பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா தான் தயாரிக்கும் படத்தை வெளியிட, ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 2002இல் ரஜினி நடித்த, பாபா படம் வெளியானது. அப்படத்தில் ரஜினி சிகரெட் புகைக்கும் காட்சியை நீக்க வேண்டும் என, பாமக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த படம் வெளியான தியேட்டர்களில், பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், மோதல் ஏற்பட்டது. படப்பெட்டி கடத்தப்பட்டது. இதனால் ரஜினி ரசிர்களுக்கும் – பாமகவுக்கும் இடையேயான மோதல் வலுப்பெற்றது.
இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் நேற்று காலை ரஜினியை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சங்கமித்ரா தயாரித்துள்ள, அலங்கு படத்தின் முன்னோட்ட காட்சிகள், ரஜினிக்கு காட்டப்பட்டன. படக் குழுவினரை ரஜினி பாராட்டினார். இந்த படம், வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், வெற்றி பெற தன் வாழ்த்துகளையும் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், அலங்கு படத்தை ரஜினி வெளியிட வேண்டும் என்றும் சங்கமித்ரா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள சிலர், அன்று பாபா படத்தை வெளியிடாமல், பாமகவினர் பிரச்னை உண்டாக்கினார்கள். ஆனால், இன்று அதே பாமகவினர் ரஜினியை சந்தித்து, அவர்களின் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்துள்ளனர். ரஜினியும் சங்கமித்ராவும் எடுத்துக் கொண்ட புகைப்படத்துக்குப் பின்னால் பாபா படம் இருப்பதையும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.