இமையம் எழுதிய இப்போது உயிரோடு இருக்கிறேன் என்ற நாவல் ‘ I am alive for now’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பிரபா ஸ்ரீதேவன் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது. இந்த ஆங்கில நூல் குறித்த உரையாடல் நிகழ்வு ஒன்று நேற்று ‘மெட்ராஸ் புக் கிளப்’ சார்பாக நடத்தப்பட்டது. மொழிபெயர்ப்பாளர் பிரபா ஸ்ரீதேவனுடன் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் கலந்துரையாடினார். நூலாசிரியர் இமையமும் கலந்துகொண்டு தன் கருத்துகளைப்பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரபா ஸ்ரீதேவன் இப்போது உயிரோடு இருக்கிறேன் நாவலில் முதல் பக்கத்தை தமிழில் வாசித்தார். அதையே ஆங்கிலத்திலும் வாசித்தார். இரண்டிலும் இறுதியில் அய்யோ அம்மா! என்று வருவதை அப்படியே அவர் உரக்க உச்சரித்துக் காட்டினார்.
‘இந்த நாவல் ஒரு பதினைந்து வயது சிறுவனின் பார்வையில் செல்லக்கூடியது. எந்த இடத்திலும் அவன் தனக்கே உரிய சிந்தனைப்போக்கை தாண்டவில்லை. பெரிய மனிததனமாக சிந்திக்கவில்லை. இமையம் மிகக்கவனமாக எழுதி இருந்தார். அந்த அளவுக்கு எளிமையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். நானும் அதுபோன்றே கடினமில்லாத ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறேன்!’ என்று கூறினார் பிரபா ஸ்ரீதேவன்.
‘இந்த நாவலில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனின் பார்வையில் அந்த முழு சூழலும் பதிவாகின்றன. தலையில் கட்டி வந்து வலியால் துன்புறும் ஒரு சிறுமி இவனது பக்கத்து பெட்டில் இருக்கிறாள். இரவு முழுக்க அவளது அம்மா கொஞ்சம் பொறுத்துக்கம்மா.. கொஞ்சம்பொறுத்துக்கம்மா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அந்த கொஞ்சம் பொறுத்துக்கம்மா என்பதை என்னால் ஆங்கிலத்தில் கொண்டுவரவே முடியவில்லை. முடிந்தவரை செய்திருக்கிறேன்’ என தன்னடக்கமாக அவர் குறிப்பிட்டார்.
‘நீங்கள் வழக்கறிஞர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர். இமையத்தின் இந்நாவலில் மருத்துவமனை உள்ளிட்ட அமைப்புகளின் செயல்படாத் தன்மை விமர்சனத்துக்குள்ளாகிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்றொரு கேள்வியை கவிதா வீசினார்.
சற்று யோசித்த பிரபா ஸ்ரீதேவன்,’’ அமைப்புகளின் மீதான விமர்சனம் எங்கும் இருகவே செய்கிறது. காப்புரிமை தொடர்பான வழக்குகளில் பார்த்திருக்கிறேன். ஒரு வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒருமாத மருந்து செலவுக்கு 1,48000 ரூபாய் கோரியது. அதே மருந்தை இந்திய நிறுவனம் ஒன்று 8000 ரூபாய்க்கு அளிக்க முன்வந்தது. நம்மில் யாருமே மாதம் 1,48,000 ரூபாய் ஒரு மருந்துக்காக செலவழிக்க முடியுமா? 8000 செலவழிப்பதே சிரமம்… இந்த நாவலிலும் மருத்துவமனையின் செயல்பாடுகள் விவரிக்கப்படுகின்றன…. ஒவ்வொரு நாளும் மொழிபெயர்ப்பை முடிக்கையில் அதன் உணர்வுகளால் பாதிக்கப்பட்டு அய்யோ அம்மா என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன்...’’ என்றார்.
இறுதியாக இமையம் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ‘நான் கதைகளைப் பண்ணுவதில்லை. என்னை சுற்றி இருக்கிற மனிதர்களை எழுதுகிறேன். மருத்துவம் தொடர்பாக இரு நாவல்களை எழுதி இருக்கிறேன். சில சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். பாண்டிச்சேரி மருத்துவமனையின் தீக்காய வார்டுக்குள் ஒரு மணி நேரம் இருந்தேன். அதை வைத்து உருவானதுதான் செல்லாத பணம் நாவல். சிறுநீரக மருத்துவமனையுடன் எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து உருவானதுதான் இப்போதும் உயிருடன் இருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாக எழுதுகிறார்கள். நானும் ஒரு ரகம் என்று வைத்துக்கொள்ளுங்கள்! செல்லாத பணம் நாவலில் ஒரு மருத்துவர் இனி இப்பணம் செல்லாது என்பார். இந்த நாவலில் ஒரு மருத்துவர் உன்னிடம் எவ்வளவு காசு இருக்கிறதோ அவ்வளவு நாள் உயிரோடு இருக்கலாம் என்பார்… அப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை. காசு இருந்தால் இறப்பதற்கு சிரமப்படணும். பல நாட்கள் உயிருடன் வைத்திருப்பார்கள். காசு இல்லையென்றால் பட்டென்று போய்விடும்..’ என்று பல்வேறு விஷயங்களைத் தொட்டு முடித்தார்.