ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை, பெண் பாத்திரமாக மாற்றி தன்னை நடிக்க வைத்து விட்டதாக தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கலகலப்பாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரைக்கு வரும் படங்களில் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வைத்துள்ளது இந்த 'தாய் கிழவி’.
மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சரத்குமார், ராதிகா சரத்குமார், சூரி, இளவரசு, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ராதிகா பேசியதாவது: “இந்த படத்தை மூன்று நாள்களுக்கு முன்னர் கமல்ஹாசன் பார்த்தார். அவருடன் நானும் இருந்தேன். உண்மைய சொல்ல வேண்டும் என்றால் இந்த படம் ரஜினி நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார் என்பதால், என்னை இந்த வேஷம் போட்டு நடிக்க வைத்துவிட்டார்கள்.
4 மணி நேரம் மேக்கப் போடுவார்கள். கமல்ஹாசனுக்கு நன்றி சொல்கிறேன். ஒரு ரோலுக்கே இந்தளவுக்கு அழுவுகிறேன். ஆனால், அவர் எத்தனை ரோல் நடித்தார். இந்த கதையில் நான் நடிக்க கமல்ஹாசன் தான் காரணம். கதாபாத்திரத்தில் நாம் தெரியக்கூடாது என்பார் அவர். கால் உடைந்த வலியோடு படத்தில் நடித்தேன். இதற்கெல்லாம் ஹீரோ சிவக்குமார் முருகேசன் தான் காரணம். சிவகார்த்திகேயனுக்காகவே இந்த படத்தில் நடித்தேன்.
வலி உணர்ந்த பெண் சொல்லும் கதை தான் இது. பிள்ளைகள் பெற்றோரை எப்படி பார்க்க வேண்டும் என்ற மிகப்பெரிய செய்தியை சொல்கிறது படம். பெண்களைப் பற்றி என்னென்னவோ சொல்வார்கள். அதைப்பற்றி நாம் கவலையே படக்கூடாது. நம்முடைய இலக்கு சாதிப்பதில் தான் உள்ளது. மன தைரியம் எல்லோருக்கும் வரவேண்டும்.
என்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை. கமல் என்னிடம் சொன்னார், ‘எப்படியாவது இந்த படத்தை பாரதிராஜாவுக்கு காட்டு. கண்டிப்பாக அவர் எழுந்து வருவார்.” என்றார். அவர் நலம் பெற்றுவந்து இந்த படத்தை பார்ப்பார்.
எனக்கு கலையரசி பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. நான் சினிமாவுக்கு வந்தபோது என் தந்தையின் பெயரை போட விடாமல் தடுத்தார்கள். இன்று சொல்கிறேன் நான் என்.ஆர்.ராதாவின் பெண்.” என கலகலப்பாக பேசினார்.