ஒட்டுவாரொட்டி
பி ஆர் ராஜன்

ஒட்டுவாரொட்டி

பெயர் பெற்ற எழுத்தாளரின் படைப்புகள் பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு அது. மலேசிய, இலங்கை எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் கலந்து கொள்வதால் அதை பன்னாட்டுக் கருத்தரங்கு என்று கூடச் சொல்லலாம். அதற்கான நிதி ஒதுக்கீடு நிறையக் கிடைத்திருந்தது அதை முன் நின்று நடத்தியவர்களுக்கே ஆச்சரியம்.

அதன் ஒருங்கிணைப்பாளர், என் நெருங்கிய நண்பர், நல்ல வாசகர். மாணவிகளுக்குப் பிடித்தமான பேராசிரியர். எப்படியும் வருடம் தவறாமல் இரண்டு மாணவர்கள் அல்லது மாணவியரை உருப்படியான வாசகராகவோ எழுத்தாளராகவோ மாற்றி விடுவார். அல்லது முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆர்வத்தைத் தூண்டி கேட்டிருப்பார். கருத்தரங்கின் ஓர் அமர்வில் கட்டுரை வாசிக்க அவர் என்னையும் அழைத்தார். வழக்கமாக போக்குவரத்துச் செலவுக்கே கூடக் காணாத அளவில்தான் ஏதாவது பணம் தருவார்கள். அழைக்கும் போதே, அவருக்கே உரிய சிரிப்பான குரலில் இந்த முறை மதிப்பூதியமும் பயணப்படியும் தங்குவதற்கு நல்ல விடுதியும் ஏற்பாடு செய்யவிருப்பதாகச் சொன்னார்.

எனக்கு இரண்டு மனதாக இருந்தது. அவ்வளவு பெரிய கருத்தரங்கிற்கான நல்ல கட்டுரை தயாரிக்க போதிய அவகாசமில்லையே என்பதும் என் தயக்கத்திற்குக் காரணம். 'சரி சார், கருத்துரையாளர் என்று போட்டு வையுங்கள், என்னால் கட்டுரை தயாரிக்க முடியவில்லை என்றால் சிலருடைய கட்டுரைகளையொட்டி என் அபிப்ராயத்தையும் சேர்த்துப் பேசி விடுகிறேன்'' என்றேன். ‘எல்லாருக்கும் ஏதாவது கருத்து இருக்கத்தானே செய்யும் இதில் கருத்துரை என்று தனியே போடவா, போட்டு விடுவோம்; என்றவர், ‘அப்படியானால், உங்க ஊர்ல சொல்லற மாதிரி.. உப்புக்குச் சப்பாணியா எல்லா அமர்வுக்கும் இப்படி ஒருவரைத் தயார் செய்ய வேண்டுமே, என்று வழக்கமான சிரிப்புக்கிடையே சொன்னார். அது ஒரு உற்சாகம் தொற்ற வைக்கிற சிரிப்பு. எனக்கு அவர் அப்படிச் சிரிக்கும் போதெல்லாம். அவரது கல்லூரி வளாகத்தின் வெயிலும் நிழலும் மாறி மாறி விழும் வாகை மர வரிசைகளுக்கடியில் அவருடன் பேசிக் கொண்டு நடப்பது போன்ற நினைப்பு ஓடும். இன்றும் அப்படி ஓடியது. அது கீதா நந்தினியையும் சட்டென்று நினைவுக்குக் கொண்டும் வரும்.

‘அதற்கு உங்கள் பழைய மாணவர்கள் யாரையாவது கூப்பிடுங்க சார்,' என்றவன், ‘ஏன் கீதா நந்தினி மாதிரி யாரையாவது கூப்பிடுங்களேன்,' என்றேன். ‘ஆஹா அப்படியே செஞ்சிருவோம், அப்ப நீங்க வர்றது உறுதியாகிறது, நல்ல கட்டுரையோடே வாருங்கள்' என்று சிரிப்புடன் சொல்லி விட்டு பதில் பேசக்கூட வழியில்லாமல் அலை பேசியைத் துண்டித்து விட்டார்.

கட்டுரை கருத்தரங்கம் எல்லாம் சமயத்தில் நன்றாக அமையும். சமயத்தில் இதில் போய் மாட்டிக் கொண்டோமே என்று தோன்றவும் வைத்து விடும். ஏனைய கட்டுரையாளர்கள், தங்களுக்கான நேரத்தையும் தாண்டி மேடைப் பேச்சு போல பேசித் தீர்த்து விடுவார்கள்.

சட்டென்று கீதா நந்தினியின் நினைவு தொற்றிக் கொண்டது. அவள் அந்தக் கல்லூரி மாணவியாய் இருக்கையில் ஒரு பயிலரங்கிற்குப் போயிருந்தேன். அது ஆறு ஏழு வருடங்கள் இருக்கும். அதுவும் சற்று நன்றாகவே அமைந்து விட்ட பயிலரங்கம். ‘தேர்' என்பதைப் பற்றிக் கவிதைகள் எழுதும் படி ஒரு பயிற்சி கொடுத்து விட்டு மதிய உணவுக்குப் பிரிந்திருந்தோம்.

அன்று பயிலரங்கத்திற்கு நான் சற்று தாமதமாகப் போனேன், அதே வாகை மர வரிசை. அப்போதுதான் நட்டு ஓரிரு வடங்கள் வளர்த்தியுடன் இருந்தது. எனக்குச் சற்று முன்னால் நந்தினி போய்க் கொண்டிருந்தாள். எனக்கு ஏனோ பாப்பா என்று அழைக்கத் தோன்றி விட்டது. ஊர் வழக்கமும் அதுதான். கொஞ்சம் சிறிய பெண்ணென்றால் ‘பாப்பா' வீட்ல பெரிவங்க யாரும் இல்லையா என்றோ பெரிய பெண்ணென்றால் ‘தாயீ' வீட்ல அவங்க இல்லையா, என்றோ கேட்பது வழக்கம்தான். அன்றும் பாப்பா என்று கூப்பிட்டேன். திரும்பியதும் கொஞ்சம் பழகின முகமாய்த் தெரிந்தது பஸ்ஸில் என்னுடன் தான் பயணம் செய்திருந்தாள். அப்போதே பார்த்துக் கொண்டுதான் வந்தேன். பஸ்ஸில் பார்த்ததற்கும் நடக்கும் போது பார்ப்பதற்கும் வித்தியாசம் இருந்தது. அதாவது பஸ்ஸில் பேச நேர்ந்திருந்தால் தாயீ என்றிருப்பேன். இப்போது ‘பாப்பா, தொல்காப்பியர் அரங்கு எங்கே இருக்கு?' என்றேன்.

‘சார் வாங்க நானும் அங்கேதான் போகணும்,' என்று வேகமாய் நடந்தாள். சற்றே தலையைத் திருப்பி ‘நான் உங்களுக்கு பாப்பா மாதிரியா தெரியறேன்?' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். என்னால் அவளளவுக்கு வேகமாக நடக்க முடியவில்லை. வெயிலும் வாகை மர நிழலும். மனசுக்குள் இளவெயிலே மரச் செறிவே என்று பாட்டு வேறு பாடிக் கொண்டிருந்தது. அவள் நடையைச் சற்றே தாமதப் படுத்தினாள். திடீரென்று ‘ சார் நீங்க கரஸ்ல எம்.ஏ எதுவும் படிக்கிறீங்களா,' என்று கேட்டாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘பொசுக்கென்று' போய் விட்டது. இல்லை நான் இன்னார் என்று  சொல்ல ஏற்கெனவே வரும் கூச்சத் தாடு இப்போது ஏதோ ஒரு ஏமாற்றமும் சேர்ந்து கொண்டது. ‘இல்லை சும்மா ஒர்க் ஷாப்புக்கு வந்தேன்,' என்றேன்.

நான் அவ்வளவு தாமதமாகி விடவில்லை என்பது போல அங்கே பயிலரங்கிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் முடிந்திருக்கவில்லை. அந்தப் பெண்ணும் ஏற்பாடுகளில் பங்கெடுக்க விரைந்தாள். அப்போதுதான் கவனித்தேன் அவள் உடல்வாகு உயரமான தொடையும் கால்களும், அதற்கு மாறாக இடுப்புக்கு மேல் அந்த அளவு உயரமற்றும் இருந்ததை. அதனால்தான் அவள் உட்கார்ந்திருக்கும் போது ‘தாயீ' ஆகவும், நடக்கும் போது ‘பாப்பா' வாகவும் காட்டியிருக்கிறது. அதை அவளிடம் இன்னொரு முறை சொல்லவும் செய்தேன்.

பயிலரங்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென்று கவனித்தேன். அந்தப் பெண் என்னையே ஒரு மாதிரியாகப் பார்ப்பதும் தலையைக் கவிழ்வதுமாக இருந்தாள்.ஒரு வேளை நான் தான் இதை நடத்தப் போகிற அப்பாவி, அவனிடமே எம்.ஏ படிக்கிறீங்களான்னு கேட்டு விட்டோமே என்று ஒரு சின்னத் தலைகுனிவோ என்னவோ.

‘தேர்' என்ற தலைப்பில் கவிதைகள் எழுதிக்கொண்டு வாங்க. அதை விட தேர் என்றதும் அதைக் குறித்து உங்களுக்கு என்ன எண்ணங்களெல்லாம் ஓடுது என்று எழுதிப்பாருங்க அது இன்னும் சிறப்பு என்று சொல்லியிருந்தேன். நந்தினி இரண்டையும்  முயற்சித்திருந்தாள். தேருக்குப் பின்னாலிருந்து அதன் சக்கரங்களை உருட்ட தடித்த கட்டைகளால் ஆன, ‘ தேருக்கு தடி போடுபவர்கள் கோணத்திலும் தேருக்குப் பின்னால் மயான அமைதியுடன் பரந்து விரிந்து கிடக்கும் வீதியைப் பற்றியும் கவிதை எழுதியிருந்தாள். அதையெல்லாம் பார்க்க விரும்பாத கடவுளைப் போய் தேரில் வைத்து ஊரே இழுக்கிறதே என்கிற ‘பகுத்தறிவுத் தொனியோடு' இருந்தது. அதை என்னிடம் காட்டுவதில் மற்றவர்களை விட முனைப்புடன் இருந்தாள். தேர் என்றால் கோயிலில் இழுக்கப்படும் தேர் மட்டும்தானா.. எங்கள் பகுதியில் பாடையைக் கூட தேர்  என்பதுண்டு என்று ஒரு மாணவரின் சிந்தனைகள் நன்றாக இருந்தது. கண்டமனூர் தேரோட்டத்தில் கலந்து கொள்ள மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தின் குரல் ஒன்றில் உக்கிரமாக ஒலித்தது. தேர் ஓடாமலிருக்கும் போது அதன் உள்ளாக நடக்கும் பல விடலைச் செயல்களை ஒருவர் விவரித்திருந்தார். ஆக, பயிலரங்கம் நல்லபடியாக வந்தது குறித்து துறையினருக்கு மகிழ்ச்சி, நந்தினிக்கு நிறையப் பாராட்டு குவிந்தது. அதற்காக எனக்கு நன்றி சொல்லி விட்டு முகவரி வாங்கி வைத்துக் கொண்டாள். அவ்வப்போது கவிதைகள் மட்டும் அனுப்புவாள். அவள் கவிதைகளை நான் அநேகமாகப் பாராட்டி விடுவேன். சிற்சில யோசனைகள் மட்டும் சொல்லுவேன். ஆனாலும் அவள் கவிதாயினி ஆகவில்லை. மாறாக நல்ல வர்க்கப் போராளியாக உருவானாள். என்னுடன் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் அவளைப் பல கருத்தரங்குகள் முகாம்களில் சந்தித்தேன். நன்றாக வாசிக்கிறாள் ஒரு தத்துவார்த்த அணுகுமுறை இருக்கிறது என்று எனக்கும் புரிந்தது. பேராசிரியரும் சொல்லுவார்.

எப்போதும் கவிதைகள் மட்டும் அனுப்புபவள் ஒரு முறை கவிதைகள் இல்லாமல் ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அதில் சின்ன ஆசையும் ஈர்ப்பும் தெரிந்தது. எனக்கும் ஆசை வராமல் இல்லை. ஆனால் பயமாக உணர்ந்தேன். அந்தப் பயத்தைப் புரிந்திருப்பாளோ என்னவோ அதைக் கேலி கூட செய்து அடுத்து ஒரு கடிதமும் கூடவே கவிதையும் எழுதியிருந்தாள். ஏனோ நான் அதைத் தொடராமல் விட்டு விட்டேன். சில நேரங்களில் வாய்ப்பை விட்டு விட்டோமோ என்று கூடத் தோன்று கொண்டிருந்தது, அந்தக் கடிதத்தைத் திருப்பி அனுப்புங்கள் அல்லது கிழித்துப் போட்டு விடுங்கள் என்று அடுத்த முறை சந்திக்கும் போது சொல்லும் வரை. அப்போது எங்கள் இருவருக்கும் அறிமுகமான ஒருவருடன் அவள் நெருக்கமாக இருந்தாள். இருவரையும் தமிழ் தேசியம் ஒன்றிணைத்திருந்தது. அவர்கள் திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அதற்குப் பின் கூட்டங்களிலும் இருவரையும் சந்திக்கவும் இல்லை.

பேராசிரியர் வாட்ஸாப் மூலம் அனுப்பிய அழைப்பிதழில் நான் சொன்னது போலவே கருத்துரையாளர்கள் என்று ஒரு அமர்வில் கீதாநந்தினி பெயர் இருந்தது. இன்னொன்றில் அவர் கணவர் பெயரும் இருந்தது. என்னை ஒரு தலைப்பின் கீழ் கட்டுரையாளராகப் போட்டிருந்தார். நான், ‘என்ன சார் இது, நல்ல அவகாசம் இருந்தாலே நான் கட்டுரை வாசிக்கத் திணறுவேன் இப்போது இரண்டு மூன்று நாள் அவகாசத் தில் நூற்றிச் சொச்சம் கதைகளை புரட்டிப் பார்ப்பது போல படித்தாலே நேரம் இருக்காது.. அதில் கட்டுரை எங்கே எழுத' என்று சொல்ல  யோசிக்கையில் அவரே அழைத்தார்.

‘சார் நீங்க நந்தினியை சொன்னீங்க அவங்க என்னடான்னா அவரது கதைகளில் பேச்சு வழக்கு பற்றி  நீங்க நிறையச் சொல்ல முடியும்ன்னு ஒரு நல்ல யோசனை சொன்னாங்க...' உங்களுக்கு அது சுளுவா செய்ய முடியும்ன்னு எனக்கும் தோணுச்சு. அப்புறம் வழக்கம் போல கடைசி நேரத்தில் பெரிய கிழிக்க எனக்கு வேற முக்கியமான வேலை வந்துட்டுன்னு சொல்லறாங்க..

 நீங்க முதல்ல எதையாவது வாசியுங்க சார் மீதியை அந்தப் பொண்ணே பாத்துக்கும்' சொல்லிவிட்டு சிரித்தார். சிரிப்பு சரியாகக் கூட முடியலை.. ‘அவங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆகி ரெண்டு வருஷமாச்சாம்...அதனால ஒரே அமர்வில் எங்களைப் போட்ராதீங்கன்னு வேண்டுகோள் வேற வைக்கறாங்க...எனக்கென்னவோ அந்தப் பொண்ணு வர்றதே உங்களுக்காகத்தான்னு தோணுது..' சிரித்தார். அந்தச் சிரிப்பு எப்போதும் போல பிடிக்கவும் செய்தது பிடிக்கவும் இல்லை.

வழக்கமான சம்பிரதாயமாக விழாவை ஆரம்பித்து வைக்க தேசிய விருது பெற்ற உள்ளூர் எழுத்தாளர் ஒருவரை அழைத்திருந்தார்கள். அவர்,‘நம்ம விழாவோட கதாநாயகன் எழுதின கதைகளை நான் படிச்சதே இல்லை...பெறகு எதைக் கொண்டாக்கும் நான் அவரைப் பத்திப் பேச,'என்று ஆரம்பித்தார். அப்படியும் பேசிக் கொண்டே இருந்தார் அவர் சொந்த எழுத்தைப் பத்தி, அப்பவே பலர் அவையில் நெளிய ஆரம்பித்து விட்டார்கள். என் அருகிலிருந்த நந்தினியின் கணவர் அல்லது முன்னாள் கணவர் வாருங்க வெளியே போவோம் என்று சிகரெட் பாக்கெட்டை மறைவாகக் காண்பித்தார். அவருடன் வெளியே வந்தேன்.

ரெண்டு பேரும் பழைய கதைகளைக் கொஞ்ச நேரம் பேசினோம். அவர், ‘தோழர் நாம ரெண்டு பேரும் பேசறது நம்ம இனக்குழுவின் தனித்த அடையாளத்தைப் பத்தித்தான். சும்மா ஏக இந்தியாங்கிற பேர்ல அந்தந்த மாநில அடையாளங்களை அழிக்கிற வேலையை அன்னைக்கி பிரிட்டிஷ்காரன் பண்ணினான் அவனுக்கு அவன் சந்தைப் பொருளாதாரமும் அவன் மொழியும் முக்கியம். இன்னைக்கி சுதேசியம் வந்த பிறகும் ஒரே மதம் ஒரே மொழின்னு பேசறதை நீங்களும் எதிர்க்கறீங்க நாங்களும் வலுவா எதிர்க்கறோம்... அப்பறம் நாமெல்லாமே இடதுசாரிகள்தானே நமக்குள்ள என்ன வித்தியாசம். சேர்ந்து செயல்படலாம் என்ன  சொல்றீங்கன்னு' பேசிக் கொண்டே போனார்.

தேநீர் இடைவேளை விட்டுட்டாங்க போல. எல்லாத் தலைகளும் வெளியே உலவ ஆரம்பித்தன. நந்தினி என்னை நோக்கி வந்தாள். இப்போது வனம் போல ஆகியிருந்தது அந்த வாகை மர வரிசை. நீண்ட அடர்ந்த நிழல். பேசாமல் அரங்கத்தை இங்கேயே வச்சா நல்லாருக்கும் என்றாள். அவள் கணவர் நகர்ந்து போனார். ‘நான் உங்களையெல்லாம் பாக்கலாம்ன்னுதான் வரவே சம்மதிச்சேன். எப்படி இருக்கீங்க,' என்றாள். ஆள் பூசின மாதிரியான உடலுடன் இன்னும் அழகாக இருந்தாள். நான் அவளை அளப்பதை உணர்ந்து கொண்டு விட்டாள் போல, ‘சார், நான் நல்லா இருக்கேன் சார், வேலைப்பளுன்னு ஒண்ணும்கிடையாது, நேரத்துக்கு ஓட வேண்டியது அது இதுன்னு எதுவும் இல்லாம இயக்க ரீதியா செயல்படறேன்.. பாருங்க ஆளு எப்படி இருக்கேன்னு' என்று இரண்டு கைகளையும் உள்ளங்கை விரிய நீட்டினாள். கருப்புச் சேலையும் ஜாக்கெட்டும் கவ்விப்பிடிக்கிற பளீர் நிற புஜமும் தோளுமாக ஆள் நன்றாக இருந்தாள். ‘நீங்களும் பாக்கறதுக்கு இப்ப ஆள் தேறிட்டீங்க சார், தொப்பையைக் குறைச்சா நல்லது. அதைப்பத்தி மேடம்ல்லா கவலைப்படணும்..' சிரித்தாள். பழைய குறும்பு இன்னும் போகவில்லை.

‘பசங்கள்ளாம் பெருசா ஆயிருப்பாங்களே என்ன பண்ணறாங்க?' சொன்னேன். ‘அவங்களுக்கு கேட்பானேன். புத்திசாலியா வளத்திருப்பீங்க,'என்றாள். ‘அதெல்லாம் ஒண்ணும் இல்லை அவங்களா வளர்றாங்க அவ்வளவுதான்' என்றேன். என்  சட்டையில் ஊறிய எறும்பொன்றைத் தட்டி விட்டாள். இரண்டு மூன்று தரம் அவள் முயற்சித்த பின்னரே அது கீழே விழுந்து. அதற்குள் நெருக்கமாக வந்திருந்தாள். அவள் உடலின் வாசனை நாசிக்குள் புக, என் உடலுக்குள் அவளைப் பார்க்க முடிந்தது. அதைத் தவிர்க்க, ‘என்னை கட்டுரை வாசிக்கச் சொல்லி நீதான் சொன்னாயாமே'என்றேன்.

‘சார் என் மேல பழியைப் போட்டுட்டாரா.. மத்தியானம்தானே செஷன்.. தினமும் நீங்க வீட்டில பேசறதுதானே சார். உங்க மேடமே நூறு சொலவடை சொல்லுவாங்க அதைச் சொன்னாலே போதும்.' ‘சரி வாங்க, கூப்பிடறாங்க போவோம்.' என்றாள். அவளது மேனாள் கையை அசைத்து அரங்கிற்குள் வரச் சொன்னார். ‘ சார் இரவு தங்கற மாதிரிப் பாத்துக்குங்க சார். கொஞ்சம் மறுபடி கவிதைகள் எழுதியிருக்கேன் சிலது ரெட்டாரிக்கா இருக்கு.. காண்பிக்கறேன்' என்று பேசிக் கொண்டே வந்தாள். இன்னும் எதையோ யாரையோ முந்திக் கொண்டு வந்து காண்பிக்கிற பழைய தன் முனைப்பு தென்பட்டது அவள் பேச்சில்.

‘வாய்ப்பு வருதுடே'ன்னு மனசில் லேசாக ஒரு மின்னல் வெட்டியது.அதைத் தொடரும் இடி அவளுக்குள் இடித்தது போல. ‘சார் அந்தக் கடிதங்களை என்ன பண்ணினீங்க, அதான் சார், சரித்திர காலத்துக்கு முந்திய கடிதம் ஒண்ணு' என்றாள். ‘ஓ அதுவா அது மியூசியத்தில் பத்திரமா இருக்கு' என்றேன். 'மறந்து போய் எங்கேயாவது ஃபேஸ்புக்ல போட்றப் போறீங்க,' என்று சொல்லி விட்டுச் சிரித்தாள். அதற்குள் மேனாள் கணவரை நெருங்கியிருந்தோம். அவரும், ‘தோழர் வாங்க அமர்வு ஆரம்பிச்சாச்சு' என்றார். ஏனோ அவரது ‘தோழர்' என்ற அழைப்பில் ஒரு ஒவ்வாமை தென்பட்டது. அது ஒரு நல்ல விளிச் சொல்தானே என்று சமாதானமும் கூடவே வந்தது.

முதல் அமர்வு ‘கதைகளில் சமுதாயப் பார்வை'. அப்படி இப்படி நகர்ந்து கொண்டிருந்தது. பேசியவர் ஒரு கதையை முன் வைத்து என்னவோ ஆரம்பித்தார். மேனாள் பிடித்துக் கொண்டார். அது சரித்திரக் கதை ஐயா, அதில எப்படி சமூகப்பார்வை என்று கருத்துச் சொல்ல ஆரம்பித்தார். சரித்திரக் கால சமூகம்ன்னு சொல்ல முடியாதா என்று பதில் கேள்வி என்று எதிர்ப்பு போலக் கிளம்பியது. பேசுபவர், கருத்துரையை கடைசியில் சொல்லுங்கள் என்றார். சரி என்று அமர்ந்த மேனாள் கணவர், திடீரென்று எழுந்து ‘அமர்வே முடிஞ்சிரும் போல இருக்கு அப்புறம் எப்படி நான் கருத்தைச் சொல்லறது,' என்று ஆரம்பித்தார். பேராசிரியர் என்னைப் பார்த்தார். நான் என்ன சொல்வது என்று  யோசிக்கும் முன் நந்தினி, ‘அவர் சொல்லறதும் சரிதானே கருத்துரைக்கென்று நேரம் ஒதுக்கிக் கொண்டு கட்டுரையாளர்கள் பேச வேண்டும்,' என்றாள். இது என்னடா புதுக் குழப்பம் என்று தோன்றியது. என்ன நினைத்தாரோ கட்டுரை வாசித்தவர் நான் ஐந்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன் என்று வாசிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து மேனாள்கணவர் பேசிய பின் அமர்வின் அடுத்த கட்டத்திற்கு நகரலாம் என்று முடித்து விட. மதியச் சாப்பாட்டிற்காகக் கலைந்தோம்.

எனக்கான உணவுத்தட்டையும் நந்தினி எடுத்துக் கொண்டு வந்தாள். அநேகமான அரங்குகளில் அவள் என்னை இப்படி அன்னபூரணியாகக் கவனிப்பாள். மேனாளும் இரண்டு தட்டுக்களுடன் வந்தார்.‘ நீங்களே சாருக்கும்  எடுத்துட்டு வந்துட்டீங்களா தோழர்,' என்று மனைவியிடம் கேட்டார். ஆமாம் என்று தலையாட்டினாள் திருமதி கீதா நந்தினி. மத்தியான அமர்வில் நான் பெரிதாகக் கஷ்டப்படவில்லை ஓரளவு தயாரிப்புடனும் வந்திருந்தேன். எழுத்தாளரையும் அவர் கதைகளில் பேச்சு வழக்கையும் விடுத்து, மொத்தத்தில் பேச்சு வழக்கில் எழுதலாமா கூடாதா என்ற விவாதமாகத் திரும்பி மய்யமாக முடித்து வைக்கப்பட்டது நந்தினியால். மேனாள் அதற்குக் கடும் ஒத்துழைப்பு நல்கினார். இரண்டு கருத்துரையாளர்களுக்கும் ஏக மகிழ்ச்சி என்று புரிந்தது.

என் அமர்வு முடிந்து வெளியே வந்து மேனாளுடன் ஒரு சிகரெட்டைப் பகிர்ந்து கொண்டு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சரி உள்ளே போகலாமா என்று நான் போகத் திரும்பினேன், நந்தினி வெளியே வந்து, ‘கேசவனுடன் ரெண்டு நிமிஷம் பேசிட்டு வந்திருதேன்' என்றாள். இப்போதுதான் நினைவுக்கு வருது, தோழர் கேசவன் அவளின் மேனாள் கணவரின் பெயர். பேராசிரியருக்கு வேலைகள் உழுக்கெடுத்துக் கொண்டிருந்தன. வருகைச் சான்றிதழில் கையெழுத்திடுவது அன்றே ஊருக்குச் செல்பவர்களுக்கு பணம் வழங்குவது என்று மதியத்திற்கு மேல் அவர் அலுவலகத்திலேயே மாட்டிக் கொண்டார். அவருடன் கல்லூரி வாகனத்தில் விடுதிக்குப் போய்விடலாம், காத்திருங்கள் என்று மட்டும் செய்தி சொல்லியிருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை நிறையப்பேர் வரலாம் என்று எதிர்பார்த்தேன். சில நெருங்கிய நண்பர்கள் நாளைதான் வருகிறார்கள். பார்த்துப் பேசி நாளாயிற்று. இந்த வகைக் கருத்தரங்குகளில் இது ஒரு கூடுதல் மகிழ்ச்சி. இருட்டும் முன்பே விடுதிக்கு வந்து விட்டேன். அறை பெரிதாக வசதியாய் இருந்தது. கூட்டத்தில் பேச விட்டுப் போனதெல்லாம் இப்போது ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. அது எனக்கு மட்டும்தான் அப்படி என்று நினைத்தேன். பலருக்கும் அப்படித்தான் என்று பின்னர் கேள்விப்பட்டேன். பேராசிரியர் எட்டு மணி வாக்கில் வருகிறேன் என்று சொல்லியிருந்தார். அய்யோ அது வரை தனிமைச் சிறைதானா என்று நினைக்கும் போது நந்தினி வந்தாள். கூடவே கேசவனும். அவளுக்கு என் அறைக்கு நேர் எதிராக கீழ் வரிசையில் அறை. எனக்கு அறை மேல் வரிசையில். நந்தினி இப்போது அரக்கு வர்ணச் சேலைக்கு மாறியிருந்தாள். கட்டிலில் கைகள் இரண்டையும் பின்னுக்கு ஊன்றி உட்கார்ந்தாள். இடுப்புப் பகுதியில் சேலை சற்றுத் தொய்வாகக் கிடந்தது. கேசவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். என்னை அதிகம் யோசிக்க விடவில்லை நந்தினி. ‘சார், கேசவனுடன் கொஞ்சம் பேச வேண்டியதிருக்கிறது, எங்களுக்கு இந்த அறையைத் தந்து விட்டு நீங்கள் என் அறையை எடுத்துக்க முடியுமா' என்றாள். எடுத்துக்கங்க என்று நேரடியாக உத்தரவுதான் இடவில்லை. நல்ல வேளையாக நான் இன்னும் பேண்டைக் கழற்றி லுங்கி பனியனுக்கு மாறி விட்டேற்றியான நிலைக்கு வந்திருக்கவில்லை. அதனால் சட்டென்று பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அவள், ‘சாவி வேண்டாமா,' என்று அவளது அறைச் சாவியை என் நீட்டிய கையில் பொத்தினாற் போல வைத்தாள். ரோஜா மொட்டுப் போல அவள் கை மொழிகள் என்று தோன்றியது கூடவே இது ரெட்டாரிக்கா ரொமாண்டிக்கா என்றும் தோன்றியது.

பின்னாலேயே கேசவன் வந்து அவளது பையை எடுத்துச் சென்றான். ‘தோழர் இந்தப் பக்கத்து அறை என்னுடையதுதான் வேண்டுமானால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்', என்றான். அவளது அறையும் இரண்டு கட்டில்கள் கொண்ட அறைதான். ஆனால் இரண்டு சிங்கிள் கட்டில்கள் நடுவில் இடைவெளி. ஒன்றில் ஒருவர் மட்டும்தான் படுக்க முடியும். அதுதானே நெருக்கத்திற்கு வசதியாயிருக்கும் என்று தோன்றும் போது பேராசிரியர் வந்தார். அவருக்கு ஏற்கெனவே விஷயம் தெரியும் போல. பேச்சுக்கிடையே சிரிப்பவர் இப்போது சிரித்துக் கொண்டே மட்டும் இருந்தார். நானும் சிரிக்க ஆரம்பித்தேன். எனக்கு வேறு வழியும் இல்லை. அப்போது பார்த்து விடுதிப் பையன் வந்தான், எங்களைப் பார்த்து அவனும் சிரித்த படி வாசலில் நின்றான். ஒருவரின் கள்ளமற்ற சிரிப்பும் மற்றவரைத் தொற்றிக் கொள்ளும் ஒரு ஒட்டுவாரொட்டிதானே. ‘சரி அவனிடம் வேண்டியதைச் சொல்லி விடுங்கள்,' என்றார் பேராசிரியர். இருவரும்  சற்று சீரியஸாகி தேவைப்படுகிறவற்றை அவனிடம்  சொல்ல ஆரம்பித்தோம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com