
ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அனைத்தையும் திரும்ப பெறுவதாக பதிவுத்துறைக்கு பட தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஜனவரி 9-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் அளித்து, மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி பி.டி. ஆஷாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக பதிவுத்துறைக்கு பட தயாரிப்பு நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.