தண்டகாரண்யத்தில் சீதை- நூல் அறிமுகம்

தண்டகாரண்யத்தில் சீதை- நூல் அறிமுகம்
Published on

இமையம் எழுதி, சமீபத்தில் வெளியாகி இருக்கும் சிறுகதைத் தொகுப்பு தண்டகாரண்யத்தில் சீதை.

 எட்டுச் சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் அன்றாடச் சிக்கல்களைச் சாமானிய மனிதர்கள் எதிர்கொள்ளும் காட்சிகளைக் காட்டுகின்றன.  அவற்றைச் சமகாலத்தின் மீது வைத்து ஆராய்கின்றன.

தண்டகாரண்யத்தில் சீதை ராமாயணம் மீள் வாசிப்பு சிறுகதை. தொல்குடியினர் வசிக்கும் தண்டகாரண்ய காட்டில் ராமனின் கொலை வில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி சீதை ராமனிடம் கேள்வி கேட்கும் வடிவில் அமைந்துள்ளது. சத்திஸ்கரில் இன்றைய பஸ்தார் பகுதியில் வாழும் கோண்டு பழங்குடியினரின் நிலையை இக்கதை பேசுவதாகக்கொள்ளலாம்.  வெளியே இருந்து காட்டுக்குள்  நுழையும் சக்திகள் அங்கிருக்கும் சமநிலையைக் குலைக்கிறார்கள். அது நாட்டுக்குத் தேவை என வாதிடப்படுகிறது. 'மனிதர்களுக்குத் தேவை உண்மைகள் அல்ல; பொய்கள், கற்பனைகள்..' சீதையின் குரலில் இமையம் பேசுகிறார்.

அறுப்புக்குப் போன மாடு என்ற முதல்கதை ஜல்லிக்கட்டு மாட்டை முன் வைத்து சாதியத்தைப் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனிடம் தன் மாடு பிடிபட்டுவிட்டதே என்ற கோபத்தில் அதை அடிமாட்டுக்கு அனுப்புபவன், நண்பர்களுடன் சேர்ந்து காலனித் தெரு மக்கள் அனைவரையும் பழிவாங்கத்திட்டமிடும் கதையில் ஏராளமான சமகால சித்திரங்கள்.

பொட்டச்சி மனசு என்கிற கிராமியக் காதல்கதையில் சாதிமாறிக் காதலிக்கும் பெண், வீட்டில் சண்டைபோட்டுவிட்டு ஊரை விட்டு வேலைதேடிச் செல்கிற காதலனை ரகசியமாக ஐயனார் கோவிலில் சந்திக்கிறாள். கோவிலுக்குள் நுழையமுடியாத சாதி அவள். அவன் பெயரை மார்பில் பச்சை குத்தி இருக்கிறாள். ‘நீ ஆம்பள, நினைச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்துக்கு ஓடிப்போயிடுவ நான் பொட்டச்சி அப்படிச் செய்யமுடியுமா?’ என்று கேட்கிற அப்பெண்ணின் கோணத்திலேயே கதையை நகர்த்தி இருக்கிறார். சாதியத்தையும் காதலையும் கலந்து  நெய்யப்பட்ட இக்கதை சமூக மனச்சாட்சியை அப்பெண்ணின் மூலம் உலுக்கப்பார்க்கிறது. முகம் என்பது இத்தொகுப்பில் இருக்கும் இன்னொரு அழகிய காதல் கதை. இதுவும் பெண்ணுலகில் நின்று சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று காதல்கள் முறிந்த நிலையில் பக்கத்துவீட்டுக்காரனுக்கு வாழ்க்கைப் படும் பெண், திருமணத்தன்று படும் மன உளைச்சலைச் சொல்கிறது. மணமகன் இறுதியில், ‘ கரும்புக் கட்டு தூக்குறவளுக்கு  கரும்பு வெட்டுறவன் தான் பிரிசனா வருவான்’ என்று அவளது பழங்காலத்தை உதறித்தள்ளுகிறான். இந்த வார்த்தைகளில் தெறிக்கும் வாழ்வியல் எதார்த்தம், இக்கதையை இத்தொகுப்பிலேயே சிறந்ததாக ஆக்குகிறது.

அடங்காத அழுகை கதை சாதிய ஒடுக்குமுறை மனதில் ஏற்படுத்தும் வடுவை மிக நுட்பமாகப் பேசுகிறது. பள்ளிக்குப் புதிதாக வரும் ஆசிரியர் பிள்ளைகளிடம் அவர்களின் விவரங்களைக் கேட்கிறார். வகுப்பில் ஒரு பெண் தன் ஊர்ப்பெயரை மட்டும் சொல்லாமல் அடம்பிடிக்கிறாள். இதனால் ஆசிரியருக்கு ஏற்படும் கொந்தளிப்புதான் முழுக்கதையே. இறுதியில் ஊர்ப்பெயரை அவள் சொல்ல, நொறுங்கிப்போவது ஆசிரியர் மட்டுமல்ல; வாசிக்கும் நாமும்தான். கதை சொல்லும் நுட்பத்தில் இமையம் ஒரு பெருங்கலைஞராக இச்சிறுகதையில் தன்னை மாற்றிக் காட்டுகிறார். ஒரு குமிழியாக அழுத்தத்துடன் விரிகிற கதை உடைகிறபோது மிஞ்சுவது ஒரு சமூகத்தின் கண்ணீர்த் துளி.

சொந்த வீடு, ஊரிலிருந்து நகரத்துக்கு வந்த துளசியம்மாவின் கதை. ஊரிலிருந்து வந்து 28 நாட்கள் ஆகிவிட்டன. பேரப்பிள்ளைகளும் பேசுவதில்லை; மருமகளும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை. மகனோ வேலைக்குப் போய்விடுகிறான். சகமனிதர்களுடன் பேச வாய்ப்பின்றிப் புழுங்கி, மீண்டும் ஊருக்கே போக நினைக்கும் தற்கால மனுஷியின் குமுறல். சமகால இடப்பெயர்வுகளை நன்றாக அவதானிக்கும் கதையிது.

ஆசைகள் கதையின் மூலமாக விவசாயத்தை விட முடியாத சிறுவிவசாயியின் வாழ்நிலையையும் இயந்திரங்கள் கதை மூலமாக கணவன் – மனைவி இருவருமே வேலைக்குப் போகும் குடும்பங்களின் நிலையையும் சொல்கிறார். இவற்றில் ‘கதை’ என்றும் ஏதும் அவர் சொல்வதில்லை. உரையாட,ல்கள் வழியாக கதையுலகு உருவாகி வரும். அங்கும் இங்குமாக சமகால உலகை இடிப்பார்; தலையில் கொட்டுவார். வீம்பு ஒழுக்கம் தவறும் கணவனைப் பிரிய நினைக்கும் மனைவியான சிவமாலை, தனக்கு ஆதரவாக மகன் எழுந்து நிற்பதுகண்டு ஆறுதல் அடைந்து வீடுதிரும்பும் கதை. பிறந்தவீடு புறக்கணிக்கும்போது, புகுந்தவீட்டுக்குத்தான் அவள் சென்றாகவேண்டும். அதற்கொரு சாக்காக மகனது ஆதரவை அவள் கொள்வதாகக் கொள்ளலாம். சிவமாலைகளுக்கு வேறென்ன வழி இருக்கிறது?

இச்சிறுகதைகளில் சீதையில் தொடங்கி சிவமாலை வரை ஏராளமான பெண் பாத்திரங்களைப் படைத்துள்ளார். யாரும் நாயகிகளாக புரட்சி ஏதும் செய்வதில்லை. அன்றாடங்களைத் தாங்கிக்கொள்கிறவர்களாக அதுகுறித்த தன் மனக்குறைகளை வெளிப்படுத்துகிறவர்களாக மட்டுமே வருகிறார்கள். ஜல்லிக்கட்டு மாட்டை அறுப்புக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவிக்கும் வீட்டுப் பெண்கள் தோற்றுப்போகிறார்கள், வேற்றுசாதி காதலனைக் கைப்பிடிக்கவே முடியாது என்ற நிலையில் அவனுக்கு தன் தோட்டை கழற்றிக் கொடுத்துவிட்டு திருப்பிப் போகிறாள் இன்னொருத்தி. தன் முந்தைய காதல் முறிவுகள் தெரிந்தும் தன்னைக் கரம்பிடிக்கும் கணவனிடம் நெகிழ்கிறாள் ஒரு பெண். மகன் மருமகளிடையே சண்டை வரக்கூடாது என்ற நிலையில் ஊருக்குப் புறப்படுகிறாள் துளசியம்மா. பிள்ளைகளுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே எனப் புழுங்குகிறாள் ஆசைகள் கதையில் வரும் மாரியம்மா. சிவமாலையின் கதை சுயகாலில் நிற்க இயலாத கிராமியப் பெண்ணின் தாற்காலிக வீம்பு.

வேளாண்பூமியைச் சார்ந்துவாழும் பெரும்பாலான எளிய பெண்களின் உலகை இக்கதைகளில் சமகால நோக்கில் இமையம் படைத்துள்ளாகக் கொள்ளலாம். அதே சமயம் சீதையையும் சிவமாலையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவும் அவர் தவறவில்லை.

தண்டகாரண்யத்தில் சீதை, இமையம், வெளியீடு:க்ரியா, பேச: 7299905950 விலை ரூ.275

logo
Andhimazhai
www.andhimazhai.com