தனுஷ்
தனுஷ்

இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? – தனுஷ் விளக்கம்

இளையராஜா, ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அதில் ஒன்று இப்போது நடந்து கொண்டிருப்பதாகவும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது.

தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர், சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘இளையராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே ப்ரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனுஷ் பேசியதாவது:

”இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து, மனதுக்குள்ளாகவே நடித்துப் பார்த்திருக்கிறேன். அதனால் பல இரவுகள் தூக்கம் தொலைத்திருக்கிறேன்.

இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒன்று இப்போது நடக்கிறது.

இளையராஜாவின் இசைதான் எனக்குத் துணை. ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்னர் இளையராஜாவின் இசையைக் கேட்பேன். அவரின் இசை அந்த காட்சிக்கு ஏற்ற மாதிரி என்னை நடிக்க வைக்கும். வெற்றிமாறன் ஒரு சில முறை இதை பார்த்திருக்கிறார்.

இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய சவால் என்கிறார்கள். எனக்கு அப்படித் தெரியவில்லை. ஏனெனில், இளையராஜாவின் இசையே சொல்லும் எப்படி நடிக்க வேண்டும் என.” என தனுஷ் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com