‘கூலி திரைப்படம் ஆயிரம் பாட்ஷாவுக்கு சமம்’ என அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாகார்ஜூனா பேசியிருந்தார். இப்படி அந்த படத்தை சுற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
அதோடு, ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக வெளியாகியிருக்கிறது ‘கூலி’.
படம் எப்படி வந்துள்ளதென்று பார்ப்போம்...
சென்னையில் மேன்சன் (இப்படியொரு மேன்சனை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்) நடத்தி வரும் ரஜினிகாந்த் (தேவராஜ்), விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது நண்பர் சத்யராஜ் இறந்ததாக தகவல் அறிந்து அங்கே செல்கிறார். அவர் இயற்கையாக சாகவில்லை, யாரோ அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள் என்ற உண்மை அவருக்கு தெரிய வருகிறது.
ரஜினிக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்பது இனி உங்களுக்கே தெரியும். அதுதான் படத்தின் மீதிக் கதை.
விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது படத்தின் கதைக்களம். துறைமுகத்தில் நடக்கும் குரூர கொலைகளை, யூகிக்க முடியாத கடத்தலை ‘திக்...திக்...’ என காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தொடர் கொலைகளும் அதற்கு காரணமானவர்கள் பற்றிய பின்கதைகளும் என முதல் பாதி விறுவிறுப்பாகவே செல்கிறது.
இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் பேயாட்டம் ஆடுகின்றன. வில்லனும் ஹீரோவும் சேர்ந்து எப்படியும் சில நூறு பேரை ‘சதக்… சதக்…’ என குத்தி கொலை செய்கிறார்கள்.
இறுதியில், நண்பன் - மகள் பாசம், கூலிகளின் மீட்பர் போன்ற சமாச்சாரங்களை ஊறுகாயாகத் தொட்டு சுபம் போடுகிறார்கள்.
படத்தின் உண்மையான ஹீரோ சௌபின் ஷாஹிர் தான். மற்றபடி படத்தில் ஒரு…. இல்லை. ‘அவார்டு பங்க்ஷன்’ போல் நடிகர்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றனர். ‘பத்து படத்திற்கு மேல் இயக்கமாட்டேன்’ என்று இயக்குநர் லோகி ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம். ‘அவ்வளவுலாம் வேண்டாம், இப்பவே போய்விடுங்கள்’ என ஆதங்கப்பட வைக்கிறது படத்தின் திரைக்கதை.
‘பில்டப் பத்தலேயே’ என நினைக்கும் அளவுக்கு ரஜினியின் அறிமுக காட்சி உள்ளது. மற்றபடி வயதுக்கு ஏற்றமாதிரிதான் அவரால் நடிக்கமுடிகிறது என்பது நடன காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளிலும் ‘பளிச்சென’ தெரிகிறது. மெயின் வில்லனாக நாகர்ஜூனா. ஒவ்வொரு காட்சியிலும் மாஸாக வருகிறாரே தவிர, அவரின் கதாபாத்திரம் பற்றிய சித்தரிப்பு எங்கும் அழுத்தமாக இல்லை. ஜெயிலர் படத்தில், விநாயகன் சிலரை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அடிப்பது போல், இந்த படத்தில் மண்டையில் அடித்துக் கொல்கிறார் நாகர்ஜூனா.
சத்யராஜ், ஸ்ருதிஹாசன் இருவரும் அவர்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பால் ஈர்க்கின்றனர். அடிக்கவும் சுடவும் மட்டுமே வருகிறார்கள் உபேந்திராவும் அமீர்கானும். இவர்களைத் தவிர காளி வெங்கட், கண்ணா ரவி, சார்லி, ரெபா மோனிகா ஜான் என பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் பெரும் பலம் இசையும் ஒளிப்பதிவும். கதையை விட அனிருத்தின் பின்னணி இசை மிரட்டுகிறது. மோனிகா பாடல் படமாக்கப்பட்டிருந்த விதம் அற்புதம். தங்கமகன் படத்தில் வந்த இளையராஜாவின் ‘வா… வா… பக்கம் வா’ பாடலும் இடம்பெற்றுள்ளது.
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் துறைமுக காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் பலகோணங்களில் காட்டியுள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் கச்சிதம்.
படத்தில் இயக்குநரை விட சண்டை இயக்குநர்கள் அன்பறிவு மாஸ்டருக்கு அதிகம் வேலை இருந்திருக்கும். 5 நிமிடத்துக்கு ஒரு சண்டை காட்சி.
ஃப்ளாஷ்பேக் காட்சியில் டீ ஏஜிங் மூலம் ரஜினியை இளமையாகக் காட்டியவிதம் ரஜினி ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
‘தெய்வம் நின்று கொல்லும்… குடி தினந்தோறும் கொல்லும்’ என அறிவுரை சொல்லும் ரஜினி, படம் முழுக்க குடித்துக் கொண்டும் பீடி இழுத்துக் கொண்டும் இருக்கிறார். என்ன தலைவரே இது?
சத்யராஜ் கொலைதான் கதையின் முக்கியமான திருப்பம் என்றாலும், அதற்கான காரணத்தை போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள். கண்ணா ரவியை ஏன் கொன்றார்கள் என்றே தெரியவில்லை.
ரஜினி படம் என்பதால் நாமே காதில் பூ வை சுத்திக்கொள்ளணும்போல… ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங்.
‘கூலி ஆயிரம் பாட்ஷாவுக்கு சமமா…?’ – அந்த நாகார்ஜுனாவே வந்து தலையில் அடிச்சிக் கேட்டாலும் படம் பார்த்தவங்க ஒப்புக்க மாட்டாங்க...