தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை என்று வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து வழக்குரைஞர்களிடம் நேற்று கேட்டுக்கொண்டிருந்தனர்
அப்போது தலைமை நீதிபதி பி.ஆா். கவாயை நோக்கி வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த பாதுகாவலர்கள் இந்தத் தாக்குதல் முயற்சியைத் தடுத்ததோடு, காலணியை வீச முயன்ற தில்லியின் மயூா் விகாரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் (71) என்பவரை உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனா். அப்போது, ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று முழக்கத்தை எழுப்பியபடி அந்த வழக்குரைஞர் சென்றார்.
அவர் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடர்பாக நீதிபதி கவாய் கூறிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் நோக்கில் காலணியை வீச முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்ததாவது:
”காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சரியானதைச் செய்துள்ளேன். இதனால் சிறைக்குச் செல்வேன், அங்கு துன்பப்படுவேன் என அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான் இதைச் செய்தேன். ” எனத் தெரிவித்தார்.
வழக்குரைஞர் ராகேஷ் கிஷோரிடம் உச்சநீதிமன்ற வளாகத்திலேயே போலீஸாா் சுமாா் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். முறைப்படி அவா் மீது புகாா் அளிக்கப்படாததையடுத்து, பிற்பகல் இரண்டு மணியளவில் அவரை அனுப்பினர்.
தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோரின் உரிமத்தை ரத்து செய்து இந்திய வழக்குரைஞர் கவுன்சில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.