குருமூர்த்தி - ஜெயக்குமார் 
செய்திகள்

‘குருமூர்த்தி வாயை மூடிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால்…’ - ஜெயக்குமார் எச்சரிக்கை!

Staff Writer

“குருமூர்த்தி என்னிடம் பலமுறை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதற்கு ஆளாகக் கூடாது என்றால் அவர் வாயை அடக்க வேண்டும்.” என்று அதிமுகவின் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய அந்த இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, “திமுகவைத் தோற்கடிக்கவேண்டும் என்ற உறுதி எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோல் இப்போது அதிமுக தலைமைக்கு இல்லை.” என பேசியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

"எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாத அழியாத புகழுக்கு சொந்தக்காரர்கள்.

குருமூர்த்தி என்னிடம் பலமுறை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதற்கு ஆளாகக் கூடாது என்றால் வாயை அடக்க வேண்டும். பாஜக கூட்டணி வைக்காதது கட்சி எடுத்த முடிவு.

கட்சி முடிவு எடுத்த பிறகு இவர் என்ன பேசுவது? இவர் பேச வேண்டிய அவசியமே கிடையாது. வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கி கட்டிக் கொள்ள நேரிடும்.” என்றார்.