தலைப்பு பழசு; படம் புதுசு – ரஜினியின் கூலி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது படத்துக்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான டைட்டில் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், படத்தின் தலைப்பை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், எடுத்ததுமே துறைமுகம் காட்டப்பட, அடுத்ததாக தங்க கட்டிகளையும், நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும், பணக் கட்டுகளையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவின் இடையிலிருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது. கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு, எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி உள்ளே வருகிறார்.
வழக்கமான மாஸ் சீன்களை கொண்டிருக்கும் இந்த வீடியோவில் கவனிக்க வைப்பது ரஜினியின் ‘ரங்கா’ திரைப்படத்தின் வசனம். “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பெண்ண சரியேன்ன எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே, எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே” என்ற வசனம் ஈர்க்கும் விதமாக உள்ளது.
பி.வாசு இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1996 ஆண்டு வெளியான ‘கூலி’ படத்தின் தலைப்பு மீண்டும் இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.