புகைப்படங்களாக கீழடி அகழாய்வு!

புகைப்படங்களாக கீழடி அகழாய்வு!

கீழடியில் நடந்துவரும் அகழாய்வை சாதாரணமாகத்தான் பார்க்கப் போனார் மதுரையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் சரண்ராஜ்.

அவர் போனநேரத்தில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். பார்த்தவுடன் அவருக்குப் பிரமிப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.  இந்த பழைமையான தொல்பொருட்களை எடுக்கும் வழிமுறைகள் என்ன? பொறுப்பான இந்த வேலையை யார் செய்கிறார்கள்? என்ற கேள்வி அவர் மனதுக்குள் இயல்பாகவே எழுந்தது. ஆழமான குழிகளில் இருந்து கல்லையும் மண்ணையும் நெற்றிவேர்வை வடிய அள்ளி சுமந்து   வேலை செய்யும் அகழாய்வுப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலிதொழிலாளிகளைச் சந்தித்துப் பேசினார்.

இந்த வேலைகளை ஆவணப்படுத்தலாமே என விரும்பினார். அதற்கு அப்பொழுது தமிழக தொல்லியல் துறையின் ஆணையராக இருந்த உதயசந்திரன் ஐஏஸ்  அனுமதி வழங்கியதோடுஅது சாத்தியமானதற்கும் காரணமானவராக இருந்திருக்கிறார்.

தினமும் அங்குள்ள அனைத்து அகழாய்வு தளத்திற்கு விருப்பம் போல சென்று வர கார் வசதி செய்து கொடுத்தார்கள்.  சில நாட்கள் காரில் போய் புகைப்படமும் ஆவண சினிமாவும் எடுக்கச் சென்றிருக்கிறார். ஆனால் காரில் போய் இறங்கிபோதுதான் அவருக்கே புரிந்தது.   அங்குள்ள தொழிலாளர்களும் தொல்லியலாளர்களும் அவரை அந்நியமாக பார்த்தார்கள். அவருடன் பேசுவதற்கு தயங்கினார்கள். எனவே அதைத் தவிர்த்து விட எண்ணியபோது, அதிகாரிகளே  இனி அவருக்கு கார் அனுப்ப வேண்டாம் என்று நிறுத்திவிட்டார்கள். ஆனால். அகழாய்வு தளத்தில்  ஒவ்வொரு நாளும் இவருக்கு வழங்கப்பட்ட மதிய உணவை நிறுத்தவில்லையாம்!

கீழடியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பலத்தரப்பட்ட சமூகமக்கள்தான் அகழாய்வின் ஊழியர்களாகவும், கூலி தொழிலாளிகளாகவும் பணிசெய்தனர். இவர்கள் காலங்காலமாக கீழடியில் வசிப்பவர்கள். காலை 9 மணிக்கு கீழடி தொல்மேட்டிற்கு வேலைக்கு வந்து மாலை 5 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். இவர்களின் ஒருநாள் வேலையில் தோண்டப்பட்ட குழியில் மூடிய தார்பாயை எடுத்துவிட்டு, குழி தோண்டுவது,  சட்டியில் மண்ணை அள்ளி வெளியே போடுவது, கரண்டியை வைத்து மண்ணை கிளருவது, மண்ணுக்குள் புதைந்து இருக்கும் தொல்பொருட்களை லாவகமாக எடுத்து கழுவுவது  மாலை வேலை முடிந்து மீண்டும் தார்ப்பாய் வைத்து குழியை முடிவிடுவது உள்ளிட்டவை அடக்கம். இந்த ஒரு நாள் வேலையைத்தான் ஓராண்டாகத் தொடர்ந்து புகைப்படமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் சரண்ராஜ். அத்துடன் ‘ஒளிநிழல் நடுவில் நாங்கள்' என்ற ஆவணப்படமும்  படைத்துள்ளார்.

அத்துடன் இந்த படங்களை மிக பழமையான அச்சிடும் புகைப்படத்தொழிற்நுட்ப செயல்முறையான ‘சைனோடைப்' (Cyanotype) தொழிற்நுட்பத்தில் அகழாய்வு தொழிலாளர்களை உருவப்படங்களாக துணியில் அச்சடித்து காட்சிப்படுத்தினார்.  இந்த புகைப்பட ஆவணத்தை 2021-க்கான சர்வதேச சென்னை  புகைப்படத் திருவிழா சார்பில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

பின்குறிப்பு: உதயசந்திரன் ஐஏஎஸ் இவரது ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு கீழடியில் பணியாற்றும் ஆண்களுக்கு ஒரு  நாள் கூலி 420 ரூபாய், பெண்களுக்கு 360 ரூபாய் என்று இருந்ததை மாற்றி இரு பாலருக்கும் சமமான ஊதியம் கொடுக்கப்படும் என உறுதி செய்திருக்கிறார்.

 மார்ச், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com