பிரபு தர்மராஜ் 
தமிழ் நாடு

எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மரணம்!

Staff Writer

நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபுதர்மராஜ் தன் 42 ஆம் வயதில் திடீரென மாரடைப்பால் காலமாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரபு தர்மராஜ் மிகவும் நகைச்சுவை மிளிரும் நாகர்கோவில் வட்டார வழக்கிலான தன் எழுத்துகளுக்காக பிரபலமானவர்.  காட்சித் தொடர்பியல் படித்தவரான பிரபு  அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான், கசவாளி காவியம், ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும்,  கோலப்பனின் அடவுகள், சக்ரவர்த்தி திரையரங்கம், ராணி இல்லம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

வேட்டையன் திரைப்படத்திலும் நாகர்கோயில் வட்டாரவழக்குப் பேச்சுப் பயிற்சி அளிப்பதில் அவர் பங்களித்துள்ளார். இது அல்லாமல் பல திரைப்படங்களுக்கும் திரைமறைவில் அவர் பங்களித்திருக்கிறார். தீராத சினிமா கனவுகளுடன் இருந்த அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும் என அவரது நண்பர்கள் நினைவுகூர்கின்றனர்.

அதீத எள்ளலுடன் கூடிய சமகால போக்குகள் மீதான விமர்சனங்களை முகநூலில் எழுதுவார். அவற்றைப் படித்து சிரிப்பதற்கென்றே பல வாசகர்கள் இருந்தார்கள்.

பல்வேறு பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதி இருக்கும் இவர் அவ்வப்போது அந்திமழை இதழுக்கும் பங்களித்துள்ளார். சமீபத்தில் வெளியான நவம்பர் இதழில் கூட பண்டிகைநாதன்கள் என்ற தலைப்பில் தீபாவளிக்கு ஊருக்குச் செல்பவர்களின் அவதியை எள்ளல் ததும்ப எழுதி இருந்தார்.

கடந்த வியாழனன்று மாலை அவர் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபு தர்மராஜின் சில கட்டுரைகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:

விண்டேக் உஸ்கியின் கதை

ரெபேக்கா அத்தை

சோனி வாக்மேனும் சோவாரடைஞ்ச சித்தப்பனும்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram