சமயநல்லூர் தெருக்களில் சுற்றித் திரிந்தபோது, மனதுக்குள் சின்ன நெருடல். நிச்சயம் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தேறி விடுவேன் என்ற நம்பிக்கையின் மறுபுறம் ஃபெயில் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று அவ்வப்போது தோன்றும்.
புதுமுக வகுப்பில் இன்னும் தீவிரமாகப் பாடங்களை வாசித்திருக்கலாம் என்று நினைத்தாலும் ஆங்கில வழியில் பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதியது பெரிய விஷயம் என்று நினைத்துக்கொள்வேன். தேர்வு முடிவுகள், என்னுடைய தேர்ச்சியை அறிவித்ததை அறிந்து ஒரே மகிழ்ச்சி. ஏதோ பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போன்ற மனநிலை. என் வகுப்பறை, விடுதி நண்பர்களில் பலர் ஆங்கிலத்தில் தேர்வடையாத காரணத்தினால் புதுமுக வகுப்பைத் தாண்டி, பட்ட வகுப்பில் சேர முடியாத நிலையை அறிந்து வருந்தினேன். பள்ளியில் முதன்மை இடம் வகித்த மாணவர்களில் சிலர், கல்லூரிக் கல்வியில் எதிர்கொண்ட தோல்வியினால் துவண்டனர். அடுத்து என்ன செய்வது? என்று குழம்பினர். பெரும்பாலான கிராமத்து மாணவர்கள் டிகிரி வகுப்பில் சேர்ந்து பட்டம் பெறுவதற்குத் தடையாக விளங்கியது பி.யூ.சி., என்ற புதுமுக வகுப்புதான். அந்த நிலை பின்னர் மாறியது. 11+1+3 என்று இருந்த கல்விமுறையை மாற்றி, கல்லூரியில் இருந்து பி.யூ.சி., வகுப்பை நீக்கிவிட்டு, 1978 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கூடத்தில் 10+2 வகுப்பு அறிமுகமானது, கிராமத்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியது.
பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம் ஏற்பட்டது எப்படி என்று இப்பவும் புலப்படவில்லை. பி.யூ.சி., யில் பெற்றிருந்த மதிப்பெண்களுக்கு பி. எஸ்ஸி., படிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று அறிந்தேன். எந்தக் கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்கக்கூடாது என்ற மன உறுதியுடன் வெளிவந்தேனோ அதே ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் சேர்ந்திட விண்ணப்பம் வாங்கி, பூர்த்தி செய்து அனுப்பியது, விதி வலியது அன்றி வேறு என்ன?
எனது அண்ணன்கள் சென்ற வழியில் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 1974 ஆம் ஆண்டு பி.எஸ்ஸி., கணிதவியல் துறையில் மாணவனாகச் சேர்ந்தேன். ஒரே குடும்பத்தில் இருந்து மூவர் பி.எஸ்ஸி.,கணிதவியல் துறையில் படித்ததைக் கணிதவியல் பேராசிரியர் சுப்பையா சார் பெருமையுடன் முதலாமாண்டில் என்னிடம் சொன்னது இப்பவும் நினைவில் இருக்கிறது. கணிதம் முதன்மைப் பாடமாகவும் புள்ளியியலும் இயற்பியலும் துணைப் பாடங்களாகப் படிக்க வேண்டும். கூடுதலாகத் தமிழும் ஆங்கிலமும். பட்ட வகுப்பில் ஆங்கிலம் பெரிய பூச்சாண்டியாக இல்லை; எளிதில் கடந்துவிட முடியுமென்ற நம்பிக்கை. யோசிக்கும்வேளையில் வாழ்க்கையே நம்பிக்கைதான். அன்றையக் காலகட்டத்தில் பி. காம்., என்ற வணிகம் சார்ந்த பட்ட படிப்பு, பிரபலமாக விளங்கியது. பி.காம் படித்து முடித்து வெளியேறும்போது வங்கியில் வேலை காத்திருப்பதான பிரமையில் மாணவர்கள் திரிந்தனர்.
பி.எஸ்ஸி., கணிதம் வகுப்பில் மொத்தம் 22 மாணவர்கள் சேர்ந்திருந்தோம். சிலர் விடுதியில் தங்கியிருந்தோம். கல்லூரியில் யூனியன் சேர்மன் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் எங்கும் ஒரே பரபரப்பு. மாணவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து களத்தில் குதித்தனர். ஒவ்வொரு வகுப்புக்கும் வாக்கெடுப்பு மூலம் ஒரு மாணவர் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எல்லாப் பிரநிதிகளும் சேர்ந்து மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சீனியர் மாணவர்கள் தங்களுடைய அணியினர் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தனர். நான் முதலாமாண்டு மாணவர் பிரநிதியாகத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தேன். சுப்பையா என்ற மாணவன் எதிர்த்துப் போட்டியிடப் போவதாகச் சொன்னான். ஏற்கனவே என்னுடன் பி.யூசி. சேர்ந்து படித்த மாணவர்களின் வாக்குகளால் எனக்குத்தான் வெற்றிவாய்ப்பு அதிகமாக இருந்தது. இத்தகு சூழலில் கல்லூரி வளாகத்தில் தற்செயலாகச் சந்தித்த கண்ணன் என்ற வகுப்பறை மாணவன், ” வகுப்பில் யாரையும் தெரியாது என்றும் நான் ஆதரித்தால் தேர்தலில் ஜெயிப்பேன்” என்றும் கூறினான். பி.யூ.சி.யில் தோல்வியடைந்து ஓராண்டுக்குப் பின்னர் கல்லூரி வந்திருப்பதாகவும் எனது உதவி தேவை என்று இரக்கமான தொனியில் சொன்னவுடன் சரி என்று சொன்னேன். அப்புறம் கண்ணன் பிரதிநிதியாகத் தேர்வடைந்தான். மூன்றாண்டுகளும் கண்ணனுடன் நெருக்கமான நட்பு நிலவியது, தனிக்கதை.
பட்ட வகுப்பில் நான் முதலாமாண்டு வகுப்புப் படிக்கும்போது, பகுதி 1 – தமிழ், பகுதி-2 ஆங்கிலம் கூட்டு வகுப்புகள் நடைபெறும். மொழிப் பாட வகுப்பில் கணிதவியல், விலங்கியல், வேதியியல் பாடங்களை மேஜரில் படித்த மாணவர்கள் சுமார் 90 பேர் ஒரே வகுப்பில் கூடியிருப்போம். வகுப்பு சந்தைக் கடை போலிருக்கும். மெயின் ஹாலில் நடைபெறும் கூட்டு வகுப்பின்போது, விரிவுரையாளர் வருகைப்பதிவு எடுத்து முடித்துவிட்டு, புத்தகத்தை எடுத்திட திரும்பும்போது நான்கைந்து மாணவர்கள், பின் கதவு வழியாக மெல்ல நழுவி விடுவார்கள். மாணவர்கள் தங்களுடைய பதிவு எண்ணை வரிசையாகச் சொல்லும்போது, வகுப்புக்கு வராத மாணவர்களின் பதிவு எண்களை விரிவுரையாளர் குறித்துக்கொள்வார். சில கில்லாடி மாணவர்கள் தங்களுடைய பதிவு எண்ணுடன் வகுப்புக்கு வராத ஒன்றுக்கும் கூடுதலான மாணவர்களின் பதிவு எண்களைக் குரலை மாற்றிப் பிராக்ஸி சொல்வார்கள். பொதுவாக மொழிப் பாட ஆசிரியர்கள் சிரமப்பட்டுப் பாடம் நடத்தினர். சிலரின் வகுப்பறை சந்தைக் கடைபோல சப்தமாக இருக்கும். மாணவர்கள் மட்டும் சேர்த்து படித்த கல்லூரியாதலால், பாலியல் பற்றிச் சில பேராசிரியர்கள் வெளிப்படையாகப் பேசினர். ஆங்கில விரிவுரையாளர் ஒருவர் எங்கள் வகுப்பறையில் அவ்வப்போது சொன்ன A ஜோக்கினைக் கேட்டு, மாணவர்கள் போடும் கூச்சலில் கட்டடம் அதிரும். மொழிப் பாட விரிவுரையாளர்களில் சிலர் சிலவேளைகளில் வகுப்பில் இருந்து மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துப்போய் அமைதியாக வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு, ஏதாவது ஆங்கிலப் பத்திரிகைகளை வாசிப்பது வழக்கம்.
தமிழ் மொழிப் பாடத்தில் புலவர் ஆ. பழநி எழுதிய ’அனிச்ச அடி’ என்ற செய்யுள் நாடகம் இடம் பெற்றிருந்தது. கணிதம் பயிலுகின்ற மாணவனுக்கு அனிச்ச அடி எதுக்கு? என்ற கேள்வி எனக்குத் தோன்றியது. ஒருங்கிணைந்த வகுப்பில் தமிழ் விரிவுரையாளர் நடத்துகிற பாடத்தைக் கவனிக்காமல் இருந்த பெரும்பாலான மாணவர்கள் கோனார், வேள்பாரி போன்ற நோட்ஸ்களில் தஞ்சமடைந்தனர். தமிழ் மொழிக் கல்விக்கும் தமிழிலக்கியக் கல்விக்கும் வேறுபாடு அறியாமல் பாடத்திட்டம் வகுத்த வல்லுநர்களால், பெரும்பாலான மாணவர்கள் தமிழ் என்றாலே எரிச்சல் அடைந்தனர். ஆங்கில மொழிப் பாடத்தைப் படிப்பதற்கு மாணவர்கள் பட்ட சிரமம் அதிகம். ஈசி கைடு, மினர்வா கைடு போன்ற நோட்ஸ்களின் உதவியால் குருட்டு மனனம் செய்து தேர்வுத்தாளில் எழுதிவிட்டு, மாணவர்கள் முடிவுக்காகப் பரிதாபமாகக் காத்திருந்தனர்
எழுபதுகளில் ஆண்டிற்கொருமுறைதான் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்தப்பெற்றன. இன்றைய Semester எனப்படும் அமைப்பு அப்பொழுது கிடையாது. Non- Semester மூலம் கல்லூரியில் படித்த கடைசிப் பிரிவு மாணவர்கள் நாங்கள்தான். மாணவர்களைக் காயடிப்பதற்காகத்தான் செமஸ்டர் சிஸ்டம் கொண்டு வரப்படுகிறது என்று சொன்ன பேராசிரியர் அகஸ்டின் சார், எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆண்டிற்கொருமுறை மட்டும் தேர்வு எழுத வேண்டிய சூழலில் மாணவர்கள் ஜூன் மாதம் கல்லூரிக்கு வரும்போது உற்சாகமான மனநிலையுடன் இருந்தனர். ஏப்ரல் இறுதியில்தான் பல்கலைக்கழகத் தேர்வுகள். எனவே, வகுப்பறைகளுக்குப் போயும் போகாமலும் இஷ்டம்போலச் சில மாணவர்கள் சுற்றினர். என்ன செய்வது என்று புரியாமல் தவித்த சிலர் மதுரை ரீகல் திரையரங்கில் 55 காசு செலவில் ஆங்கிலப் படம் பார்க்கப் போவார்கள். அன்றைய காலகட்டத்தில் அங்கே அற்புதமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. வகுப்பறையில் சில பேராசிரியர்கள் 'Antony and Cleopatra இப்ப ரீகல் டாக்கீஸில் ஓடுது போய்ப் பாருங்க.' என்று வழிநடத்தினர்.
கல்லூரிப் பேராசிரியர்கள் தங்களுடைய பாடத்தில் திறமை மிக்கவர்களாக விளங்கினர். சங்க இலக்கியம் நடத்தியவரும் சரி. Probability கோட்பாடு நடத்தியவரும் சரி ஒரே மாதிரி தீவிரத்தன்மையுடன் பாடம் நடத்தினார். இளைய தலைமுறையினரை உருவாக்கிட முயன்ற பேராசிரியர்கள் கற்றுத்துறை போகியவர்களாகவும் ஜாம்பவான்களாகவும் விளங்கினர். அதேவேளையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், விடலைப் பருவத்திற்குரிய கொண்டாட்டங்களுடன் வாழ்ந்த எங்களுக்குக் கல்லூரி வாழ்க்கை, அருமையான படைத்தளமாக விளங்கியது.
தினந்தோறும் காலை அல்லது மாலை வேளைகளில் நூலகத்திற்குச் சென்று வாசிப்பு அறையில் பத்திரிகைகளைப் புரட்டுவது எனது வழக்கம். நூலகத்தில் வாசித்த கணையாழி, தீபம் போன்ற இதழ்கள் எனக்குள் இலக்கியப் பார்வையை உருவாக்கின. இல்லஸ்டிடேட் வீக்லி, காரவன், ரீடர் டைஜஸ்ட், மதர் இந்தியா, ப்ளிட்ஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் என்னுடைய ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்தன. கல்லூரி நூலகராக இருந்த சிவலிங்கம் நாடார் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்; அன்புடன் பழகினார். நூலகப் பணியாளரான சந்திரமோகன் என் வாசிப்பு ஆர்வத்தைப் புரிந்துகொண்டு ப்ரியமுடன் பேசுவார். என்னை எழுத்தாளராக உருவாக்கியதில் கல்லூரி நூலகப் புத்தகங்களும் பத்திரிகைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விடுதியில் சேர்ந்தபோது பெரும்பாலும் ஒரே ஆண்டில் படிக்கிற மாணவர்களை ஒரு அறையில் ஒதுக்கிடும் வழக்கத்திற்கு மாறாக எனக்கு இரு மூன்றாமாண்டு மாணவர்களும் இரு இரண்டாமாண்டு மாணவர்களும் தங்கியிருந்த அறையை ஒதுக்கினர். முதலில் மிகவும் அசௌகரியமாக இருந்தது. பின்னர் சீனியர் மாணவர்களுடன் சேர்ந்து கேலியும் பகடியும் கற்று ஒருவகையில் சேட்டைக்காரனாக மாறினேன். சீனியர் மாணவர்கள் அடாவடியாகப் பேசுகின்ற பேச்சுகள், என் இயல்பை மாற்றியமைத்தன.
ராகுல சங்கிருத்தியாயன் எழுதிய ’வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை வாசித்தபோது மனித சமுதாயம் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்ற புரிதல் காரணமாக எல்லாவற்றையும் விலகியிருந்து அவதானிக்கிற மனநிலை எனக்குள் உருவானது. மதுரை நகர் பேருந்து நிலையக் கடையில் வாங்கிய செம்மலர், தாமரை போன்ற இடதுசாரி இலக்கிய இதழ்களையும் கவிதை போன்ற பத்திரிகைகளையும் வாசித்தபோது இலக்கியம் பற்றிய மாற்றுப் போக்கினை அறிந்திட முடிந்தது. கல்லூரி நூலகத்தில் இருந்து பெற்ற ஜெயகாந்தன், ஆர்.சண்முகசுந்தரம், லா.ச.ரா. போன்றோர் எழுதிய புனைவெழுத்துகள் புதிய உலகை அறிமுகப்படுத்தின. கணிதவியல் பாடத்தில் எனது சீனியரான சமயவேலுடன் ஏற்பட்ட அறிமுகம் என் இலக்கிய வாசிப்பை விரிவுபடுத்தியது.
விடுதியியிலும் சரி, வகுப்பறையிலும் சரி ஆண்-பெண் உறவு, காதல் பற்றிய பேச்சுகள் அடிக்கடி இடம் பெற்றன. விடுதியில் சிவந்த மேனியுடன் லட்சணமாக இருந்த மாணவனைச் ’சைட்’ என்று தங்களுக்குள் கிசிகிசுவெனப் பேசி, தங்களுக்குள் சிரித்துக்கொள்கின்ற சிலர் இருந்தனர். பதின்பருவத்திற்குரிய காதல் வேட்கையில் தத்தளிக்கின்ற மாணவர்களில் சிலர் இளம் பெண்ணைச் சைட் அடித்தல், காதலித்தல் போன்றவற்றைச் சளைக்காமல் பேசினர். ஹார்மோன் படுத்திய பாடு காரணமாக உடலில் தோன்றி பாலியல் விழைவினால் சிலர் தத்தளித்தனர். இளம் பெண்ணைக் காதலித்தல்தான் வாழ்க்கையின் லட்சியம்போலக் கருதி வாழ்ந்த சிலர் எனக்கு நண்பர்களாக இருந்தனர். கல்லுரி வளாகத்தில் பெண் வாடையே இல்லாத சூழலில் நூற்றுக்கணக்கில் விடுதி அறைகளில் தங்கியிருந்த பதின்பருவத்தினரான மாணவர்களின் பேச்சுகள், அவ்வ்வப்போது சுற்றி வளைத்துப் பெண்ணுடலில் போய் முடியும். பெண்ணை அபூர்வமான பொருளாக்கி இளைஞர்களிடமிருந்து ஒதுக்கி வைத்த சமூக நடைமுறைதான், கோளாறுகளுக்குக் காரணம். கல்லூரியில் எப்பொழுதாவது நடைபெறும் அனைத்துக் கல்லூரி மாணவமாணவியர் பங்கேற்பதற்காகக் கல்லூரி வளாகத்திற்கு வரும் மகளிர் கல்லூரி மாணவிகளைப் பார்த்தவுடன் தொலைவிலிருந்து ஊளையிடும் மாணவர்களைப் பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். மாணவியான இளம்பெண் என்ன வேற்றுக் கிரகவாசியா? ஏன் இப்படிக் கூச்சல் போடுகின்றனர்? என்று நினைத்துக்கொள்வேன்.
கல்லூரியில் செயல்பட்ட என்.சி.சி. அணிவகுப்பில் மாணவர்கள் சீருடையுடன் பூட்ஸ் ஒலியெழுப்பிட நடந்து போவதைப் பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கும். என்.சி.சி.யில் சேர்ந்திட விடுக்கப்பட்ட அழைப்பை அறிக்கைப் பலகையில் பார்த்தவுடன் மனதில் குதூகலம் பிறந்தது. விருப்பத்துடன் பரேடு நடக்கிற திடலுக்குப் போன என்னை அண்டர் ஆபிஸர் தேர்ந்தெடுத்தார். மறுநாள் சீருடைகள், கனத்த பூட்ஸ் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விடுதிக்குப் போய் கஞ்சி போட்டுக் காயவைத்து அயர்ன் பண்ணி வாங்கினேன். குறிப்பிட்ட நாளில் சீருடையை அணிந்து கால்களில் பூட்ஸை அணிந்து நடந்தபோது ராணுவ வீரனாக நினைத்துக்கொண்டேன். பரேடு திடலில் வீரர்களாகிய எங்களை நான்கு வரிசையாகப் பிரித்து அணிவகுத்து நிற்க வைத்தனர். பூட்ஸ் காலில் ரொம்ப நேரம் நிற்பது சிரமமாக இருந்தது. மதுரையில் இருந்து வந்திருந்த என்.சி.சி. அலுவலர்களுடன் சீனியர் அண்டர் ஆபிஸர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அலுப்பாக இருந்த சூழலில் நான் மோசமான கமெண்ட் அடிக்க எல்லோரும் சிரித்தனர். ஆபிஸர் ஏன் சிரித்தீர்கள்? என்ற கேள்விக்கு எல்லோரும் மௌனமாக இருந்தனர். எனக்குள்ளாகப் பயம் அரும்பியது. எல்லோரும் பெரிய திடலை மூன்று தடவைகள் சுற்றுக என்று ஹிந்திக்கார அலுவலர் சொன்னவுடன் எல்லோரும் ஓடத்தொடங்கினர். ஓட்டத்தின்போது ஒருத்தன் ”உன்னால்தான் ஓட வேண்டியதாயிடுச்சு. வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இரு” என்று எரிச்சலுடன் சொன்னான். கனத்த பூட்ஸைத் தூக்கிக்கொண்டு ஓடுவது ஒருவகையில் தண்டனைதான். என்னுடைய இயல்புக்கும் என்.சி.சி. யின் கட்டுப்பாட்டுகளுக்கும் ஒத்து வராது என்று அறிந்து, விலகினேன்.
என்.எஸ்.எஸ் என்ற நாட்டு நலப்பணித் திட்டத்தில் போய்ச் சேர்ந்து, கல்லூரி வளாகத்தில் புல் வெட்டிய பின்னர் தேநீரும் வடையும் சாப்பிட்டது சுவராசியமானது. என்.சி.சி., என்.எஸ்.எஸ்.,போன்றவற்றில் சேர்ந்து சான்றிதழ் பெற்றிருந்தால், சர்வீஸ் கமிஷன் போட்டித் தேர்வு நேர்காணலில் பத்து மதிப்பெண் கிடைக்கும் என்ற தகவல் காற்றில் மிதந்தது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராகத் தமிழ்த் துறை விரிவுரையாளர் ஜோதி மணி சார் இருந்தார்.
மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள், நா.காமராசனின் கறுப்பு மலர்கள் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளும் வாசித்தவுடன் கவிதை பற்றிய என் மனநிலையில் பெரிய மாற்றம். அதுவரை கண்ணதாசன், பாரதிதாசன், பாரதியார் எழுதிய மரபுக்கவிதைகளை வாசித்து, எண் சீர் விருத்தப் பாக்கள் புனைந்துகொண்டிருந்த என்னுடைய கவிதை மொழி, புதிய வடிவமெடுத்தது. புதுக்கவிதை மீது ஆர்வம் பிறந்தது. பேராசிரியர் ஐ.சி.பி. என்ற ஐ.சி.பாலசுந்தரம் சாருடன் ஏற்பட்ட நெருக்கமான இலக்கிய உரையாடல்கள் கவிதை, சிறுகதை பற்றிய புதிய திறப்புகளை எனக்குள் உருவாக்கின. லா.ச.ரா. வின் கவித்துமான மொழியிலான கதைசொல்லல் எனக்குப் பிடித்தமாக இருந்தது. கல்லூரியில் அடாவடிக் குழுவில் இருந்தாலும் அவ்வப்போது படைப்பு முயற்சியில் ஈடுபட்டேன். திடீரென ஒரு சிறுகதை எழுதி, ஐ.சி.பி. சாரிடம் வாசிக்கக் கொடுத்தேன். மறுநாள் அவரைச் சந்தித்தபோது, அந்தக் கதை, சிறுகதையாகவில்லை என்று சொன்னவர், அந்தக் கதையை இன்னொரு தடவை வாசித்துவிட்டு, கிழிச்சுப்போடு முருகேசா என்று மலர்ந்த முகத்துடன் சொன்னார். எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. மனதில் வருத்தம். அறைக்கு வந்தவுடன் மீண்டும் கதையை வாசித்தபோது சார் சொன்னது சரியென்று புலனாகியவுடன் கதைப் பிரதியைக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டேன். அந்த ஆண்டில் கல்லூரி ஆண்டு மலரில் வெளியிடுவதற்காகச் சில புதுக்கவிதைகளும் சிறுகதையும் அளித்தேன்.
பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்குப் போய்விட்டு, விடுதிக்கு வந்தபோது தேர்வு பயம் மெல்ல அரும்பியது. வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்தவுடன் கைலியை உடுத்திக்கொண்டு, கையில் பாடப்புத்தகத்துடன் நாகமலை மீதும் அடிவாரத்திலும் திரிகின்ற மாணவர்களின் எண்ணிக்கை பெருகிடும். சிலர் விடுமுறை நாட்களில் விடுதியில் இருந்து இரண்டு மைல் தொலைவு நடந்துபோய் ஏதாவது மரத்தடியில் அமர்ந்து படிப்பார்கள். அன்றைய சூழலில் படித்து முடித்து வேலைக்குப் போக வேண்டும் என்ற மன உறுதி, மாணவர்கள் பலருக்கும் இல்லை. அரியர்ஸ் இல்லாமல் தேர்வடைந்து டிகிரி வாங்கிட வேண்டும் என்றுதான் விரும்பினர். சில மாணவர்கள் மார்ச் மாதத்திலும்கூட எவ்விதமான பரபரப்பும் இல்லாமல் வழக்கம்போலத் திரைப்படம், அரட்டை என்று சுற்றித் திரிவார்கள். சிலர் தேர்வறையில் பிட் கொண்டுபோய் விடைத்தாளில் பார்த்து எழுதித் தேர்வடைந்து விடலாம் என்று அதற்கான ஆயத்தமுடன் செயல்படுவார்கள். கையளவு தாளில் ஒரு பெரிய கட்டுரையை நுணுக்கி எழுதுகின்ற சிரமமான செயலில் சிலர் வல்லுநர்களாக இருந்தனர்.
தேர்வறையில் தேர்வு எழுதும்போது மெலலத் திரும்பிப் பார்த்தால்கூட கண்காணிப்பாளரின் கண்டிப்புக்கு உள்ளாகிட நேரிடும். சில மாணவர்கள் பிட் டைப் பார்த்துத் தேர்வெழுதும்போது மாட்டிக்கொண்டு கிரிமினல் குற்றவாளிபோல வெளியே அனுப்பப்படுகின்ற காட்சி, வருத்தத்தைத் தரும். மிகவும் சிரமப்பட்டுப் பிட்டைத் தயாரித்து, ரகசியமாக எழுதுவதைவிட பாடத்தைப் படித்து தெரிந்த அளவில் தேர்வு எளிது என்று எனக்குத் தோன்றும்.
விடுதியில் மாணவர்கள் திரைப்பட நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து அவ்வப்போது விதண்டா வாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது. என் அய்யாப்பா, அய்யா, சின்னையா, மாமா போன்றோர் திராவிட முன்னேற்றக் கழக அரசியலில் ஈடுபட்டிருந்ததால் எனக்கு இயற்கையாகவே எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் பிடிக்கும். தி.மு.க., அதி..மு.க., காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் கருத்துகளையும் அரசியல் செயல்பாடுகளையும் முன்வைத்துக் காரசாரமான விவாதங்கள் விடுதிகளில் அவ்வப்போது நடைபெறும்.
வயதான நடிகர்கள் ஆக்கிரமித்திருந்த அன்றையத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதில் மாணவர்கள் ஆர்வமற்று இருந்தனர். ஆங்கிலம், ஹிந்தி மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு மாணவர்கள் மீண்டும்மீண்டும் சென்றனர். பாபி, யாதோங்கி பாரத், சோலே, ஆக்லே லக் ஜா போன்ற ஹிந்தித் திரைப்படங்களையும் எண்டர் தி டிராகன், மெக்னாஸ் கோல்டு போன்ற ஆங்கிலத் திரைப்படங்களையும் ஐந்து தடவைகளுக்கும் கூடுதலாகப் பார்த்த விடுதி மாணவர்கள் நிரம்ப இருந்தனர். ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் செல்வாக்குடன் விளங்கின. விடுதி விழாவில் நிகழ்த்தப்பெற்ற இசைக் கச்சேரிகளில் 50% ஹிந்திப் பாடல்கள் பாடப்பட்டன. ஹாலிவுட் நடிகர்களான கிரிகிரி பெக், ஒமர்ஷெரீப், சோபியா லாரென்ஸ், மார்லன் பிராண்டோ போன்றோரின் நடிப்புப் பற்றிக் கதைக்கின்ற குழுவில் நானும் பங்கேற்றேன்.
பி.ஏ., பொருளாதாரம் இரண்டாமாண்டு படித்த நண்பர் சௌந்திரபாண்டியன் ’மாப்பிள்ளை அழைப்பு’ என்ற நகைச்சுவை நாடகம் எழுதி, இயக்கிய நாடகத்தில் நானும் நடித்தேன். கல்லூரி ஆண்டுவிழாவில் நாடகத்தை நடத்திட திட்டமிட்டோம். மூன்று இளைஞர்களும் ஒரு பெண்ணும்தான் நாடகக் கதைமாந்தர்கள். விடுதியில் நாங்கள் பேசிக்கொண்டிருந்த கேலியும் கிண்டலும் கலந்த வசனங்களுடன் இரட்டை அர்த்தமாகவும் பேசி, ஓத்திகையை நிகழ்த்தினோம். முதலாமாண்டு படித்த சேகர் என்ற மாணவரைக் கெஞ்சி, பெண் வேடமிட ஒப்புதல் பெற்றோம். கல்லூரி ஆண்டுவிழாவில் நாடகத்தை நிகழ்த்திட மேடையின் பின்புறம் ஒப்பனையுடன் காத்திருந்தோம். அரங்கில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்திட பெருங்கூட்டம் கூடியிருந்தது. எங்கள் நிகழ்ச்சிக்கு முன்னர் மூன்றாமாண்டு மாணவர்கள் நிகழ்த்திய அல்டாப் ஆறுமுகம் என்ற நாடகத்தை நடத்தவிடாமல் அரங்கில் ஒரே கூச்சல். சிறிய கற்கள் மேடையை நோக்கி வீசப்பட்டதால், நாடகம் இடையிலே நிறுத்தப்பட்டது. அடுத்து எங்கள் நாடகம். எங்களுக்கு ஒரே பதற்றம். முதல் காட்சியில் நண்பர் நானும் சுரேஷும் நடிக்கிற நிகழ்வு. ஏதாவது கத்திக்கொண்டு மேடைக்குள் நுழைவோம் என்று யோசித்து, ’சாமியே அய்யப்பா… சாமியே அய்யப்பா… சவரம் செய்யப்பா… என்று கூச்சலிட்டவாறு மேடைக்குள் போனோம். ஒரே கைதட்டல். அது, விடுதி அறையில் கேலியாகச் சொல்லிக்கொண்டிருப்பது. திடீரென ’ஏந்தி விடப்பா… தூக்கி விடப்பா…’ என்றவுடன் எங்கும் பலத்த சிரிப்புச் சத்தம். அந்த முழக்கம் ஒருவகையில் இரட்டை அர்த்தம் கொண்டது. மாணவர்களின் கூச்சல் அரங்கில் ஓங்கி ஒலித்தது. அந்த நாடகத்தில் நடித்ததனால் கல்லூரியில் என் பெயர் பரவலாக அறிமுகமானது.