டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி இந்த வரிசையில் நான் ஒரு பெரிய ஆள் ஆவேன் என்று எனக்கு அன்னிக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. அது என்ன வருஷம், என்ன மாசம், என்ன திதி, அது ராகு காலமா எமகண்டமா என்று எனக்குத் தெரியாது. அப்ப நான் சின்ன பையன்.
சென்னை சாஸ்திரி நகரில் ஒரு பங்களாவில் வாடகைக்கு இருந்த பத்திரிகை ஆபிஸில் ஆசிரியர் பதவியில் இருந்தவர் “ஒரு நாள் நீ பெரிய ஆவே” என்று எனக்கு ஆசி வழங்கினார். ஆசிரியர் பதவியில் இருந்த அவர் பெயர்? அது எதுக்கு இப்போ? அவர் கடைசிவரை பெரிய ஆள் ஆகவே இல்ல. இப்ப நிச்சயமா அமர பதவியும் அடைந்திருப்பார்.
எனக்கு 300 ரூபாய் சம்பளம். கம்பாஸிடர்(அச்சு கோர்க்கும்) பார்வதிக்கு 200. முனுசாமிக்கு சம்பளம் 300 கிம்பளம் 300க்கும் மேல். பின்னே… அவன்தான் துணை நடிகைகளை ஆட்டோவில் ஆபீஸுக்கு அழைச்சிக்கிட்டு வருவான். எடிட்டருக்கு அவர்களை ரொம்பப் பிடிக்கும். து. நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் என்று எனக்குத் தெரியாது.
அது ஒரு மஞ்சள் பத்திரிகை என்று வெளியில் பேசிக் கொண்டார்கள். அப்படின்னா என்னனு எனக்கு தெரியாது. கலர் பத்தி எடிட்டரும் கவலைப்படவில்லை.
மதனகோபால் மடியில் மஞ்சுளா, பத்மா விரித்த வலையில் பாஸ்கர் இந்த ரீதியில் வரும் தலைப்புகள் என்னைக் கவர்ந்தன என்பது சத்தியம்.
எடிட்டர் அறையில் தலைக்கு மேலே திருப்பதி பெருமாள் படம் இருக்கும். இருந்தாலும் பெருமாளைக் கண்டுகொள்ள மாட்டார் ஆசிரியர். தினமும் பெருமாள் தலையில் நான்தான் ஒரு செம்பருத்தி பூ வைப்பேன்.
அன்று நான் எடிட்டர் கதவைத் திறந்தபோது ஒரு துணை நடிகையின் வாயில் வேர்க்கடலை பர்பி ஊட்டிக்கொண்டிருந்தார். நான் அதிர்ச்சி அடைந்த அளவுக்கு அவர்கள் அடையவில்லை. “பூ வெச்சுட்டுப் போயிடுவான்” என்றார் எடிட்டர். “யார் காதுல?” என்று ஜோக் அடித்தாள் து.ந.!
பெருமாளுக்குப் பூ வைக்க தன் ஸீட்டை நகர்த்தி எனக்கு இடம் கொடுத்தார். ஆசிரியருக்கு கடவுள் பக்தி கொஞ்சூண்டு இருப்பதை அப்போது கண்டுகொண்டேன்.
என்ன நாள், கிழமை என்று தெரியாது… போலீஸ் வந்தது . ”நீதான் எடிட்டரா? இழுத்துனு போகட்டுமா நீயே வர்றியா?” என்றார் போலீஸ். இவரா போயிட்டார். போகும்போது உதவி போலீஸ்காரர் அங்கிருந்த 20 புஸ்தகங்களை அள்ளிக்கொண்டார். மதனகோபால் மடியில் மஞ்சுளா, பத்மா விரித்த வலையில் பாஸ்கர் புஸ்தகம் போலீஸோடு போய்விட்டது.
அதற்குப் பிறகு ஆனந்த விகடனில் எனக்கு வேலை கிடைத்தது. விகடனில் அப்போது ரெண்டு பிரமாண்டங்கள் இருந்தன. ராவ்-மதன். “ நீங்க இதுக்கு முன்னாடி எங்கே வேலை பார்த்தீங்க?” என்று இன்டர்வியூவில் கேட்டார் மதன்.
“மங்களகரமா ஒரு மஞ்சள் பத்திரிகையிலிருந்து என் வாழ்க்கையைத் தொடங்கினேன்” என்பதை அவர்கிட்ட சொல்லலே. பிற்பாடு ராவ் சார் என்கிட்ட “ நீ நல்லா தலைப்பு வைக்கிறே” என்றார் (மதனகோபால் மடியில் மஞ்சுளா நினைவுக்கு வந்து போகும்).
பிறகு குமுதத்தில் வேலை கிடைத்தது. தினமணி, குங்குமம், கல்கி… பெரிரிரிய பத்திரிகைகளிலிருந்து உப்புமா பத்திரிகைகள் வரை பயணித்தேன்.
பெருமாளுக்கு செம்பருத்தி வைக்கும்போது யெல்லோ எடிட்டர் சொன்னது அப்பப்போ நினைவுக்கு வரும்: நீ பெரிய ஆள் ஆவே!
நான் ஆகலே என்ற வொர்ரி எனக்கு போன வாரம் வரைக்கும் இருந்தது. சிறந்த பத்திரிகையாளர் விருது, முதுபெரும் பத்திரிகையாளர் விருது, பழம்பெரும் பத்திரிகையாளர் விருது எதுவுமே எனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, ஸ்டாலின், ஜோசப் விஜய் எல்லார் மேலயும் லேசா வருத்தமும் இருந்தது.
இதெல்லாம் போன வாரம் வரை. கடந்த புதன் கிழமை புரசைவாக்கத்தில் என்னை பயமுறுத்தற வேகத்தில் உரசற மாதிரி பைக்ல ஒருத்தன் போனான். ஜென் ஸி இளைஞன் அல்லது புள்ளிங்கோ என்று அவனை அழைக்கலாம். நான் ஒரெ ஒரு கெட்ட வார்த்தைதான் அவனைத் திட்டினேன்.
வண்டியை விட்டு இறங்கினான். ஸ்டைலாக ஸ்டாண்ட் போட்டுவிட்டு எங்க அம்மா, அப்பா, அக்கா, அத்தை, சித்தி… எல்லாரையும் புரசைவாக்கம் ரோட்டுக்கு இழுத்து கெட்ட வார்தையில் திட்டினான்.
வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போது “பெரிய மனுஷன்னு பாக்கறேன். இல்லேன்னா எல்லாத்தையும் அறுத்துடுவேன். சேதாரம் இல்லாம வூட்டுக்கு போ பெரிசு” என்று எச்சரிக்கை விடுத்து கிளம்பினான்.
அந்த மஞ்சள் ஆசிரியர் சொன்னது போன வாரம் பலித்துவிட்டது. நான் எப்படியோ பெரிய மனுஷன் ஆகிவிட்டேன்!