கெவி: திரைவிமர்சனம்!

கெவி திரைப்படம்
கெவி திரைப்படம்
Published on

‘இனி ஏ.ஐ.தான் உலகை ஆளப்போகிறது’ என பேசிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், அரசின் நலத்திட்டங்கள் கால் வைக்காத ஒரு மலைக்கிராமத்தின் கண்ணீர் கதையே இந்த கெவி!

கொடைக்கானலுக்கு அருகே உள்ளது ‘வெள்ள கவி’ என்ற மலைக் கிராமம். அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்ட, அதில் சிலர் பலியாகின்றனர். ஒருவர் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அவரை கிராமத்தினர் டோலி கட்டிக் கொண்டு கீழே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அப்போது எதிரே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வாக்கு கேட்டு அப்பகுதிக்கு வருகிறார். ‘எங்க ஓட்டு மட்டும் வேணும், எங்க உசுரு உங்களுக்கு வேணாம்ல’ என எம்.எல்.ஏ.விடம் எகிறுகிறார் நாயகன் மலையன். வாய்த் தகராறு முற்றி கைகலப்பாகிறது.

இதில், போலீஸ் அதிகாரியான சார்லஸ் வினோத் மீது ஒரு செருப்பு வந்து விழ, மலையனைக் கட்டம் கட்டுகிறார் அவர். இதைத் தொடர்ந்து ஒருநாள் மனைவியின் வளைகாப்புக்காக பொருட்களை வாங்கிக் கொண்டு மலையேறும் மலையனை அடித்து துவைக்கிறார் வினோத். அதே இரவில் மலையனின் நிறைமாத கர்ப்பிணியான மனைவி ஷீலா பிரசவ வலி வந்து துடிக்கிறார். கீழே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்தான் தாயும் சேயும் பிழைக்க முடியும் என்கிற நிலையில், போலீஸ் பிடியில் சிக்கிய மலையன் கதி என்ன ஆனது? அவரின் மனைவி குழந்தையைப் பெற்றெடுத்தாரா? போன்ற கேள்விகளுக்கு மீதிப் படம் விடை தருகிறது.

‘வெள்ள கவி’ மலையில் வாழும் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மதுரையில் வாழ்ந்தவர்கள் என்ற வரலாற்றுக் கூறலுடன் தொடங்கும் படம், எத்தனையோ ஆட்சிகள் மாறினாலும் மலைக்கிராம மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை என்ற சமகால பிரச்னைக்குள் பயணிக்கத் தொடங்குகிறது.

அதிகாரங்களால் தொடர்ந்து துரத்தப்படும் மக்களின் வாழ்க்கையை ஒரு மலைக் கிராமத்து தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன்.

எளிய கதைக்களம், கண்ணீர் சிந்தவைக்கும் திரைக்கதை, அழகான காட்சி அமைப்பு, காத்திரமான நடிப்பு, இதமான இசை மனதில் முத்திரை பதிக்கிறது கெவி.

ஷீலா, சார்லஸ் வினோத், ஜாக்குலின் தவிர்த்து மற்ற நடிகர்கள் பெரும்பாலும் புதுமுகங்களே. அசுரத்தனமான நடிப்பில் முன் நிற்கிறார் ஷீலா. பிரசவ வலி வந்து அவர் துடிக்கும் துடிப்பில் நமக்கு நடுக்கம் எடுக்கிறது. ஒரு காட்சியில் தன்னுடைய பானை வயிற்றை தடவிப் பார்ப்பார். எப்படித்தான் அந்த உருண்டை வயிற்றை உருவாக்கினார்களோ தெரியவில்லை!

“என் உயிர் போனாலும் பரவாயில்லை… என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்..!” என்று கிராமத்தினரிடம் அவர் கெஞ்சும்போது, படம் பார்க்கும் நமக்கு மனம் கனக்க ஆரம்பித்துவிடுகிறது.

இவருக்கு இணையாக நடித்துள்ளார் மலையனாக நடித்த ஆதவன். தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸிடம் சிக்கி அவர் அடிவாங்கும் காட்சிகள் பெரும் துயரம். ஷீலாவின் தம்பியாக நடித்திருப்பவர் இறுதிக்காட்சியில் பெருங்குரலெடுத்து அழும்போது கலங்கிவிடுவோ நாம்!

குரூரமான காவல் அதிகாரியாக வினோத், இளகிய மனம் கொண்ட இளம் மருத்துவராக ஜாக்குலின் மற்றும் இன்ன பிற நடிகர்களும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள்.

ஜெகன் ஜெயசூர்யாவின் ஒளிப்பதிவு மேற்கு தொடர்ச்சி மலை, தேன் போன்ற படங்களை நினைவுபடுத்துகிறது. அழகான மலைகளையும், கலையும் மேகங்களையும் அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார். ஏறக்குறைய முழுப்படமும் ஓர் இரவில் நடப்பது போன்று எடுத்துள்ளனர். எப்படித்தான் அந்த மலை மேடுகளில் காமிராவை தூக்கிக் கொண்டு படம் பிடித்தாரோ ஒளிப்பதிவாளர்!

பாலசுப்ரமணியன், ராஜா ரவிவர்மாவின் இசையில் வைரமுத்து, யுகபாரதி, வினையனின் பாடல்கள் கதைக்கு வலுசேர்க்கிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

ஜனநாயக திருவிழாவாக சொல்லப்படும் தேர்தல் நாளன்று ‘என் வீட்டு புள்ளய காப்பாத்த யாருமே இல்லையா…?’ என வானத்தைப் பார்த்து ஷீலா கத்தும்போது, “லட்சம் ஜீவராசிகளை சுமக்கின்ற இந்த மலை இந்த பிஞ்சு உசுரை காப்பாத்தாதா” என ஒருவர் பதிலளிப்பது, எந்தளவுக்கு நுட்பமாக வசனம் எழுதியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

அதீத துயரம் தான் படத்தின் பலம் என்றாலும் அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் மலைவாழ் மக்களின் குரலை கவனப்படுத்தியிருக்கிறது.

மனைவியைப் பார்க்க ஓடிவரும் மலையனின் பெருமூச்சு, குழந்தையை பெற்றெடுக்கும் ஷீலாவின் கதறல் சத்தம் இந்த விமர்சனத்தை எழுதும்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுதான் கெவியின் வெற்றி!

logo
Andhimazhai
www.andhimazhai.com