ஹைதராபாத் பறந்த ரஜினி... எதற்காக இருக்கும்?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தின் படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியானது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இந்த படத்தில் நடிக்க கூடிய நடிகர்களின் பட்டியலை லோகேஷ் கனகராஜ் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நாளை (ஜூலை - 5) தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, நடிகர் ரஜினி இன்று சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றார்.
அங்கு அவரை தெலுங்கின் முன்னணி ஹீரோவான மோகன்பாபு வரவேற்றார். ஹைதராபாத் விமான நிலையத்தில் ரஜினியும் மோகன்பாபுவும் ஒன்றாக நடந்து செல்லும் வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.
கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்படுவதால், பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளை முதலில் எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.