மறுபடியும் அந்தப் பக்கமா?

மறுபடியும் அந்தப் பக்கமா?
Published on

மா நாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வருகிற படம் என்பதால் மன்மத லீலைக்கு ‘மெலிதான' எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றாற்போல ஓபனிங்கும் இருந்தது.

திருமணம் தாண்டிய உறவு என்பதுதான் ஒன்லைன். கதையாக விளக்க ஒன்றுமில்லை. இந்த மாதிரிக் கதையில் அறம் என்ற ஒன்றிற்கு இடமில்லை, பெண்கள்தான் பகடைக்காயாகக் காட்டப்படுவார்கள் என்பது விதி. எனவே அதைக் கோபத்துடன் கடந்து மற்றவற்றைப் பேசலாம்.

மேக்கிங்கும், கதாபாத்திரத் தேர்வும் சபாஷ் சொல்ல வைக்கின்றன. படத்தின் ஹைலைட் இசை. பிரேம்ஜி அமரன் பின்னணி இசையில் பிரமிக்க வைக்கிறார். முக்கியமாக இடைவேளையின்போது அவரது இசையின் தாக்கம், மீண்டும் படம் ஆரம்பிக்கும் வரை மூளைக்குள்ளேயே சுற்றுகிறது. அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே இருவருமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.

அதே நாளில் வெளியான இன்னொரு படம் செல்ஃபி. ஜி.வி.பிரகாஷ்குமார், கௌதம் வாசுதேவ் இருவரும் நடிக்க வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் செல்ஃபி.

கல்லூரி அட்மிஷன் மாஃபியா என்பதுதான் கதைக்களம். களமாக இது புதிது. அதன்பின்னே நடக்கும் மூளைச் சலவைகள், பணப் பரிமாற்றங்கள் என்று விரிவாகப் பேசியிருக்கிறது படம். ஜி.வி.பிரகாஷ்குமார் - வித்யா பிரதீப்புக்கு இடையேயான காட்சிகள்... இயக்குநரின் தனித்தன்மையைக் காட்டுகிறது. க்ளைமாக்ஸ் பார்க்கும்போது அவசர கதியில் முடித்துவிட்டார்களோ என்று நினைக்க வைக்கிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும்.

ஹாட்ஸ்டாரில் சென்ற மாதம் வெளியானது டாணாக்காரன். ஜெய்பீம் திரைப்படத்தில் சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியாக நடித்திருந்த தமிழின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. காவலர்களின் வன்முறைக்கும், அவர்கள் பொதுமக்களை அடிமை மனோபாவத்துடனேயே அணுகுவதற்கும் காரணம், அவர்களுக்கு அளிக்கப்படும் இந்த மாதிரி பயிற்சிகள்தான் என்று வெட்டவெளிச்சமாகக் காட்டியிருக்கிறது டாணாக்காரன். இதுவரை இந்தக் களத்தை விரிவாக எந்தப் படமும் தொட்டதில்லை என்பதாலேயே பாராட்டுப் பெறுகிறது டாணாக்காரன். விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர், பிரகதீஸ்வரன், போஸ் வெங்கட் என்று ஒவ்வொருவரும் மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்க படம் நிறைவான படைப்பாய் வெளிவந்திருக்கிறது. படத்தின் 90% ஒரே லொகேஷன்தான் என்றாலும் சொல்லப்படும் விஷயமும் சொல்லப்பட்ட விதமும் கொஞ்சமும் சலிப்பை ஏற்படுத்தா வண்ணம் மனதைத் தொடுகிறது.

இந்தக் களேபரங்களுக்கெல்லாம் நடுவில் ரிலீஸானது விஜய் நடிப்ப்பில் நெல்சனின் இயக்கத்தில் பீஸ்ட். ப்ரமோஷனிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு உட்படுத்திய படம், படமாக புஸ்வாணமாகிப் போனதுதான் சோதனை.

பிரபல வணிக வளாகம் ஒன்றை ஹைஜாக் செய்யும் வில்லன் கும்பல்; உள்ளேயே இருக்கிற ஹீரோ அதை மீட்கிறார் என்பதுதான் கதை. சரி, ஆனால் இதில் அரதப் பழைய தீவிரவாதியெல்லாம் வந்தால் மக்கள் ஒத்துக்கொள்வார்களா டைரக்டரே? ப்ரமோஷன், பாடல்கள் என்று அத்தனை சுவாரஸ்யப்படுத்திவிட்டு கதையில் சறுக்கியது ஏன் சார்! விஜய் திரை முழுவதும் ஆக்ரமித்து ஹார்ட்டீன் விட வைக்கிறார். படத்தை ரசிக்க வைப்பது அவர் மட்டுமே!

பீஸ்டுக்கு அடுத்தநாளே வந்தது கேஜிஎஃப் 2! டப்பிங்தான் என்றாலும் திரையரங்குகள் தீப்பிடிக்காத குறையாக பற்றிக்கொண்டன. குடும்பம் குடும்பமான மாஸ் மசாலாவைத் தேடி வந்து குவிந்தனர். முதலாம் பாகத்தில் கே ஜி எஃப்-ஐக் கைப்பற்றிய ராக்கி, அதை வைத்துக்கொண்டு என்ன செய்கிறான் என்று பரபரக்கவைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு  காட்சிக்கும் யோசித்து ‘ரசிகனைப் புல்லரிக்க வைப்பது ஒன்றே குறிக்கோள்‘ என்று வசனமும், காட்சியும் அமைத்திருக்கிறார்கள். ஹீரோ யஷ்ஷும் அதை செவ்வனே செய்கிறார்!

உடனே இதுதான் பான் இண்டியா படம் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ‘இது மாதிரி தமிழ்ல இல்லையே‘ என்றெல்லாம் பேச்சுகள் வேறு. ஐயா... ஹீரோயிசத்தை விடுத்து நல்ல நல்ல கதைகளாக எடுங்களேன் என்று ஒரு பக்கம் இப்போதுதான் மக்களே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் அந்தப் பக்கம் இழுத்துக்கொண்டு போய் விடாதீர்கள் ஐயா!

மே. 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com