பிள்ளைப் பூச்சி
ஓவியம்: பி.ஆர்.ராஜன்

பிள்ளைப் பூச்சி

நீளமான வீட்டின் பின்புறத் தார்சாலில் பெரிய உரலில் பருத்திக் கொட்டை அரைத்துக் கொண்டிருந்தாள் ராசாத்தி. நான்கு கட்டுகள் தள்ளி, முதுகுக்குப் பின்னால் முன் வாசலில் யாரோ எதுவோ நிழலாடுவது போலிருந்தது. அவள் எப்போதுமே இந்த மாதிரி விஷயங்களில் கூர்மையானவள். பட்டாசலில் எல்லோருடனும் பேசிக் கொண்டோ தாயம் விளையாடிக் கொண்டேதான் இருப்பது போலிருக்கும். ஆனால் அடுத்த கட்டில் உள்ள மழைத்தண்ணீர் பிடித்து வைத்த பானைகள் ஒன்றிற்கு அடியில் எதுவோ விறுவிறுவென்று ஓடுவது போலத் தோற்றம் தெரியும்.

‘‘என் ஆட்டையை நீ விளையாடு,'' என்று யாரிடமாவது தாயக்கட்டைகளைக் கொடுத்து விட்டு எழுந்து ஒரு வாரியலையும் எடுத்துக் கொண்டு பூனை போல் போவாள். வாரியலை

சட்டென்று எடுக்கத் ‘தோது'வாய் அதைச் சுவரில் சாத்தி வைத்து விட்டுப் படக்கென்று பானையைத் தூக்குவாள். அடியிலிருந்து பெரிய தேள் ஒன்று ஓடும். வாரியலை மாற்றிப் பிடித்துக் கொண்டு அதன் கொண்டையால் ஒரு போடு போடுவாள். தரையோடு நசுங்கிப் போயிருக்கும் தேள்.

‘‘அது எப்படிள்ளா இங்கேயிருந்தே அதைக் கவனிச்சே,'' என்று முருகாத்தாள் கேட்பாள். ‘‘அப்படியும் தண்ணிப்பானை உனக்குப் பார்வையில படற மாதிரி இல்லையே. உனக்கு என்ன பொடதியிலும் கண்ணு இருக்கா..'' என்று ஆச்சரியப்படுவாள் முருகாத்தா ஆச்சி. முருகாத்தாளுக்கு அப்படி ஒன்றும் கிழவி வயது இல்லை. கூடிப்போனால் ஐம்பது வயது இருக்கும். ஆனால் யாருக்கோ அவள் ஆச்சி முறை அதனால் அவளுக்கு நெருக்கமானவர்கள் அவளை பாட்டி என்றோ ஆச்சி என்றோ கூப்பிடுவார்கள்.

‘‘இல்லை ஆச்சி, என்னமோ அசையற மாதிரி, கண்ணு ஓரத்தில ஒரு உணர்வு தோணுச்சு, இந்தச் சவம்தான் ஓட்டு வெக்கை தாங்காம பொத்துன்னு விழுந்து குளிச்சியான இடத்துக்குக் குடுகுடுன்னு ஓடும்... அதுதான்... எல்லாம் ஒரு பழக்கம் தானே.'' என்பாள் ராசாத்தி. எதுவாவது இப்படிப் பார்வைக்குப் பட்டும் படாமலும் ஓடி மறைந்தால் சரியாகச் சொல்லி விடுவாள், ‘‘அது ஒண்ணுமில்லை பல்லியாத்தான் இருக்கும்,.''என்பாள்.

‘‘இரு இரு, பூரான் போல இருக்கு, ஆம்பிளை நீ அடிக்காதே, பூரானை ஆம்பிளைக அடிக்கக் கூடாது'' ‘‘பாம்புராணியோ அரணையோ போலத் தோணுது, அடிச்சிராதே, மேலெல்லாம் பத்து மாதிரி வெள்ளை வெள்ளையா விழும்,''என்று அததை எதிர் கொள்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுவாள். பெரும்பாலும் தேளைத் தவிர எதுவானாலும் அது போகட்டும் என்று விட்டு விடுவாள்

ஆனால் ஒரு கதையையோ நம்பிக்கையையோ சொல்லுவாள். பூரானை ஆண்கள் அடிக்கக் கூடாததற்கு அவள் சொல்லும் கதை ஒன்று உண்டு. ‘‘ஒரு பொண்ணுக்கும் அவ புருசனுக்கும் ஏதோ சண்டை. பாலில் பச்சநாவியைக் கலந்து அவன் சாகட்டும்னு வச்சிட்டா. அவன் சங்கரன் கோயில் கோமதியை உசுருக்கு உசுரா கும்பிடறவன். இதைப் பார்த்த கோமதி ஆத்தா ஒரு பூரானைப் போயி பாலில் விழுன்னு சொல்லி அனுப்பிட்டா. அதுவும் விழுந்து காலைப் பூரா உடலோட ஒட்டிக்கிட்டு அழகா நீந்திக்கிட்டுக் கிடக்கு. அந்தப் புருசங்காரனும் அதைப் பாத்துட்டு பாலைத் தூரக் கொட்டிட்டு பொழைச்சுக்கிட்டான். பொண்டாட்டியும் கெட்ட பேரு வாங்காமத் தப்பிச்சிட்டா. அதனால ஆம்பிளைக பூரானைக் கண்டா அடிக்கக் கூடாது''ன்னு ஒரு கதை சொல்லுவா. அதனால் இந்த மாதிரி பூச்சி எது ஒன்றைப் பார்த்தாலும் சங்கரன் கோயிலுக்கு காணிக்கை நேர்ந்து கொள்வாள். ஞாபகமாக அங்கே போகும் போது உண்டியலில் செலுத்தியும் விடுவாள்.

இப்போதும் முன் வாசலில் நிழலாடுவது போலத் தோன்றியதும் வாசலுக்கு முதுகைக் காட்டியபடி உரலில் அரைத்துக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தாள். கிறுக்குக் கோவிந்தன் நின்று கொண்டிருந்தான். கோவிந்தன், கன்னங்கறுப்பாய் இருப்பான். குளிக்காத தலை சிக்குப் பிடித்திருக்கும். ஒரு கையில் எப்பவும் செங்கல் துண்டு ஒண்ணு வச்சிருப்பான். சின்னப் பயலுக கேலி கிண்டல் பண்ணினா ஒரே எறி. கரெக்டா பக்கதுல வந்து விழும். ஓடிருவாங்க. ஆனா இது வரை யாருக்கும் காயம் பட்டதா ஒரு சம்பவமும் இல்லை. இடுப்பில் நாலைந்து துணியைச் சுற்றியிருப்பான். ஒன்று கூட மறைக்க வேண்டியதை மறைத்திருக்காது. பைரவர் சிலை போலசெதுக்கி வச்ச மாதிரி விறைப்பாக நிற்பான். ஆணோ பொண்ணோ யார் பார்வையும் ஒரு முறை அவனை முழுக்கோலத்திலும் ரகசியமாகப் பார்த்து மீளாமல் இருக்காது. ஆண்கள் என்றால் ஏதாவது கிண்டலாகப் பேசி அவனை விட்டு பொண்டாட்டி போனது சரி தப்பு என் லாவணி பாடிச் சிரித்துக் கொள்வார்கள். பெண்கள் கமுக்கமாகச் சிரித்துக் கொள்வார்கள்.அவர்கள் சுதந்திரம் அவ்வளவுதானே.

வாய் நிறைய வெற்றிலை போட்டிருப்பான். சில வீடுகள், கடைகளுக்கு முன்னால் மட்டுமே போய் நிற்பான். எவ்வளவு நேரமானாலும் வெற்றிலையோ காசோ வாங்காமல் நகர மாட்டான். எதுவும் தராமல் நேரம் கடத்தினால் தன் தலையில் அவனே பொட் பொட்டென்று அறைந்து கொண்டு ஒரு மாதிரியாகக் கத்துவான். அதுதான் உச்சம். ஏதாவது காசு போட்டு அனுப்பி விடுவார்கள். காசு கையில் இருந்தால் பெரிய கடை என்று சொல்கிற காப்பி கிளப்பின் முன் போய் நிற்பான். அங்கே ஏதாவது இலையில் சுற்றிக் கையில் கொடுப்பார்கள். கையில்தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஒரு தரம் மொட் மொட்டென்று தலையில் கொட்டிக் கொள்வான். அப்படி ஒரு கிறுக்குப் பிடிவாதம்.

அதே போலக் கடையில் சாப்பாடு கொடுத்தால் அதற்குக் காசை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதமாக நிற்பான். இத்தனைக்கும் காப்பி கிளப் வைத்திருக்கிற பாண்டிய அண்ணாவி அவனுக்கு உறவு முறைதான். வழி வழியாக நாட்டாமையாக இருந்த குடும்பம். உண்மையில் கோவிந்தன் செயலாக இருந்திருந்தால் அவன்தான் நாட்டாமையாக ஆகியிருப்பான் என்றொரு பேச்சும் உண்டு.

ராசாத்தி துணிச்சலானவள்தான். ஆனால் கோவிந்தனைக் கண்டால் மட்டும் அவளுக்கு ஒரு பயம். அதைப் பயம் என்பதை விட கோவிந்தனைத் திகம்பர கோலத்தில் பார்க்கையில் அவளுக்குள் ஏதோ தன் வசத்தை இழப்பது போலத் தோன்றி விடுகிறது அது முறையில்லை ஆனால் எப்படி அந்த நினைப்பு வந்தது ஏன் வந்தது என்பதே பயம் போலத் தோன்றியது. அதை ஜாடை மாடையாக முருகாத்தாளிடம் ஒரு தரம் சொன்னாள். ரொம்பத் தயக்கத்திற்குப் பின்தான் சொன்னாள்.

முருகாத்தாள், ‘‘நீ அவனை அந்தக் காலத்தில, நல்ல வாலிபத்தில பாத்திருக்க மாட்டியே, நீ இந்த ஊர்க்காரின்னாலும் உங்க பெரியம்மை வீட்டுக்குப் புள்ளை தூக்கப் போயிட்டேல்லா, வாலிபத்தில பார்த்திருந்து அப்படித் தோணுச்சுன்னா, அதுல ஏதோ ஆச்சரியம் இருக்கு. ஆளு அப்படி இருப்பான் பாத்துக்கோ, ஆனாலும் அவனைக் கட்டின பாதகத்தி, மாரின்னு பேரு ஒரு தீப்பெட்டி ஆபீஸ்காரன் கூட ஓடிப் போயிட்டா. சேர்மக் கனின்னு பொருத்தமான பேரு. ஊருக்கு வெளியே ரயிலடி கிட்டக்க தீப்பெட்டி ஆபீஸ் நடத்தினான். நல்லாத்தான் நடத்திக்கிட்டு இருந்தான். ஆணு பொண்ணுன்னு பத்து இருபது பேருக்கு நல்லாவே பொழைப்பு ஓடுச்சு.''

‘‘மாரி கெரகமோ அவன் கிரகமோ தீப்பெட்டி ஆபீஸ்ல வேலைக்குப் போறேன்னு அவன் கூடவே போய்ட்டா. அவனும் கடையை மூடிக்கிட்டு ஊர் வழி போய்ட்டான். அவள் தான் இவனுக்கு ஏதோ செஞ்சுட்டான்னும் ஒரு பேச்சு உண்டு. இவனையும் கொஞ்ச நாளா ஊர்ல ஆளையே காணும். ஒரு நாள் பார்த்தா, இப்படி வந்து நிக்கிறான்'' முருகாத்தாள் எதையும் ஒண்ணு விடாம சம்பிரமமாகச் சொல்லுவாள்.

முருகாத்தாளுக்கு ஒரு பையன் மட்டும் உண்டு. அவனும் எப்பவாவது வருவான் போவான். என்ன செய்யறான்னு தெரியாது. அம்மைக்குக் கட்டுப்பட மாட்டான். நல்ல சகவாசம் கிடையாது என்று ஊரில் பேசிக் கொள்வார்கள். அவன் வந்தால் மட்டும் முருகாத்தாள் வீட்டில் சமைப்பாள். அவளுடைய புருஷன் கிடையாது. பட்டாளத்துக்குப் போனான் வரலைன்னு சொல்லுவாங்க, சிலர் ஜெயிலுக்குப் போனான் என்பார்கள். கழுத்தில் தாலி போல மஞ்சள் கயிறு ஒன்று, இறுக்கமான சட்டைக்குள்ளும் மார்புக்குள்ளும் நெருங்கிக் கிடக்கும். யார் வீட்டிலாவது வாசல் தெளிக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது, தொழுவில் மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்வது என்று சில்லரை வேலைகள் செய்வாள். அனேகமான விசேஷ வீடுகளில் தன் சாப்பாட்டுப் பாட்டைக் கழித்து விடுவாள். அதிலும் ரொம்பவும் கௌரவம் பார்ப்பாள். கோயில் கொடை என்று வந்து விட்டால் காப்பு கட்டிக் கொண்டு விரதம் இருப்பாள். சாமியாடுவாள். சிலருக்கு அவளைப் பிடிக்கும்.

திருநீறு போடுவாள். வாய்வுக்கோளாறில் உடலில் எங்காவது பிடிப்பு ஏற்பட்டால் காத்துப் பிடிப்பை எடுத்து விடுகிறேன் என்று ஒரு வெள்ளைத் துணியை எடுத்து தலையையும் உடலையும் சுற்றி ஏதோ முணு முணுத்துத் துணியில் தீயைப் பொருத்தி செம்புக்குள் போட்டு தட்டில் விட்டிருக்கும் தண்ணீரின் மேல் கவிழ்த்துவாள். செம்பு தண்ணீரை உறிஞ்சி விடும். ‘‘இனிமேல் பிடிப்பு சரியாப்போயிரும்,'' என்பாள். சிலருக்கு அவளைப் பிடிக்கவே பிடிக்காது. எதிரே வந்தாலே முகம் சுண்டிப் போய் விடும். இவள் சூவாவரசியா, புருசன் இருக்கானா இல்லையா எப்படி எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம்.

ராசாத்திக்கு முருகாத்தாளைப் பிடிக்கும் பிடிக்கவும் செய்யாது. ராசாத்தியின் கணவன் ஆறுமுகத்துக்குப் பிடிக்கவே செய்யாது. ராச்சத்தியிடமும் முசுடு போலக் கோவிச்சுக்கிட்டேதான் இருப்பான்.

முருகாத்தாளிடம் அப்படிச் சொன்ன பிறகு கோவிந்தன் மீது அதிகப் பயம் உண்டானது ராசாத்திக்கு. அப்படியா, அப்படித்தானா அது அந்த நினைப்புத்தானா. இப்படி ஒரு அழுக்கு மூட்டையிடம் தானோ அல்லது அவன் தன்னிடமோ அணுகி விட முடியுமா. அதை இவளிடம் வேறு சொல்லி விட்டோமே. இவள் நாலு வீடு போகிறவளாயிற்றே என்றெல்லாமும் யோசனை வந்தது. அது வேறு புதிய பயமாகவும் மாறி விட்டது.

இப்போது கோவிந்தனை எப்படி அனுப்புவது. அவன் வந்த காரியம் ஆகாமல் போகவே மாட்டானே. ஆறுமுகம் இருந்தாலும் பரவாயில்லை. முருகாத்தாள் வந்தால் கூட ஏதாவது கொடுத்து அனுப்பச் சொல்லலாம். பருத்திக் கொட்டையைக் கூட அநேகமா அரைத்து முடித்து விட்டாள். சரி வந்தது வரட்டும் என்று எழுந்து முன் வாசலுக்கு வந்தாள். கோவிந்தன் ஒரு கையால் இரண்டு வாடிப்போன வெற்றிலையைக் காட்டினான். அவளுக்குப் புரியவில்லை. திடீரென்று ஏதோ பொறி தட்ட மாடப்பிறையிலிருந்த சுண்ணாம்பை ஒரு சோளத்தட்டையில் எடுத்து நீட்டினாள். கோவிந்தன், வெற்றிலைச்சாறு வழியச் சிரித்தபடி சுண்ணாம்பைத் துடைத்து எடுத்துக் கொண்டு கிளம்பினான். அய்யோ பாவம் என்று தோன்றியது. கண் அவன் இடுப்பிற்குக் கீழ் தன்னிச்சையாகப் போய் மீண்டது. அந்த வேண்டாத நினைப்பு எட்டிப் பார்க்கிற மாதிரித் தோன்றிய போது ராசாத்தியின் கணவன் ஆறுமுகம் வந்து சேர்ந்தான்.

‘‘இந்த ராஜ அலங்காரக் கோவிந்தன் எங்க வந்துட்டுப் போறான், அவனுக்கெல்லாம் சாம்பாரு வடை சட்டினி இல்லாமச் சாப்பாடே இறங்காதே, நீ வெறும் பழைய சோறுதானே வச்சிருப்பே என்ன வாங்கிட்டுப் போறான்.''

‘‘ஆமா அவன் சாப்பாடே வாங்கறது இல்லை. இன்னைக்கி என்னவோ சுண்ணாம்பு கேட்டான். அந்த சோளத்தட்டையில் எடுத்து நீட்டினேன்,'' என்று கொஞ்சம் தள்ளி, கீழே கிடந்த சோளத்தட்டையைக் கண்ணை உயர்த்திக் காண்பித்தாள்.

திடீரென்று ‘‘இது என்ன முழங்கையில் எல்லாம் ஏதோ ஒட்டியிருக்கிற மாதிரி இருக்கே…'' என்று அவளது கையைத் துடைத்தான். அவள் கையின் பொன் கொன்றை நிறமும், அடுக்கான கருப்பு வளையல்களுக்குக் கீழே அது துடிப்பாகத் தெரிவதும் அவனைத் தூண்டி விட்டது. அப்படியே இறுக அணைத்துக் கொண்டான். திடீரென்ற அவனது செய்கை திகைப்பாக இருந்தாலும் ஏதோ அது தேவை போலவும் தோன்றிற்று ஆனால் ஏதோ ஒரு வெட்கம் விழித்துக் கொள்ள, ‘‘நல்லாத்தான் இந்த உச்சி வெயிலில்... தூரப் போங்க, வேலை கிடக்கு,'' என்று விலக்கி விட்டு மறுபடி உரலை நோக்கிப் போனாள்.

‘‘இரு, வந்து ராத்திரிக்கி வச்சுக்கிடுதேன்'' என்று ஒரு கோபக் கெஞ்சலுடன் பின்னாலிருந்து நெருக்கமாக அணைத்துப் புறங்கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டுப் போனான். உடம்பில் ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று. ராத்திரியென்ன பகலென்ன முதலிலேயே உடன் பட்டிருக்கலாமோ என்று நினைத் தாள்.

ஆசைக்கும் வெட்கத்துக்குமாக அல்லாடினாள். இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்தால் மட்டுமே தீரும் இது என்று பருத்திக் கொட்டையை வழித்து விட்டு, மாட்டை அவிழ்த்துத் தோட்டத்து நெல்லி மரத்தில் கட்டி விட்டு தொழுவத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

‘‘இந்த வேலையை முருகாத்தாளிடம் சொல்லி இன்னைக்கி திங்களோட திங்கள் எட்டு நாளாச்சு, செஞ்சிருக்காளா பாரேன். எம்புட்டுச் சாணி சேந்துட்டு,'' என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் அள்ளி எருக்குழியில் போட்டு விட்டு தொழுவைப் பருத்திமாறால் பெருக்கினாள். கிணற்றடித் தொட்டியில் இறைத்துப் போட்டிருந்த தண்ணீரைக் குடம் குடமாக மொண்டு கழுவி விட்டாள்.

‘‘சாணியை அள்ளி அள்ளிச் சுமந்ததாலும், தொழுவைப் பெருக்கித் தண்ணீர் விட்டுக் கழுவி விட்டதாலும் உடல் அசந்து போயிருந்தது. ஆனால் தொழுவம் பளீரென்று இருந்ததைப் பார்த்து மனசுக்கு ஒரு அமைதி வந்திருந்தது. உடலும் ஏதோ அடங்கினாற் போல இருந்தது. அதற்குள் மாடும் பசியில் சத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. மறைசலுக்குள் சென்று நிதானமாகக் குளித்து விட்டு வரும் வரை பொறுக்காது.

அவசர அவசரமாகக் கிணற்றடியிலேயே குளித்தாள். தோட்டத்துச் சுவர் சில இடங்களில் இடிந்து உயரம் குறைந்திருந்தது. அதிலிருந்து யாரோ பார்ப்பது போலத் தோன்றியது. கோவிந்தனாயிருக்குமோ என்று நினைத்தாள். முடியும் மட்டும் மறைந்து கொண்டு பார்த்தாள் யாரும் தென்படவில்லை. உடனேயே கோவிந்தன் என்றால் சந்தோஷமாய் இருக்குமோ என்று நினைப்பு ஓடியது. அந்த நினைப்பு இப்போது எரிச்சலாயுமிருந்தது. கிணற்றடியின் சதசதப்பான உளுவான் மண்ணிலிருந்து குளித்தததனால் இன்னும் நனைந்து போய், சகதியைத் துளைத்துக் கொண்டு எதுவோ கிளம்பிற்று. பிள்ளைப் பூச்சிதான் இப்படிக் கிளம்பி வரும் என்று பார்த்தாள்.

பெரிய பூரான் காலைப் பார்த்து வேகமாய் வந்தது. நகர்ந்து ஒரு வாளித் தண்ணீரையும் அதன் மேல் விட்டாள். வழிந்தோடும் தண்ணீரில் அழகாக நீந்திப் போனது. மனுசனைத் தவிர எல்லாப் பிராணிக்கும் நீந்தத் தெரியும். மனுசனுக்கு நேரம் காலம் இல்லாம கூட மட்டும் தெரியும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள். பசு அலறியது. வந்துட்டேன்ம்மா என்றவாறே தலையை மட்டும் உணர்த்தி துண்டால் சுற்றிக் கொண்டு ஈரச்சேலையுடன் விரைந்து கழுநீரில் அரைத்த பருத்திக் கொட்டையைக் கலந்து வைத்தாள். ஆசையாய் ஒரே மூச்சில் உறிஞ்சி விட்டு, அடியில் தங்கியிருந்த அரைபடாத கொட்டைகளை வழித்து நக்கிச் சரக் சரக் என்று சவைக்க ஆரம்பித்தது.

திடீரென்று சொத் சொத்தென்று யார் மீதோ கல்லெறிகிற ஓசையும் சுவற்றுக்குப் பின்னிருந்து யாரோ ஓடுவது போல ஓசையும் கேட்டது. தலையைச் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்து தோளுக்கு மேலாகப் போர்த்திக் கொண்டு, துவைக்கிற கல்லில் ஏறி எட்டிப் பார்த்தாள். வழக்கமான ஒற்றைச் செங்கல் துண்டுக்குப் பதிலாக இரண்டு மூன்று செங்கல்துண்டுகளை வைத்துக் கொண்டு வார்த்தைகள் வராமல் கத்திக் கொண்டு ஒரு செங்கல்லை யாரையோ நோக்கி கோவிந்தன் எறிந்தான். பசுவின் கால் பக்கமாக எதுவோ ஊர்ந்து சென்றது பார்க்காமலே புரிந்து கொண்டாள் பிள்ளைப் பூச்சியாய் இருக்குமென்று.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com