நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்
Published on: 
Summary

மானுடத்தின் குரல்

மானுடத்தின் குரல்

உறவுகளை, நட்புகளை, சமூகத்தை பணத்தைக் கொண்டே மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நாம். அந்த பணம் சில நேரங்களில் செல்லாத பணமாக, எந்த மதிப்புமற்ற வெற்றுக் காகிதமாக ஆகிவிடும் தருணங்களை தொட்டுக் காண்பித்திருக்கிறார் எழுத்தாளர் இமையம். முதல் வரியிலேயே கதையைத் தொடங்கி விடும் இந்த நாவல் புதை குழி போல  ஆழமாய் சரக்கென்று நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. பொறியியல் படித்த ரேவதிக்கு ஆட்டோ ஓட்டும் ரவியை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. இந்தக் காதலும், திருமணமும் அதற்குப் பிறகான தீக்குளிப்பும் நம்மைச் சுற்றி தினமும் நடந்து கொண்டிருப்பவை. ஆனால் அவற்றை இமையத்தின் வரிகளில் படிக்கும் போது சில சமயங்களில் புத்தகத்தை பிடித்திருக்கும் கை நடுங்குகிறது, பல சமயங்களில் கண்களில் திரளும் கண்ணீர் தொடர்ந்து படிக்க விடாமல் செய்கிறது. காதலை புனிதப்படுத்தவும் செய்யாமல், இகழவும் செய்யாமல் இப்படித்தான் நாட்டில் நடக்கிறது என்று கதையைச் சொல்லி எழுத்தாளரும் வாசகரைப் போல தள்ளி நின்று கொள்கிறார். மனதில் எழும் எந்தக் கேள்வியையும் எழுத்தாளரிடம் கேட்க முடியாது. சமூகத்திடம்தான் கேட்க வேண்டும்.

மருத்துவமனையின் வாசம் நம்முடைய மூளையில் உறையும் நேரத்தில், தன்னுடைய ஆடுகளை விற்கும்போது அவை கதறி வீறிடும் நேரத்தில் தான் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததால்தான் தன்னுடைய பெண் தீயில் விழுந்திருக்கிறாள் என்ற மலரின் அழுகை, கதையிலிருந்து மேலெழும்பி மானுடத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்குகிறது.  நிகழ்வுகளை தகப்பனின் பார்வையில் இருந்து அணுகியிருக்கும் ஆசிரியர் காதலுக்குப் பின்னுள்ள  சாதிய வேறுபாட்டையும் உணர்த்தத் தவறவில்லை. ‘ சோத்துல என்ன சாவு சோறு , கல்யாண சோறுன்னு, எல்லாம் ஒன்னுதான்' என்ற வரிகள், நாவலின் தரிசனத்தை நமக்கு அளித்துவிடுகின்றன.

செல்லாத பணம், இமையம்,  வெளியீடு: க்ரியா, 2/25, 17 வது கிழக்குத்தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை -41 பேச: 7299905950 விலை: ரூ 285

அசலான பதிவுகள் 

பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த எளிய விளிம்பு நிலை மக்களைக் கொண்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பு. கருணாகரன் தன் கிராமிய வாழ்க்கை நினைவுகளை அச்சு அசலான மனிதர்களாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது வாழ்வின் அச்சு இவற்றில் பதிந்திருப்பதால் உயிர்ப்புடன் இருக்கின்றன இக்கதைகள். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிராமத்தானின் டைரிக் குறிப்புகள் என்ற கதையைச் சொல்லலாம். அழகான குறும்படத்துக்கான கதை. தந்தையின் தொழிலான சவரக்கத்தியை எடுக்க மறுக்கும் சிறுவன், நகரத்தில் படிப்புச் செலவுக்காக சலூனில் வேலை செய்கிறான். அதைப் பார்த்து வருத்தப்படும் தந்தையிடம் அவன் சொல்லும் வார்த்தைகள் இன்றைய இளைய தலைமுறைக்கு சிறந்த பாடம். தப்புக்கடல என்ற கதையை தமிழகத்தின் நடுப்பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் நெருக்கமாக உணர்வார்கள். அதுபோலத்தான் கருப்பந்தட்டை கதையும். ஆனால் மானுட உணர்ச்சிகள் பொதுவானவை என்பதால் இதில் வரும் மிராசுதார் மற்றும் ஒரு தாயாரின் உணர்வுகளை உலகமே புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற பல கதைகள் அடங்கிய சிறப்பான தொகுப்பு இது.

தப்புக்கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம்,

73/31, பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம்,

சென்னை 600033.

பேச: 9500061601 விலை ரூ 150.

புதிய வாசிப்பனுபவம் 

இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் அகரமுதல்வனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு பான்கி மூனின் றுவாண்டா. மொத்தம் பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கதைகளின் பிரதான மையம் இலங்கையில் நடந்த தமிழ் - சிங்களருக்கிடையேயான இனப்போரும் அதன் பின் விளைவுகளும்தான். ஈழத்துப் படைப்பாளிகளுக்கேயுரிய சொல் முறைகளும் சம்பவங்களும் நிறைந்து கிடைக்கின்றன. கவிஞரான அகர முதல்வன் தன் கதைகளின் வர்ணனைகளை கவித்துவத்துடன் எழுதிப்போகிறார். ஈழப் பயன்பாட்டு மொழியுடன் கவித்துவம் சேரும்போது ஒரு புதிய வாசிப்பனுவம் கிடைக்கிறது. பெரும்பாலான ஈழ எழுத்துக்காரர்களை துரத்தும் ஈழவிடுதலை என்னும் பெருங்கனவு அகரமுதல்வனையும் துரத்திக்கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியமே இந்தத் தொகுப்பு. தொகுப்பின் முக்கியமான பல உள்ளடுக்குகளைக் கொண்ட கதை என்று கரை சேராத மகள் என்னும் கதையைச் சொல்லலாம். இன்னும் பல கதைகள் அடுத்தடுத்த வாசிப்பில் நமக்கு மாறுபட்ட வாசிப்பனுவங்களை  தரும் என்று நம்பலாம்.

பான்கி மூனின் றுவாண்டா - அகர முதல்வன் கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் இல்லம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை,

 சென்னை -14

பேச: 044 - 42009603 விலை: ரூ. 120

இஸ்லாமின் பெருமை

இஸ்லாம் மார்க்கம் உலகம் முழுக்க விவாதப் பொருளாக உள்ள நிலையில் அதுகுறித்த அடிப்படையான விஷயங்களை எளிய தமிழில் அதேசமயம் ஆழமாக எழுதி வெளியிட்டுள்ளார் இதழாளரும் எழுத்தாளருமான பாத்திமா மைந்தன். இறை நம்பிக்கை,தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்னும் ஐம்பெரும் கடமைகள் மீது கட்டப்பட்ட உறுதியான மாளிகை இஸ்லாம் என்று அறிவிக்கிற இவரது ஆற்றொழுக்கான எழுத்தில் இம்மார்க்கத்தின் அழகுகளை அறிந்துகொள்ள முடிகிறது. ஸலாம் கூறுவதன் மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்கிற நபிகளின் பொன்மொழியைக் கூறி ஸலாம் என்ற சொல்லின் மேன்மையை உரைக்கிறார். உலகளாவிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கிய உன்னத மார்க்கம் இஸ்லாம் என்கிற நூலாசிரியர் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிற திருமறையின் உயர்வான வாசகங்களை எடுத்துக்காட்டுகிறார். இது போன்ற அங்கங்கே ஒளிரும் வாசகங்களுகாகவே இந்த நூலைப் பத்திரப்படுத்தி வாசிக்கலாம்!

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன், வெளியீடு:

தினத்தந்தி பதிப்பகம், 86, ஈவிகே சம்பத் சாலை,

வேப்பேரி, சென்னை-7

பேச: 044-25303336. விலை: ரூ. 150

அறியப்படாத கதைக்களன்

நரன் கவிஞராக பரவலான வாசிப்பு கவனம் பெற்றவர். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு கேசம். மொத்தம் பதினோரு புனை கதைகள். சரளமும் தீவிரமும் கொண்ட புனைகதை மொழி நரனுடையது. கதை மாந்தர்களிடையே நடக்கும் சாதாரண சம்பவங்கள் அல்லது உரையாடல்கள் கூட நரனின் கவித்துவமானதொரு மயக்கும் மொழியில் அசாதாரண அர்த்தம் கொண்டுவிடுகின்றன. கதைகளை சொல்லத் தேர்ந்தெடுத்த பூடகமும் கவித்துவமும் பின்னிப் பிணைந்த மொழி இந்தக் கதைத் தொகுப்பை கவனிப்புக்குள்ளாக்குகிறது. கதைகள் நிகழும் நிலப்பரப்பு, கதைகளின் சம்பவங்கள் நமக்கு அளிக்கும் நேரிடையான அர்த்தத்திற்கு அப்பாலான இன்னொரு கோணத்தில் விரியும் அர்த்தத் தளம் ஆகியவை மொழியின் பாய்ச்சலோடு சொல்லப்பட்ட இந்தக் கதைகளை முக்கியமானதொன்றாக்குகின்றன. கடந்த கால வாழ்வின் அனுபவங்கள் நரனால் கதையாக மீள கூறப்படும்போது ஒருவித அசாதாரணத்தன்மையும் அமானுஷயமும் கூடிய கதைகளாக நம்மை வந்தடைகின்றன. வளமான  தமிழ் மொழியின்  ரஸவாதம் இது. திகட்டாத கதைக்களன்கள் அல்லது அதிகம் சொல்லப்படாத கதைக்களன்கள் வாசிப்பின் தீவிரத்தைக் கூட்ட முயற்சிக்கின்றன. வலிமிகுந்த அனுபவங்கள் மொழியின் கூர்மையோடும் வன்மையோடும் புனைகதைகளாக்கப்பட்டுள்ளன.  பெண் காது, கேசம், மரிய புஷ்பத்தின் சைக்கிள், செவ்வக வடிவ பெண்கள் என பெரும்பாலும் பெண்களை மையமிட்ட கதைகள் நிறைந்த தொகுப்பு என்ற அளவிலும் முக்கியமான தொகுப்புதான் இது. நரனின் இந்தத் தொகுப்பு ஒரு காத்திரமான புது வரவு என்று சர்வ நிச்சயமாகச் சொல்லமுடியும்.

கேசம்:

நரன், சால்ட் வெளியீடு, 115, எம்.ஏ.எஸ். ரெசிடென்ஸி அபார்ட்மெண்ட்ஸ், எஸ் 3, இரண்டாவது தளம், கோடம்பாக்கம். சென்னை - 24.

பேச: 89394 09893  விலை: ரூ 125

மின்னஞ்சல்: saltpublications@gmail.com

பிப்ரவரி, 2018.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram