உன் பணத்தை நான் சம்பாதிப்பேன். ஆனா என் படிப்பை நீ படிக்க முடியுமா? - விவாதத்தை கிளப்பிய வாழ்க்கை அனுபவங்கள்!

உன் பணத்தை நான் சம்பாதிப்பேன். ஆனா என் படிப்பை நீ படிக்க முடியுமா? - விவாதத்தை கிளப்பிய வாழ்க்கை அனுபவங்கள்!

வாழ்க்கைக்கு கல்வி முக்கியமா? செல்வம் முக்கியமா? என்ற விவாதம் எப்போதும் முற்றுப்பெறாத ஒன்று. சாமானியர்கள் தொடங்கி, சாமியார்கள் வரை பலருக்கும் பல கருத்து இருக்கலாம்!

தற்போது, இது தொடர்பான முகநூல் விவாதம் கவனத்தை ஈர்த்துள்ளது. எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன் நேற்று தனது முகநூல் பக்கத்தில் “படித்து உருப்படாமல் போகிற வர்க்கம்” என்ற தலைப்பில் நீண்ட பதிவு ஒன்று எழுதியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து நியாண்டர் செல்வன் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை எழுதியிருக்கிறார்.

விவாதத்தை கொளுத்திப் போட்ட எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன் பதிவிலிருந்து...

“கல்வி தான் மனித குலத்தை முன்னேற்றும், ஏழ்மையில் இருந்து காப்பாற்றும், விடுவிக்கும் போன்ற புத்தொளிக் கால லட்சியங்கள் பாதி உண்மை மட்டுமே. சொல்லப் போனால் கல்வி நம்மை ஒரு பொறிக்குள் மாட்ட வைத்துவிடும் எனத் தோன்றுகிறது. நான் இதை என் வாழ்க்கையில் இருந்தே புரிந்துகொண்டேன்.

நான் முன்பு ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த போது அங்கு நிறைய மார்வாரி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு இளங்கலை வகுப்பில் ஒரு மாணவன் என்னிடம் சீண்டலாகக் கேட்டான். “சார் நீங்க ஒரு மாதம் எவ்வளவு சம்பாதீப்பீங்க?” அசிங்கமாக இருக்கும் என்பதால் நான் சொல்லவில்லை. அவன் என் மௌனத்தைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி சொன்னான், “சார் உங்க ஒரு மாச சம்பளத்தை நான் பத்து நாளில் சம்பாரிச்சிருவேன்.” எனக்கு கடுமையான எரிச்சல் வந்தது. அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவனை அழைத்து அவன் என்ன சொல்ல வருகிறான் எனக் கேட்டறிந்தேன். அவனுடைய அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். அதில் அவன் பள்ளி மாணவப் பருவத்திலேயே மாலையானதும் போய் உட்காருவான். இது அவனது சின்ன வயதுப்பழக்கம். இப்போது அவன் கல்லூரியில் மதிய வகுப்புகளில் இருப்பதால் அவனுக்கும் காலையிலும் மாலையிலும் இரவு மணி 10 வரை கடையில் இருந்து வியாபாரம் பார்க்க முடிகிறது. அவன் பணம் சம்பாதிப்பதன் நுணுக்கங்களைக் கற்று வருகிறான். அதை வைத்தே அவன் என் மாத சம்பளத்தை தன்னால் விரைவில் ஈட்டிவிட முடியும் என நம்பிக்கையுடன் கூறினான். அவனிடம் இருந்த கேள்வி பணமே உலகின் அச்சாணி, அவனால் தன்னுடைய அறிவையும் திறனையும் வைத்து அப்பணத்தை ஈட்ட முடியும் போது அவன் எதற்காக என்னைப் போன்ற ஆசிரியரிடம் இருந்து மொழியையும் இலக்கியம், தத்துவத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. நான் அவனிடம் கூடுதலான அறிவு அவனுடைய வியாபாரத் திறனை மேம்படுத்தும் என்று கூறி ஆற்றுப்படுத்தினேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய அந்த நம்பிக்கையும் தளர்ந்து வருகிறது. இன்று மிகச்சிறந்த கல்வி நிலையங்களை நடத்துபவர்கள் பெரும்பாலானோர் படித்தவர்கள் அல்ல. இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் சிலர் சொற்பமாகப் படித்தவர்களே, சரிவர ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களோ, புத்தகம் படிப்பவர்களோ அல்ல. அதானி ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவை ஆள்பவர்கள் எவரும் படித்தவர்கள் அல்ல. படிப்பின் காலம் முடிந்துவிட்டதெனத் தோன்றுகிறது.

அபிலாஷ் சந்திரன்
அபிலாஷ் சந்திரன்

இன்னொரு பக்கம் கல்வி நம்மை பொருளாதார ரீதியாக முடக்கி விடுகிறது. அது நமது சம்பாத்திய திறன் குறித்து ஒரு தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது,” என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தன் நீண்டபதிவின் இறுதியில்

”இத்தனை இத்தனை அடிமைகளை உற்பத்தி பண்ணுகிற கல்வியமைப்பை, பள்ளிகள், கல்லூரிகளை, படிப்பை, ஒரு குழந்தை தன் வாழ்வின் முதல் 22 ஆண்டுகளை வீண் உழைப்பில் செலுத்துவதை நாம் ஏன் இவ்வளவு கொண்டாடுகிறோம் என எனக்குப் புரியவில்லை.” எனவும் கூறி இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்து தொடர்ந்து எழுதி வரும் நியாண்டர் செல்வன் எழுதி உள்ள பதிவில், "படிப்பை விட சொந்த தொழில் மேல்" என்பது போல அபிலாஷின் பதிவை பார்த்தேன். காரணம் அவரிடம் படிக்கும் மார்வாரி பையன் ஒருவன் "உங்க சம்பளத்தை நான் 10 நாளில் சம்பாதிச்சிடுவேன்" என சொன்னதுதானாம்

நியாண்டர் செல்வம்
நியாண்டர் செல்வம்

இந்தியாவில் நான் சுயநிதி கல்லூரியில் ஆசிரியராக இருந்த சமயம் எனக்கு 2500 ரூ சம்பளம். அப்போது ஆம்வே நல்ல பிரபலமாகிக் கொண்டிருந்தது. ஆம்வேயில் என்னுடன் பணியாற்றிய சில ஆசிரியர்கள் தீவிரமாக இருந்தார்கள். ஒருவர் என்னை ஆம்வே மீட்டிங்குக்கு அழைத்துப்போனார். அங்கே சபாரி போட்டுக்கொன்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். தாதா ஒருவரை அடியாட்கள் வணங்குவது போல அவரை எல்லாரும் வணங்கினார்கள். கேட்டதுக்கு "இவர் ஒரு பாக்டரியில் வாட்ச்மேன். இப்ப ஆம்வேயில் மாதம் ரூ.20,000 சம்பாதிக்கிறார். இவரது பேக்டரியில் எல்லாரையும் ஆம்வெயில் சேர்த்துவிட்டார்" என்றார்கள்.

அதன்பின் அவரிடம் பேசுகையில் "ஆம்வே எல்லாம் பித்தலாட்டம்" என சொல்லி பிரமிடு மார்க்கடிங் முறையை அவரிடம் விளக்கினேன். அவருக்கு அதை மறுத்து பேசும் அளவு விவரம் போதவில்லை. கடுமையான கோபத்துடன் "இத்தனை அறிவு இருந்தும் எதுக்கு என்னை விட குறைவா சம்பாதிக்கறிங்க?" என கேட்டார்.

"ஐயா நாளைக்கு உங்களை விட அதிகமா என்னால் சம்பாதிக்கமுடியும். ஆனா உங்களால் என் படிப்பை படிக்கமுடியுமான்னு யோசிச்சுக்குங்க"னு சொல்லிட்டு வந்துட்டேன்.

நான் அபிலாஷா இருந்தால் அந்த மாணவனிடம் இதைத்தான் சொல்லி இருப்பேன்.

'சரி தம்பி. பத்து நாள் டயம் தர்ரேன். போய் என் சம்பளத்தை சம்பாதிச்சுட்டு வா. ஆனால் ஒரு கண்டிசன்"

'என்ன?"

"உங்க அப்பா சம்பாத்தியத்தில் உருவாக்கின கம்பனில உக்காந்துட்டு சம்பாதிக்ககூடாது. அவர் காசை முதலீடா வெச்சும் சம்பாதிக்ககூடாது. உன் அறிவு, திறமை இதை மட்டும் முதலீடா வெச்சுட்டு சம்பாதிச்சுட்டு வா. உன்னை பிசினஸ் பிஸ்தாக்கள் நு ஒத்துக்கறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிஞர் கண்ணதாசன் “கல்வியா செல்வமா வீரமா” என பாடல் எழுதி அதில் கல்வியையே முதலில் வைத்தார்! என்ன சொல்றீங்க?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com