மூளை உண்ணும் அமீபா பாதிப்பு காரணமாக கேரளத்தில் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்த துயரம் நேர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் புதிய தொற்று நோயைப் போல மூளை உண்ணும் அமீபா நோய் பரவிவருகிறது. இந்த ஆண்டு இதுவரை இந்தக் கொடிய உயிர்க்கொல்லி நோயால் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரள சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த நோயால் இரண்டு பேர் மட்டுமே இறந்துபோனார்கள் என்றும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு கூறியிருந்தது.
கடந்த 12ஆம் தேதி புதிதாக இருவருக்கு மூளை அமீபா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் 19 பேரை மூளை அமீபா நோய் தாக்கியுள்ளது.
மாசுபாடு அடைந்த நீர்நிலைகளில் குளிப்பவர்களுக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடம்புக்குள் புகுந்துவிடுகிறது. கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அதிகமான அளவில் ஆறு, குளம், குட்டைகளில் குளிக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. இதன் காரணமாக மூளை திண்ணும் அமீபா மனிதர்களுக்குள் தொற்றிக்கொள்கிறது.
இதுவரைக்கும் இப்படித்தான் இந்த அமீபா நோயின் பாதிப்பு பதிவாகி வந்தது. ஆனால், அண்மையில் பிறந்து மூன்றே மாதங்கள் ஆன குழந்தை ஒன்றும் இந்த நோயால் உயிரிழந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கேரள சுகாதாரத் துறையினர், இதுகுறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால், மிக நீண்ட காலமாக மருத்துவத் துறையினரும் நம்பிவந்த ஒரு கருத்தாக்கம் இதன் மூலம் நொறுங்கிப்போய் உள்ளது.
அதாவது, இதுவரை நம்பிவந்த காரணத்தின் அடிச்சுவடே இல்லாமல், வெளியில் எந்த நீர்நிலையிலும் குளிக்கவைக்கப்படாத மூன்று மாதக் குழந்தைக்கு இந்த நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருப்பது, நோய்ப் பரவலுக்கான வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி மாநில சுகாதாரத் துறை உடனடியாக ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது.
இந்த உயிர்க்கொல்லி நோய் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த மூளை உண்ணும் அமீபாவால் ஏற்படும் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸ் நோயானது உலக அளவில் 97 சதவீதம் உயிருக்கு ஆபத்தானதாக இருந்துவருகிறது. கேரளத்தைப் பொறுத்தவரை இது 24 சதவீதமாகத்தான் இருக்கிறது என்பது சற்றே ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இருந்தாலும், பிரச்னை கவலைக்கு உரியதாகவே இருக்கிறது.
சாதாரணமாக, வீடுகளில் குளிப்பவர்களுக்குகூட குளித்தபின்னர் இந்தப் பாதிப்பு வந்திருக்கிறது.
பொதுவாக, நன்னீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்ப்பது, மூக்குக் கவசத்தை அணிந்துகொள்வது, குளங்கள், கிணறுகள் போன்ற நீர்நிலைகளில் குளோரினேற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
இதையெல்லாம் செய்தாலும்கூட பாதிப்பு வரலாம் என்றும் அதிர்ச்சி தருகிறார்கள் அவர்கள்.