
சென்னை புத்தகக் காட்சிக்கு வந்திருந்த கனடா தமிழ் எழுத்தாளரும்் 'காலம்' இதழாசிரியருமான செல்வம் அவர்களிடம் பேசினேன். பலமுறை இப்புத்தகக் காட்சிக்கு வந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்:
எனக்குப் புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். வெளிநாட்டில் உள்ளவர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா என்று வேறு வேறு நாடுகளுக்குச் செல்வார்கள்.ஆனால நான் அப்படிச் சுற்றுலா இடங்களைத் தேடிச் செல்வதில்லை. நான் புத்தகங்களைத் தேடிச் செல்பவன். எனது பயணத்தை புத்தக கண்காட்சி நடக்கும் நேரத்தில் வைத்துக்கொண்டு இங்கு வந்து செல்வதுண்டு.
இந்த ஆண்டு எனது மூன்று புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன. எழுதித் தீரா பக்கங்கள் , சொற்களில் சுழலும் உலகம்,பனி விழும் பனைவனம் என்கிற என் மூன்று புத்தகங்களைத் தமிழில் காலச்சுவடு பதிப்பித்திருந்தது. இப்போது அந்த மூன்று புத்தகங்களையும் ஆங்கிலத்தில் ஒரு பதிப்பகம் வெளியிட்டு வெளிவந்துள்ளன. அது சர்வதேச புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டன. அதைப் பார்ப்பதை முன்னிட்டும் எனது பயணம் இருந்தது என்று கூறலாம். மற்றபடி புத்தகங்களைப் பார்ப்பதில் எப்போதும் பெரிய சந்தோஷம் எனக்குக் கிடைக்கிறது. ஒரே இடத்தில் இவ்வளவு பதிப்பகங்கள், இவ்வளவு புத்தகங்கள் என்று பார்க்கிற போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் நீண்ட காலமாக இங்கு வந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது வருகிற புத்தகங்களின் தயாரிப்பைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக உள்ளது. தயாரிப்பின் தரம் மிகவும் மேம்பட்டு உள்ளது. தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்த பிறகு அட்டைகள் எல்லாம் மிக மிக அழகாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. உள்ளே எப்படி இருக்கிறது என்று வாங்கிப் படித்துப் பார்த்தால்தான் தெரியும். ஆனால் அட்டைகள் வடிவமைப்பு அத்தனை அற்புதமாக உள்ளது. இதற்கு முன் 2018, 2019 ,2023 என்று இங்கே வந்தேன். கொரோனா சமயத்தில் மட்டும் வரவில்லை.
ஆண்டுக்கு ஆண்டு கண்காட்சியில் அரங்கங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கின்றது. முன்பெல்லாம் தினசரி கூட்டம் கூடும். இப்போது சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மட்டுமே கூட்டம் இருக்கிறது.முன்பு வந்தபோதெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கும். அரங்கில் நுழைந்ததுமே அந்த வெப்ப மணத்தை முகர்ந்து பார்க்க முடியும். அந்த அளவிற்கு புழுக்கமாக இருக்கும் .இப்போது காலநிலை இதமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் வசதிகளும் இப்போது மேம்பட்டிருந்தன. இதற்கு பபாசிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இப்போது காலநிலை இதமாக மிகவும் குளிர்ச்சியாக இருந்தது . வேர்க்கவில்லை.அது ஒரு மகிழ்ச்சியான விடயம்.புத்தக அரங்குக்கு ஒதுக்கிய இடத்தை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்த வேண்டும். நான்கு பேர் நின்றாலும் நிரம்பிவிடுகிற அளவுக்கு சின்னச் சின்ன அரங்கங்களாக இருக்கின்றன.
வசதியான பதிப்பகங்களின் அரங்கம் பெரிதாக இருக்கின்றது. சின்னஞ்சிறிய பதிப்பகங்களுக்கு நான்கு பேர் வந்து நின்றாலும் நிரம்பிவிடுகிறது. தாராளமாக வந்து பார்த்து வாங்குகிற அளவுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
இந்த ஆண்டு இங்கே புத்தகக் கண்காட்சிக்கு வந்தபோது எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரைப் பார்த்தேன் .சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு மகிழ்ச்சி.
எவ்வளவோ பேர் மக்கள் வந்து புத்தகங்கள் வாங்குகிறார்கள். மக்கள் புத்தகங்களைப் பார்ப்பது,வாங்குவது அதையெல்லாம் நாம் பார்ப்பது ஒரு சந்தோஷமாக இருக்கிறது.
தரையெல்லாம் மிகவும் சமன் செய்யப்பட்டு தரை விரிப்புகள் போட்டு இதமாக இருந்தது. போன முறையை விட நல்ல முன்னேற்றம் தெரிந்தது. முன்பு கழிப்பறை துர்வாசனை வீசும் .இப்போது அதைக் காணவில்லை. பொதுவாகவே சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தது.இதற்கு அமைப்பாளர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. மக்களும் இந்த விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும்.
புத்தகம் யாரும் வாசிப்பதில்லை என்று யாராவது சொல்லும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் .இவ்வளவு பேர் வருகிறார்கள், இவ்வளவு புத்தகங்கள் வாங்குகிறார்கள். நான் பார்க்கப் பார்க்க இந்தக் கூட்டம் கூடிக் கொண்டுதான் போகிறது.இப்போது யாரும் வாசிப்பதில்லை என்பது தவறான கருத்து.நானும் 20 வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த கூட்டம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.புத்தகம் வாசிக்கிற ஆட்களின் வீதம் குறைந்துவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.நேரில் வந்து பார்க்கிறபோதுதான் தெரிகிறது.
வாசிக்கிற வீதமும் புத்தகம் வாங்குகிற வீதமும் கூடிக் கொண்டே போவதாகத் தான் நான் உணர்கிறேன் .எத்தனை விதமான புத்தகங்கள்,எத்தனை அழகான தலைப்புகள், எத்தனை அழகான அட்டைகள், வடிவமைப்புகள். அழகழகான புத்தகங்கள்.இப்போது தமிழில் அச்சுத்தரம் மெல்லமெல்ல சர்வதேசத் தரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
நான் கனடாவில் ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை'வாழும் தமிழ் 'என்கிற பெயரில் கண்காட்சி வைப்பேன்.ஆனால் புத்தகங்கள் குறைவுதான்.நான் செய்வதைப் பார்த்து பெரிய அமைப்புகளும் இப்போது செய்யத் தொடங்கி இருக்கின்றன.ஒரு சமூகக்கூடம் போல் ஒரு கூடத்தை எடுத்து நான் தனியாகத்தான் அதைச் செய்வேன். 17 அல்லது 18 மேசைகள் அடுக்கி செய்வதுண்டு. அங்கே எழுத்தாளர்களுடன் உரையாடல்கள், கருத்தரங்குகள் போன்றவை இருக்கும். இலங்கையில் இருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் எழுத்தாளர்கள் வருவதுண்டு.
கனடாவில் நடக்கும் இயல் விருது விழாவை ஒட்டி ஒரு கண்காட்சி நடத்துவேன். அப்போது நிறைய எழுத்தாளர்கள் வருவதுண்டு.
தமிழ்நாட்டில் இருந்து சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் பிரபஞ்சன்,ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுகுமாரன் , இமையம் என்று அங்கே வராத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அதன் பிறகு இரண்டு மூன்று முறை தனியாக நடத்துவேன்.
இப்போது அங்கே பனி விழும் காலமாக இருக்கிறது.இந்தப் பனிக்காலம் முடிய மூன்று நான்கு மாதங்களாகும்.அந்தக் காலங்களில் எதுவும் செய்ய முடியாது.எனவே பனிக்கால முடியும்போது அடுத்த கண்காட்சி மார்ச்சில் நடத்துவேன்.அப்படிப்பட்ட கண்காட்சியில்
புத்தகங்கள் விற்பது என்பதை விட நண்பர்களைச் சந்திப்பது பெரிய மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். கனடாவில் எண்ணிக்கையில் நம் ஆட்கள் குறைவுதான். அதனால் புத்தகங்களை விற்பதற்கு உரிய சந்தை வாய்ப்புகள் இல்லை. எனவே சுருக்கமாகத்தான் செய்ய முடியும்.
புதிய தலைமுறையினர் தமிழைப் படிப்பது அங்கே குறைந்து வருகிறது. எங்களைப் போன வயதான ஆட்கள் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அங்கே தமிழை வாசிக்கும் தலைமுறையினர் குறைந்து வருகிறார்கள் என்று கூறுவது உண்மைதான். எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று தெரியவில்லை. நாம் வயதானவர்கள் நமது கடமையைச் செய்து கொண்டிருப்போம் அவ்வளவுதான். ஆனால் தமிழ்ப் பற்றும் தமிழ்க் கலாச்சாரமும் குறைந்துவிடவில்லை. கூடிக்கொண்டு தான் இருக்கிறது.
கனடாவில் ஒரு மாதமே தமிழ் மாதமாக வழங்கியிருக்கிறது. கனடிய மாநில அரசு.தமிழர்களைச் சேர்ந்த இரண்டு மூன்று மந்திரிமார்கள் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட சூழலில் இருந்து இங்கு வந்து புத்தகக் கண்காட்சி என்கிற சமுத்திரத்தில் கலந்து கொண்டு விட்டு நானும் கரையேறியது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.