ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை! – ரஜினிகாந்த்

சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.

‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ அப்பாவை சமூக ஊடகங்களில் “சங்கி… சங்கி” என அழைப்பது தெரிந்தது. அப்பாவை சங்கி எனச் சொல்லும்போது கோபம் வரும். அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். ரஜினிகாந்த் சங்கி கிடையாது. மனிதநேயமிக்க ஒருவர்தான் இதில் நடிக்க முடியும்” என உணர்ச்சிவசமாக பேசினார்.

ஐஸ்வர்யாவின் இந்த பேச்சை வைத்து ரஜினியை பலரும் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினியைக் கண்ட பத்திரிகையாளர்கள் ஐஸ்வர்யாவின் பேச்சு குறித்து கேள்வியெழுப்பினர். இதற்கு, ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை. அனைத்து மதத்தையும் விரும்பும் ஆன்மீகவாதியான அவர் தந்தையை சங்கி என ஏன் சொல்கிறார்கள் என்கிற அவரின் பார்வையைத்தான் பேசினார். படத்தின் புரோமோஷனுக்காக பேசவில்லை. லால் சலாம் படம் சூப்பராக வந்துள்ளது. மத நல்லிணக்கத்தைப் படத்தில் பேசியுள்ளார்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com