‘தளபதி படம் வந்தா தள்ளிப்போய்தானே ஆகணும். அதுவும் அவரோட கடைசிப்படம்’ என்கிற அறிவிப்போடு, அடுத்த வாரம் வெளியாகவிருந்த ஜி.வி.பிரகாஷ்குமாரின் ‘இம்மார்ட்டல்’ படம் அடுத்த தேதி அறிவிப்பின்றி ஜகா வாங்கியுள்ள நிலையில் அப்படத்தோடு இன்னும் ஐந்தாறு படங்கள் பயபக்தியோடு ஒதுங்கி வழிவிட்டிருக்கின்றன.
வெகுகாலம் வெயிட்டிங்ணாவில் இருந்த விஜய்யின் ஜனநாயகன் அடுத்த வாரம் ஜூலை 23 ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது. ஒரு மாத காலத்துக்கு முன்பே இப்படம் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு ஒன்றரை கோடிக்கும் மேலானோர் பார்த்துவிட்டதாக சொல்லப்பட்டாலும் படத்தின் தியேட்டர் வரவேற்பு என்பது கொஞ்சமும் குறையவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 900 ஸ்கிரீன்களில் இப்படம் ரிலீஸாகவிருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில் இப்பட ரிலீஸுக்காக தங்கள் பட ரிலீஸை வெயிட்டிங்கில் வைத்திருந்த பலரும் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டெம்பர் மாத த்துக்கு தங்கள் படங்களை தள்ளி வைத்திருக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டிருப்பவர்களில் முதன்மையானவர் விஜய்யின் மகர் ஜேசன் சஞ்சய். அவர் இயக்கியுள்ள முதல் படமான ‘சிக்மா’ ஜூலை 31 அன்று ரிலீஸாகவிருந்த நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜி.வி.பிரகாஷின் ‘இம்மார்ட்டல்’, யோகிபாபுவின்’ அர்ஜுனன் பேர் பத்து’, மாதவனின் ‘ஜி.டி.என்’ போன்ற வேறு சில படங்களும் ஜனநாயகனுக்கு வணக்கம் வைத்து வழிவிட்டுள்ளன.