக்கான தமிழ் சினிமாத்துறை வேலை நிறுத்தத்தால், எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. மேலே சொன்ன, ’இவன் தந்திரன்’ இன்னும் நன்றாக ஓடியிருக்க வேண்டிய படம் என்று தோன்றியது.
இரண்டாவது வாரம் வெளியான படம் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. ஆட்டோகிராஃப் சேரன், காதலிகள் எல்லாரையும் விளையாட்டுக்குக் காதலித்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு ப்ளேபாய் படம் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. உடன் வெளியான இன்னொரு படமான ‘பண்டிகை’ பட்டாசு!
அறிமுக இயக்குநர் ஃபெரோஸ், மிக அழுத்தமான ஒரு களத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதற்குப் பின்னால் நிறைய உழைத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. பணமெல்லாம் ரெண்டாம் பட்சம். ‘நல்ல மரியாதையான வாழ்க்கை முக்கியம்’ என்றிருக்கும் நாயகன் கிருஷ்ணா.
இருக்கும் பணத்தை பெட்டிங்கில் போட்டு, இழந்து பணத்தேவையில் இருக்கும் சரவணன். கிருஷ்ணாவின் ஃபைட்டிங் ஸ்ப்ரிட் பார்த்து பண்டிகையில் கலந்து கொள்ளச் சொல்கிறார் சரவணன். என்ன அது பண்டிகை?
இரண்டு பேர் நேருக்கு நேர் மல்லுக்கட்டும் விளையாட்டே ‘பண்டிகை’. பார்வையாளர்கள் மாறி மாறி ‘இவர்.. அவர்’ என்று பணம் கட்டும் பெட்டிங் கேம். இந்த சுவாரஸ்ய ஒன்லைனை வைத்துக்கொண்டு பண்டிகை ஸ்வீட்டைப் பரிமாறியிருக்கிறார் ஃபெரோஸ். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் டீட்டெய்லிங்கும் அபாரம். நிதின் சத்யா, மதுசூதன்ராவ் என்று செம காஸ்டிங். எல்லா விஷயங்களும் லிங்க் கொடுத்து, நல்ல படம் பார்த்த திருப்தியை அளிக்கிறார். விக்ரமின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.
பணத்துக்குப் பின்னால் அலையும் மனிதர்களின் முயற்சிகளும், சூழ்ச்சிகளும் மாறி மாறி ட்விஸ்ட் அடிப்பதில் நமக்குக் கிடைப்பது அட்டகாச இண்டர்வெல் ப்ளாக். அந்த க்ளைமாக்ஸ், அதற்கு ஒரு படி மேல்.
21ம் தேதி மீசைய முறுக்கிக் கொண்டு வந்தார் ஹிப்ஹாப் ஆதி. ‘சச்சின், தோனி என்று பயோபிக் வருதே.. நம்மளுதையும் எடுப்போம்.. என்ன இப்ப!’ என்று நினைத்திருப்பார் போல. அதற்கு ‘நீ என்னத்த சாதிச்சுட்டனு அத படமா எடுக் கற?’ என்று கேட்காமல் ஓகே சொன்னதற்கே சுந்தர். சியைப் பாராட்டலாம். முழுக்க முழுக்க கல்லூரிக்கூட்டத்தின் அப்ளாஸில் பயணிக்கிறது படம்.
இசை ஆர்வம் கொண்ட ஆதி, அப்பாவின் ‘படிச் சுட்டு வேலைக்குப் போற வழியப் பாரு’களைத் தாண்டி, அவர் சப்போர்ட்டுடனே எப்படி ஜெயித்து ‘ஆம்பள’ என்ற அருங்காவியத்துக்கு இசையமைக்கும் சாதனையைச் செய்தார் என்பதுதான் படம்.
சான்ஸ் கொடுத்த சுந்தர் சி, விஷாலைக் கலாய்த்து முடித்திருக்கிறார் படத்தை.
ஒரு காலேஜ் கேம்பஸுக்குள் போய் வந்த ஃபீலை படம் முழுவதும் தந்திருக்கிறார். அந்த சுதாகர் கதாபாத்திரமும், தம்பியாய் வரும் ஆனந்தும் படத்தின் பெரிய பெரிய ப்ளஸ். சாதாரணன் ஒரு இசையமைப்பாளராகிறான் என்ற ஒன்லைனுக்கு பாடல்களெல்லாம் தெறிக்க விடவேண்டாமா? ம்ஹும் அப்படி ஏதும் இல்லை என்பது ஒரு குறை.
கூட்டம் ஓகே.. படம் ஹிட். ஆனால் அடுத்த படம் பெட்டரா பண்ணுங்க ஆதி.. ப்ளீஸ்.
அந்த வாரமே வந்த இன்னொரு படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் - காயத்ரி இயக்குநர்களுக்கு பெரிய சைஸ் ரோஜாமாலை. தாதாவைப் பிடிக்கும் என்கவுண்ட்டர் போலீஸ் கதையை விக்கிரமாதித்தன் - வேதாளத்துக்குள் பொருத்தி மூன்று உப கதைகளுடன் அதைத் திரைக்கதையாக அமைத்து, வசனம், இசை, கேமரா, நடிகர்கள் என்று எல்லாவற்றிற்கும் சிறந்த அணியை செலக்ட் செய்து ‘விலையேற்றத்துக்கு பிறகு தியேட்டர்களுக்கு ஆள் வருவாங்களா?’ என்ற கவலையில் இருந்தவர்கள் வயிற்றில் சோதனை செய்யப்பட்ட ஆவின் பாலை வார்த்திருகிறார்கள். வெல்டன்.
படத்தின் ஆரம்பத்தில் அத்தனை நீள ஷாட்டில் நடித்து அசத்துவதில் தொடங்குகிறது மாதவனின் பெர்ஃபார்மென்ஸ். வடையைக் கையில் பிடித்தபடி ‘தன னன னன னா.. தன னன னன னா’ என்று சி.எஸ்.சாம்-ன் பின்னணி இசை கலக்க ஆரம்பிக்கிறது விஜய்சேதுபதியின் பெர்ஃபார்மென்ஸ். இந்த இரு இணைகளையும் வைத்து, இயக்குநர் இணை விருந்து படைத்திருக்கிறார்கள். என்கவுண்டர் போலீஸ் மாதவனிடம் மாட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி ஒவ்வொரு முறையும் ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையின் முடிச்சை மாதவன் அவிழ்க்கும்போது, அவருக்கு வேறு சில கேள்விகளும் அதற்கான பதில்களும் கிடைக்கின்றன. இப்படி ஒரு
சிக்கலான கதையை தெளிவான திரைக்கதையில் வழங்கியிருக்கிறார்கள்.
மணிகண்டனின் வசனங்கள், சிஎஸ்.சாம்-ன் இசை என்று படத்திற்கு பலமாக பலதும் அமைந்திருக்கின்றன. இரண்டாம் முறை பார்க்கும்போதும் சலிக்காததற்கு படத்தின் டீட்டெய்லிங்தான் காரணம் என்பேன்.
ஆகஸ்ட், 2017.