
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அவர் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர்கள் கமல்ஹாசன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின்
ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
75 வருடங்கள் அற்புதமான வாழ்க்கை. 50 வருட புகழ்பெற்ற சினிமா வாழ்க்கை. பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா.