நாயகன் படம் வெளிவர உதவிய மூப்பனார்!
தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று நாயகன் பல்வேறு சிக்கல்களை சந்தித்த இந்தப் படம் வெளியாக உதவியவர் அப்போதைய காங்கிரஸ் தலைவர் மூப்பனார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகனும், தயாரிப்பாளருமான முக்தா ரவி, அந்திமழை யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுபற்றி விரிவாக கூறியுள்ளார்.
“மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் எங்கள் முக்தா பிலிம்ஸ் திறுவனம் எடுத்தது. ஆரம்பத்தில் சொன்ன பட்ஜெட்டை விட கூடுதல் தொகை செலவானதால், ஒரு கட்டத்தில் எங்களுக்கு சொந்தமான வீட்டையே அடமானம் வைத்து இப்படத்தை எடுத்தோம். ஆனால் இந்தப் படத்தின் கதை பம்பாய் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதால் அதன் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. என் அப்பா முக்தா சீனிவாசன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் மூப்பனாரின் உதவியை நாடினார்.
அவரும் வடமாநில தலைவர்களான ஏ.ஆர்.அந்துலே, சரத்பவார், ஷாலினி தாய் படேல், ராணே உள்ளிட்ட பல தலைவர்களை இப்படத்துக்காக சந்தித்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் நாயகன் படம் பற்றி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடமே மூப்பனார் பேசியுள்ளார். ‘முக்தா சீனிவாசன் காங்கிரஸ்காரர். நான் நாயகன் படத்தைப் பார்த்துவிட்டேன். அதற்கும் வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றுக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வாழ்க்கை கதை வேறு. இது ஒரு கேங்கஸ்டர் கதை’ என்று கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி மூப்பனாரை நம்பினார். நாயகன் படம் சிக்கிலின்றி வெளியாக உதவினார். இதைத்தொடர்ந்து 1987-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி நாயகன் படம் வெளியானது.”
கட்சி ஆரம்பிக்க முகூர்த்தம் பார்த்த சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1988-ஆம் ஆண்டு அரம்பித்த கட்சி தமிழக முன்னேற்ற முன்னணி. இந்த கட்சி தொடர்பான ஒரு சுவாரஸ்யமான தகவலை அந்திமழை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் சித்ராலயா கோபுவின் மகனும், எழுத்தாளருமான காலசக்கரம் நரசிம்மா.
“காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிவாஜி, 1988, பிப்ரவரி 10-ஆம் தேதி கட்சி தொடங்க திட்டமிட்டார். இந்த நேரத்தில் எங்கள் வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்துக்கான அழைப்பிதழைக் கொடுக்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார் கதாசிரியரும், இயக்குநருமான என் அப்பா சித்ராலயா கோபு. திருமண தேதி பிப்ரவரி 10 என்று அதில் இருந்திருக்கிறது.
இதைப் பார்த்த சிவாஜி, “என்ன ஆச்சாரி (கோபுவை சிவாஜி இப்படித்தான் செல்லமாக அழைப்பார்) பப்ரவரி 10 முகூர்த்த நாளா? நான்கூட அன்னைக்கு ஒரு நல்ல காரியம் பண்ணலாம்னு இருக்கேன்” என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கு சித்ராலயா கோபு, “அன்னைக்கு ரொம்ப நல்ல நாள். நீங்க தாராளமா செய்யுங்க” என்று சொல்லியருக்கினார்.
சிவாஜியும் பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் தேர்தலில் படுதோல்வி. சிவாஜியாலேயே ஜெயிக்க முடியவில்லை.
இந்த சூழலில் என் அப்பா மீண்டும் அவரை சந்திக்கச் சென்றுள்ளார். அவரைப் பார்த்த சிவாஜி, “ஏன்யா ஆச்சாரி... பிப்ரவரி 1- முகூர்த்த நாள்னு சொன்ன. ஆனா அன்னைக்கு தொடங்கிட என் கட்சி தோத்துப் போயிடுச்சே?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அப்பா “முகூர்த்த நாளில் கல்யாணம் பண்ணினால் நல்லா இருக்கும். நீங்கள் கட்சி அல்லவா ஆரம்பித்திருக்கீங்க” என்று சொல்ல, தோல்வியின் சோகத்தையும் மறந்து சிரித்திருக்கிறார் சிவாஜி.