ரயிலில் வந்த மண்வாசனை!

இயக்குநர் பாரதிராஜா நினைவுகள்
ரயிலில் வந்த மண்வாசனை!
Published on

ஒவ்வொரு திரைப்பட நிறுவனத்தின் அறிமுகம் திரையில் தெரிகிறபோது, நம் மனதில் இனம் புரியாத உணர்வலைகள் ஏற்படும். பாலசந்தர் படம் என்றால், திருவள்ளுவர் சிலை திரும்பிக்கொண்டு இருக்கும் போது, “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”

என்ற கம்பீரக் குரலில் அப்பாடல் இசையாய் ஒலிக்கும். ஏவிஎம் நிறுவனமென்றால் ஒரு கிளாரினெட் இசை நம் மனதில் பதிவதுபோல் ஒலிக்கும். ஆனால் படம் தொடங்கும்போது சிங்கம் போன்ற ஒரு கம்பீர குரல், “என் இனிய தமிழ் மக்களே” என்று ஒலிக்கும் போதே திரையரங்கில் கரவொலி பரவும். “உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்” என்று தன் பெயருக்கு கரவொலி வாங்கிய முதல் இயக்குநர் பாரதிராஜாதான்.

ராசையா இளையராஜா ஆனதுபோல், பால்பாண்டியன் பாரதிராஜாவாக மாறினார். அவரது முதல் வெற்றியின் அடிநாதம் “மயில், ஜெயில், ரயில்.” மயில் என்ற கதை “பதினாறு வயதினிலே” என்று உருமாறி, திரை உலகின் பல செயற்கை பாரம்பரியங்களை உடைத்தெறிந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தின் அறிவியல் இயக்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நான் பணியாற்றிய போது, அவரை மதுரை விமான நிலையத்திற்குச் சென்று அழைத்து வரும் பணி எனக்கு வழங்கப்பட்டது.

அப்போது மதுரை விமான நிலையத்தில் கிராமத்து மக்கள், காது வளர்த்த ஆயாக்கள், வயதான கிராமத்து மனிதர்கள் பலரைக் கண்டேன். “பாண்டியா” என்று ஒரு பாட்டி கன்னத்தில் முத்தம் கொடுத்தது, “கருத்தம்மா மயனா” என்று ஒரு கிழவி கை பிடித்து அழுதது, “மாமா, மாப்பிள்ளை, ஐயா” என்று பல உறவுகள் சந்தித்து அவரிடம் பாசத்தைப் பரிமாறிய காட்சியை பார்த்தேன்.

நானும் அவரும் தனியாக காரில் வரும்போது, என் பட்டிமன்ற கேசட்டுகளில் திரைப்படங்களை மதுரைத் தமிழில் வெளுத்து வாங்குவது ரசித்துச் சொல்லிக் கொண்டு வந்தார்.

“சினிமா எடுக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடா உனக்கு, ....லி! உன்னை ஒரு படத்துல நடிக்க வச்சு நான் கசக்கிப் பிழையிறேன் பார்டா” என்று பாசம் கலந்த கோபத்துடன் கூறினார். அது கடைசி வரை நிறைவேறவே இல்லை.

தமிழ் திரைப்பட வரலாற்றில் இயக்குநர் ஒருவரின் படைப்புக்காக ஐந்து நாள்கள் ஆய்வரங்கம் நடந்தது அதுதான் முதல்முறையாக இருக்கும். பாரதிராஜா படங்கள் பற்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கலில் நடத்தினோம். எழுத்தாளர்

சு. சமுத்திரம், ச. தமிழ்ச்செல்வன், பிரளயன், அருணன், எஸ்.ஏ. பெருமாள் போன்ற திரைப்பட ஆய்வாளர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு பாரதிராஜாவின் “மண்ணும் மக்களும்” என்ற நூலாக வெளியிடப்பட்டது.

“பதினாறு வயதினிலே” படத்தில் கிராமங்களில் பட்டப்பெயர் வைத்து அழைத்து ஒருவரை அடையாளப்படுத்தும் அநியாயத்தை சாடியிருப்பார். சப்பாணி, பரட்டை ஆகிய பெயர்கள். அதில் சப்பாணியை கோபாலகிருஷ்ணன் ஆக மாற்றிவிடுவார். அது கடைசி வரை மாறாது.

பரட்டையாக வரும் ரஜினிகாந்த் குழுவினர் அந்த கிராமத்தில் நடக்கும் செயல்பாடுகளை தீர்மானித்து பல கெடுதல்களை செய்து கொண்டிருப்பர். அந்த இடம் சாவடி எனப்படும். பேசியே பலரை சாவடிக்கும் இடம் என்பதை அழகாக படம் பிடித்திருப்பார்.

“மயில்” கதாபாத்திரம், “ஆத்தா நான் பாசாயிட்டேன்” என்று சொல்லுவதைக் கவனிக்காமல், கோழி காணாமல் போனதை பெரிதுபடுத்தி கத்திக் கொண்டிருக்கும் அவர் தாய் பாத்திரம். கதாபாத்திரங்களை ஆடம்பர உடைகள், பேச்சு எதுவும் இல்லாமல் வெற்றிபெற வைத்தது அழகு.

“பட்டணத்துக் காதலெல்லாம் பாதியிலே மறையுமப்பா, பட்டிக்காட்டுக் காதலுக்கு கெட்டியான உருவமப்பா” என்று கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப டாக்டரின் போலியான காதலையும், சப்பாணியின் உண்மையான காதலையும் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார்.

பரட்டையைக் கொலைசெய்த சப்பாணியைச் சிறையில் சந்திப்பது, அவன் ரயிலில் வருவான் என்று மயில் காத்திருப்பது எல்லாம் பாரதிராஜாவின் முத்திரை.

முதல் படத்தின் வெற்றிக்குப் பின் வந்த “கிழக்கே போகும் ரயில்”. முடிதிருத்தும் கலைஞரின் மகனை அழகான கவிஞனாக்கி, பாஞ்சாலியுடன் காதல். அதில் கவுண்டமணி, பாஞ்சாலியின் மாமாவாக வந்து பாஞ்சாலியைத் தொட்டு தூக்கி பரணில் இருக்கும் பொருளை எடுக்கச் சொல்லுவார். அப்போதே குட் டச், பேட் டச் பற்றி தெளிவாகச் சொல்லியிருப்பார்.

அதில் மழை பெய்வதற்காக ஒரு பெண்ணை ஆடையின்றி கிராமத்தில் நடக்க வைக்கும் மூடத்தனத்தை எதிர்த்து இருப்பார்.

தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களைக் கொத்தடிமைகளாக நடத்திய பல இயக்குநர்களைச் சொல்ல முடியும். ஆனால் தன்னிடம் பணிபுரிந்த பாக்கியராஜ், மணிவண்ணன் ஆகியோரை பெரிய இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் உருவாக வாய்ப்புக் கொடுத்தது பாரதிராஜாவின் அளவற்ற பெருந்தன்மை .

“புதிய வார்ப்புகள்” படத்தில் பாரதிராஜா, பாக்கியராஜை கண்ணாடி போட்டு கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தி மிகப் பெரிய புரட்சியை படத்தில் உருவாக்கினார். அதில் வில்லன் அமாவாசை கதாநாயகியை வற்புறுத்தி தாலி கட்டியிருப்பார். அந்தத் தாலியை அவரே அறுத்தெறிந்து, கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து பயணத்திற்குத் தயாராவதன் மூலம் சடங்குகளும், அடையாளங்களும் அன்பான வாழ்வைத் தீர்மானிப்பதில்லை என்பதை சிறப்பாகச் சொல்லியிருப்பார்.

அதில் குங்குமம், இதயம் என்ற இரு பத்திரிகைகளை வைத்து காதல் வசனத்தையும் வசனகர்த்தா பாக்கியராஜ் சிறப்பாகச் செய்திருப்பார். அப்போது “அந்திமழை” இருந்திருந்தால் அதுவும் இடம் பெற்றிருக்கும்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் காதலுக்கு மதங்கள் தடையில்லை என்பதை பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதல் மூலம் வெளிப்படுத்தி, கிளைமாக்ஸ் காட்சியில் பூணூலையும் சிலுவைக் கயிறையும் அறுத்தெறிவது போல காட்சியை வைத்ததால் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். அதுவே படத்திற்கு பலமாக மாறியது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிச்சாண்டி ஐஏஎஸ் தலைமை ஏற்று, கவிஞர் நன்மாறன் நடுவராகப் பங்கெடுத்த பட்டிமன்றம் நடைபெற்றது. அதில் ஒரு அணியில் நான் பேசினேன். “நடித்து கையைச் சுட்டுக்கொண்ட இயக்குநர் பாரதிராஜா “கருத்தம்மா” படத்தில் “காடு பொட்டக் காடு” என்று பாடலைப் பாடிவிட்டார். அதைக்கேட்டு திரையரங்கில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்தவன், பயந்து தட்டை போட்டுவிட்டு ஓடிவிட்டான்” என்றேன்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த அவர், “உன்கூட பட்டிமன்றம் பேசி நான் ஜெயிக்கிறேன் பார்றா” என்று என் கன்னத்தில் செல்லமாக அடித்தார்.

கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் அந்த ஆசை எனக்கும் நிறைவேறியது. பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சமூகமாற்றத்திற்காக பெரிதும் துணை நிற்பது திரைப்படமா, தொலைக்காட்சியா, பத்திரிகைகளா என்ற தலைப்பில், “திரைப்படமே” என்ற அணியில் பாரதிராஜாவும், வாகைசந்திரசேகரும், “தொலைக்காட்சி” என்ற அணியில் நானும், எஸ்.வி.சேகரும் பங்கேற்றோம். “பத்திரிகை” என்ற அணியில் நக்கீரன் கோபால், திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்கள்.

அன்றைய முதல்வர் கலைஞர் இரண்டு மணி நேரம் ரசித்து கேட்டார். “திரைப்படங்களே” என்று தீர்ப்பு சொன்னவுடன், “...லி உன்னை ஜெயிச்சிட்டேன் பார்டா” என்றார் குழந்தை மனத்துடன்.

“அம்மாவிடம் நகை அடமானம் வைத்து முந்நூறு ரூபா வைத்து வாங்கி வந்தேன்” என்று பாரதிராஜா பேட்டியில் சொன்னவுடன், பல பேர் தங்கள் அம்மாவிடம் முந்நூறு வாங்கி, அவர் போலவே லாரியில் வந்ததால் வெற்றிபெறுவோம் என்ற செண்டிமெண்டில் கிளம்பிவந்தார்கள். அதில் பலர் இன்னும் லாரியை விட்டு இறங்கவே இல்லை.

அவர் முத்திரைப் படமான “முதல் மரியாதை” யிலும் ராதா கதாபாத்திரம் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குச் சென்று, ரயிலில் மீண்டு வருவார். அவருடைய படங்களில் மயில், ஜெயில், ரயில் மூன்றும் வெற்றியின் முத்திரைகளாக இருக்கும்.

சிறந்த எழுத்தாளர்களான கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், சு. சமுத்திரம், கந்தர்வன், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களின் நூல்களை ஆழ்ந்து வாசிக்கும் ஒரு சிறந்த படிப்பாளியாக இருந்தார். அவருடைய இமாலய வெற்றிக்கு இந்த ரசனையான வாசிப்பும், அந்த எழுத்தாளர்களின் மீது கொண்ட அளவு கடந்த மரியாதையும் ஒரு காரணம். அண்மையில் திரைத்துறையினர் நடத்திய “ராஜகோபுரங்கள் நினைவு உற்சவத்தில் நானும் கலந்துகொண்டு ராஜா, பாக்கியராஜ் இருவரை பற்றி என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது அளவு கடந்த மகிழ்வு.

அடுத்த இதழில் “பாரதிராஜா படங்களி்ல் இடம்பெற்ற பாடல்களில் அழகியல்” என்ற தலைப்பில் எழுதுகிறேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com