நடிக்க மறுத்த உலக அழகி... அதிக சம்பளம் கேட்ட சிவாஜி... ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்
Published on

படையப்பா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்ததாகவும் சிவாஜி கணேஷன் அதிக சம்பளம் கேட்டதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறுயுள்ளார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்தப் படம் 1999இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இந்தப் படம் டிசம்பர் 12 ஆம் தேதியில் மறுவெளியீடாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் அனுபவங்களை நடிகர் ரஜினி பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது...

நான் சினிமாவுக்கு வந்த 25ஆவது வருடத்தில் வந்த படம் படையப்பா. அந்த படத்தை நான் தான் தயாரித்தேன். படத்தின் மூலக்கதையும் என்னுடையதான்.

பொன்னியின் செல்வன் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நந்தினி கதாபாத்திரம் மிக மிக பிடிக்கும். அதற்காக நான் உருவாக்கிய படம்தான் படையப்பா. கதையை ரவிக்குமாரிடம் கொடுத்து திரைக்கதை எழுதச் சொன்னேன். அவர் திரைக்கதையும் வசனமும் எழுதினார். படத்தின் தலைப்பும் நான் வைத்ததுதான். ரவிக்குமார் சார் புதியதாக இருக்கிறதே என்றார். அவரைச் சமாதானப்படுத்தினேன்.

நந்தினியை மையமாக வைத்து உருவாக்கிய நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வெண்டுமென விரும்பினேன். ஏனெனில் அவரது கண்கள் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

எவ்வளவோ முயன்றும் அவர் நடிக்கவில்லை. பல மாத காத்திருப்பிற்குப் பிறகு அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை எனத் தெரிந்ததும் மற்ற நடிகைக்குச் சென்றோம்.

தெலுங்கில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனை ரவிக்குமார் என்னிடம் அறிமுகம் செய்தார். எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை; அரைமனதாகவே இருந்தது.

அந்த நீலாம்பரி கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படமே ஹிட் அடிக்கும்.

சிறிது எடையைக் கூட்டினால் நன்றாக இருக்குமென ரவிக்குமார் சார் என்னை சமாதானம் செய்தார். பின்னர் லுக் டெஸ்ட் எடுத்தோம். எல்லாமே நன்றாக நடந்தது.

அடுத்து, சிவாஜி சாரை நடிக்க வைக்கலாம் என்றேன். அவரிடம் சென்று ஒப்புதல் வாங்கிய பிறகு, ஐந்து நாள் படப்பிடிப்புக்கே அவர் அதிகமாக சம்பளம் கேட்டதாக ரவிக்குமார் கூறினார்.

முதலில் சம்பளம் பேசிவிட்டு கதை சொல்லியிருந்தால் பரவாயில்லை. கதை சொல்லிவிட்டு சம்பளத்திற்காக இப்படி செய்தால் தவறாகிவிடும் என அடுத்த நாளே முழு சம்பளமும் கொடுத்தோம் என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com