
சோம.வள்ளியப்பன் எழுதியிருக்கும் ‘திட்டம் எண் 6’ என்ற இந்நாவல் மனித சமூகத்தின் நீண்ட வரலாற்று நகர்வைப் பேசுகிறது. ராகுல் சாங்கிருத்யாயன், “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலில் மனித சமூகம் தோன்றி போராடி வளர்ந்த வரலாற்றின் வழித்தடத்தை புனைவு வடிவத்தில் கதை அடுக்குகளாக எழுதிக்காட்டியிருக்கிறார். மாறாக இந்நாவலில் சோம.வள்ளியப்பன் திண்ணையில், களத்துமேட்டில் அமர்ந்து மூத்த முதியோர்களால் பழங்காலத்து நிகழ்வுகளை உரையாடுதல் வழி வெளிப்படுத்துவதைப்போல காலமாற்றங்களைத் தொகுத்துச் சொல்கிறார். பிரம், சிவ், மகா என்ற முக்கடவுளர்கள் முன்னிலையில் திட்ட அறிக்கை வாசிக்கப்படுகிறது. முத்தொழில் கடவுளரின் பெயர்கள் நவீனகாலத்திற்கு ஏற்றபடி சுருக்கப் பெயர்களாக இருக்கின்றன. கணினியை மிக நன்றாகக் கையாளத் தெரிந்த திட்ட இயக்குநர், தணிக், தொந்தரவு, சாது முதலானவர்கள் அவ்வப்போது பூமியில் நடக்கும் பிரச்னைகளை எடுத்துவைக்கின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களின் கடவுளர்கள் விளக்கங்கள் கேட்கின்றனர். பழைய மனித சமூகத்தில் நடந்த முக்கியமான மாற்றங்களைக்குறித்து உரையாடுகின்றனர். விளக்கங்கள் கேட்கின்றனர். உதவியாளர்கள் பதில்களைத் திரட்டிச் சொல்கின்றனர். இதில் சரஸ்வதி, லெட்சுமி, எமன், சித்திரகுப்தன் முதலியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை எடுத்து விவாதிக்கின்றனர்.
ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசும்போது கணினியில் அதற்குத் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்டுவந்து தருகின்றனர். பழைய வடிவத்திற்குள் புதிய விசயங்களைப் பேசுகிறது நாவல். பூமியில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்த நாளிலிருந்து இன்றைய நாள்வரைக்கும் நடந்த முக்கியமான விசயங்களை இந்நாவல் விவாதிக்கிறது. மனித சமூகம் கண்ட எழுச்சியையும் வீழ்ச்சியையும் இவர்களின் உரையாடல்வழி தருகிறார். அறிவியல் தொழில்நுட்பங்கள் மனித சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை மனிதவாழ்வில் ஏற்படுத்திய விளைவுகளை வெள்ளை அறிக்கைபோல இந்த நாவலில் தந்திருக்கிறார்.
-சு.வேணுகோபால்
வெளியீடு: ஸ்னேகா பதிப்பகம், 8, ரமணி நகர் மெயின் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை 600 045. பேச: 98409 69757