ஓவியம்
ஓவியம்ரோகிணிமணி

வித்தை

அய்யம்மாவை,  வயதான சிப்பிப்பாறை நாய், மற்றும் இங்கும் அங்கும் அலகைத் திருப்பி எல்லாத் திசைகளையும் கொத்தும் அந்தக் கிளிக் கூண்டு சகிதமாகக் கூட்டிக்கொண்டு வந்து காரை மீனா நிறுத்தினாள்.

‘‘அய்யம்மாவோடு வந்துக்கிட்டு இருக்கேன்'' என்று ஏற்கெனவே அழகருக்கு மீனா தகவல் சொல்லி யிருந்தாள். அய்யம்மாள் தான் அழகர் செல் பேசி எண்ணை இரண்டு இரண்டு இலக்கமாகத் தெளிவாக உச்சரித்து, ‘இன்னைக்கு கொத்துவேலைக்குப் போக வேண்டாம். வீட்டில இருக்கட்டும்,' என்று மீனாவை அவனிடம் தெரிவிக்கக் கேட்டுக்கொண்டதும். மீனா அழகரிடம் கூடுதலாக ஒன்று சொன்னாள். ‘‘அய்யம்மா அம்மையைத் தூக்கிவிட்ட தீக் காலோடு அங்கே வரவேண்டாம். இன்றைக்கு எங்க வீட்டில தங்கிவிட்டு, நாளைக்குக் காலம்பர அங்கே வருவா அழகரு. முடிஞ்சா செத்துப் போன உங்க அத்தைக்காரியோட  பைரவருக்கு ஏதாவது கவுச்சி வாங்கி வையிங்க.. அது மூணு நாளாகச் சாப்பிடாமல் கிடக்காம். சரியா?''

உள் நடையில் உட்கார்ந்திருந்த அழகர், சத்தம் கேட்டு எழுந்துவந்து வாசல் இரும்புகேட்டை நெருங்குவதற்குள் மீனா கார் கதவைத் திறந்து வெளிவந்தாள். அய்யம்மாள் இறங்குவதற்குத் தோதுவாக, வீட்டு வசத்தில் உள்ள வலது கதவைத் திறந்ததும், ஒரு சோர்வு நிரம்பிய குரலில் ‘‘சிப்பி இறங்கு'' என்று அய்யம்மா சத்தம் கொடுத்தாள். அது அவளை முகர்ந்துகொண்டு காரின் பின் சீட்டில் அய்யம்மா  பக்கத்திலேயே நின்றது.

‘‘பெயரே சிப்பி தானா? இவ்வளவு நேரம் அதைக் கவனிக்கலையே'' என்று மீனா சிரித்தாள். அய்யம்மாவைத் தாண்டிக்கொண்டு அது ஒரு தளர்ந்த சிறு தாவலில் வெளியே குதித்தது. அதனுடைய கால் நகங்கள் உராயும் சத்தம் மேலும் கேட்கவிடாமல் அதுவே பொத்திக்கொள்வது போல, பாதங்களை ஊன்றிக் காற்றை மோப்பம் பிடித்தது. காதுகளையும் வாலையும் விரைப்பாக நிமிர்த்தி வைத்து அழகர் வருவதைப் பார்த்தது.

‘‘பார்த்து இறங்கு'' மீனா, அதற்கு மேல் அகலப்படுத்த முடியாத பின் கதவை அதன் கீல்கள் இறுகும்வரை திறந்து காத்திருந்தாள். அய்யம்மாள் ஒரு காலை நிலத்தில் ஊன்றி, ஒரு கையால் கார்கதவு விளிம்பைப் பிடித்தபடி இறங்கினாள். மற்றொரு கை அவளுடைய நிறை மாதச் சூல் வயிற்றின் மேல் படிந்திருந்தது. ஒரு வளையல் பூச்சி போல தன் அடுத்த நகர்வுக்கான முன்னுணர்வுடன் தன்  உடலை அவள் திருப்பிக்கொண்டு இறங்கினாள். நூல் சேலையில் சிப்பியின் எச்சிலோ சிறுநீரோ பட்டுக் கறையாகியிருந்தது. வாடையும் அதனுடையதாகவே இருக்கும்.

‘‘கிளிக்கூண்டை எடுத்துக்கிடுங்க அழகர். முன்னால இருக்கு பாருங்க'' மீனா சொல்லும் போது, அய்யம்மாவையே அழகர் பார்த்துக்கொண்டு இருந்தான். ‘‘சரி, அப்ப நீங்க இவளைப் பிடிச்சு மெதுவா வீட்டுக்குள்ளே கூட்டீட்டுப் போங்க. நான் கூடவே வாரேன்'' என்று சொன்னாள். அய்யம்மாள் அழகர் பக்கம் திரும்பி, ‘‘அதை அப்படிப் போஸ்ட் கம்பியில கட்டிப் போடு. Jsqg செய்யாது'' என்று அவள் கால் பக்கம் இருந்த நாயைக் காட்டினாள். தரையில் உரசி உரசி இழுபட்டுக்கொண்டு இருந்த இரும்புச் சங்கிலி உண்டாக்கிய சத்தம் அவளுக்கு ஒரு பல் கூச்சத்தை உண்டு பண்ணியதும் ஒரு காரணம்.

அது மட்டுமல்ல. மேற்கொண்டு நகராமல் அங்கேயே அழகர் அதைக் கட்டிப்போடும் வரை நின்றாள். மீனா இதற்குள் முன் சீட்டில் இருந்த கிளிக்கூண்டை எடுத்தாள். அது ஒரு கண்ணாடிக் கூண்டு போலவும் அதில் இருப்பது ஒரு கண்ணாடிக்கிளி போலவும் எங்கேனும் அது இடிபட்டு உடைந்துவிடக் கூடாது என்ற கவனத்தோடும் ஒரு இழுப்பறையை உருவும் தன்மையில் அவள் அதைச் செய்தாள். அய்யம்மா அதைப் பார்த்துச் சிரித்தாள். ‘‘ எங்க அப்பன் எல்லாரையும் போல கம்பியில கூண்டு செய்யாமல் மரத்தில செஞ்சான். நீங்க அதைக் கண்ணாடியில செஞ்சுட்டது போல இல்லா இருக்கு பார்க்கதுக்கு''

அந்தக் கூண்டைப் பற்றி அய்யம்மா சொல்வதை விட, இப்போது இறந்து போன அய்யம்மாவின் தாயார் பெத்தாச்சி சொல்வதைக் கேட்கவேண்டும். மீனா நேரடியாகவே அதைக் கேட்டு இருக்கிறாள்.

மீனாவுக்கு பெத்தாச்சியை ரொம்பப் பிடிக்கும். மீனாவின் அம்மா ஊர்க்காரி அவள். மீனாவின் அம்மாவிற்கு பெத்தாச்சி இல்லாமல் ஒன்றும் முடியாது. ‘‘பெத்தாச்சியா? அது என்ன பேரு பெத்தாச்சி?'' என்றால், ‘‘அது ஒரு பேரு'' என்று முடித்துக்கொள்வாள். இன்னும் கேட்டால், ‘‘பேராச்சிண்ணு எல்லாம் இருக்குல்லா. அது போல இது பெத்தாச்சி'' என்பாள். விடாமல் அதற்கு மேலும் கேட்டால்‘‘இப்படி ஒண்ணொண்ணா நோண்டிக்கிட்டே போனால் நம்மள ஏமாத்தீரும். ஒண்ணுமே இருக்காது கடைசீயில. காத்து என்ன, காத்து என்னண்ணு நோண்டிக்கிட்டே போங்க, கடலு என்ன கடலு என்னண்ணு நோண்டிக்கிட்டே போங்க. ஒண்ணும் இருக்காது.''

ஓவியம்
ஓவியம்ரோகிணி மணி

இதைப்  பெத்தாச்சி சிரித்துக்கொண்டே சொல்லும் போது, இரண்டு பெரிய வளையங்கள் காதுகள் போலத் தொங்குகிற ஒரு ஆளுயர வெண்கல அண்டாவில் அவள் தண்ணீர் எடுத்து ஊற்றி நிரப்பிக்கொண்டு இருந்தாள். அவளுடைய அந்தக் கிளிக்கூண்டையும் எங்கே வேலைக்குப் போனாலும் கூடவே எடுத்துக்கொண்டு போய் கண் எட்டுகிற தூரத்தில் எதிரேயே வைத்துக்கொள்வாள்.  அன்றைக்கு அது குத்துப்புரையில் இருக்கும் இரண்டு கல் உரல்களில் பெரியதின் மேல் இருந்தது. கிளி சத்தம் போடாமல் ஊடு கம்பில் திரும்பித் திரும்பி இடம் மாறிக்கொண்டு இருந்தது.

பெத்தாச்சி இவ்வளவு கனத்த வேலை செய்கிறவள் என்றாலும் ஆள் நறுங்கிப் போய்த்தான் இருப்பாள். சாய்த்துச் சாய்த்து நடப்பதற்கு அவளுடைய இடது கண்ணில் பூ விழுந்து, வலது கண்ணால் தன் நடமாட்டத்தை நிதானிப்பதாலும் இருக்கலாம். இதை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அவள் சிரிப்பும் பாட்டும்.

லாடக்கார பெருமாள் ஆசாரியின் கொல்லுப் பட்டறை வருஷத்தில் பாதி நாள் மூடியே கிடக்கும். ஊர் ஊராக பெருமாள் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து ஆட்களோடு போய்விடுவான். பட்டை கழட்டிய வண்டிச் சக்கரம் மண் சுவரோரம் சாய்ந்து நிற்கும். வெதுவெதுப்பான உலையும் துருத்தியும் சாம்பலுமான பட்டறையில் ஒரு நார்ப்பெட்டியில் வேப்ப முத்துப் பொறுக்கும் பெத்தாச்சி பாடுகிற பாட்டு அவளுடைய அப்பனிடமிருந்து அவளுக்குக் கிடைத்தது தான். ‘‘யாராவது லவுட்ஸ்பீக்கர் செட்டுக்காரன் அகப்பட்டால் தான் உண்டு பெத்தாச்சியைக் கல்யாணம் பண்ணுததுக்கு'' என்று அவள் சதா பாடுவது பற்றி ஒரு பேச்சு வந்துவிட்டது. ஆனால் அப்படி எல்லாம் ஆகவில்லை. அதுவும் நல்லபடியாகவே நடந்தது.

மேலச் செவலில் பரம்பரைத் தச்சாசாரி குடும்பத்தில் வந்த, நிலைவாசல் விட்டுத் தச்சுக் கழிப்பதில் தேர்ந்த தாந்திரீகம் உடைய  சாஸ்தாவுடையான் கண்ணுக்குப் பெத்தாச்சி பிடித்துப் போய்விட்டாள். மேல் முதுகு வரை தோளை அடைத்துப் பந்தல் போட்டது போல விரிந்து கிடக்கும் அவளுடைய முடியைப் பார்த்தும், முன் பக்கம் இடுப்புக்கு மேல் கடைசல் தாலிச் செப்பு வாக்கில் அவளுக்கு அமைந்துவிட்டவை மோகினியை நிகர்த்தவை என்பதாலும்  சாஸ்தாவுடையான் கிறங்கிவிட்டான் என்றும், அது எப்படி இன்னாரை இன்னார் கட்டிக்கொள்ளலாம் என்றும் எல்லாம் பேச்சும் எதிர்ப்பும் வந்தது.

சாஸ்தாவுடையான் இதற்கெல்லாம் அசரவே இல்லை. ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமையில்  திரிபுராந்தகி அம்மன் சன்னிதியில், மார்கழி மாதம் அதிகாலையில் வெண்சங்கு ஊதிப் போகும் நயினார் பண்டாரம் சங்கு பெருக்கிக்கொண்டு, அவருடைய கையால் மணியையும் அடிக்கத் தாலி கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று சொன்னான். இதில் பெத்தாச்சியின் அப்பனுக்கு எந்த மன வருத்தமும் இல்லை. சம்மதம் தான்.

‘‘எங்களை மீறி, எப்படித் தாலி கட்டுதான் பார்ப்போம்? முதல் பொலி அவ அப்பன் லாடக்காரந்தான். அவனும் சேர்ந்துகிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி நம்மளை சுத்துல விடுதான்'', என்று ஒரே கூப்பாடு.

‘‘தாலி தானே கட்டப்பிடாது உங்களுக்கு. ஒண்ணா இருந்துக்கிடலாமுல்லா?'' ,சாஸ்தா பெத்தாச்சியைக் கூட்டிக்கொண்டு அடிவாரத்துப் பக்கம்  வடக்குமேட்டுக்குப் போய்விட்டான். கடைசிவரை தாலிகட்டவும் இல்லை. சாஸ்தா குட்டி அங்கே குடியேறின பிறகு, அவனுடைய தச்சு வேலைகளில் இதுவரை இல்லாத ஒரு ரம்மியம் கூடியது. முக்கியமாக அவனுடைய கைவேலைகளுடன் கூடிய வாசல் கதவுகளுக்கு பெரும் கிராக்கி உண்டானது. அவன் அதில் கொடிகளும் இலைகளும் பூக்களும் உள்ள செதுக்கல்களை மட்டுமே செய்தான்.

சாஸ்தா குட்டி இழைத்துச் சேர்த்துக்கொடுத்த கதவுகளில் உள்ள வளைகொடிகள் காற்றில் அசைவதாகவும், பூக்களில் இருந்து மதுரமான வாசனை குறிப்பிட்ட பஞ்சாங்க காலங்களில் உண்டாவதாகவும், மகாதீபம் ஏற்றும் நேரத்தில் ஒரு வாசல் கதவு பிரகாசமாகச் சுடர்ந்து, கதவிலிருந்து எரியும் நெய்யின் வாசனையோடு தைலக்கோடுகள் வழிந்ததாகவும் எல்லாம் அங்கங்கே சொல்லிக்கொண்டார்கள்.

ஓவியம்
ஓவியம்ரோகிணி மணி

சாஸ்தா குட்டியின் தோற்றம் முன்னைவிடவும் மாறியிருந்தது. நெற்றியில் சந்தனக் கீற்று. எப்போதும் தாடியிருக்கும் முகம். கழுத்தில் ஸ்படிக மாலை. இடுப்பில் கருப்பு வேட்டி கரண்டைக்கு மேல். துபாயில் சம்பாதித்துவிட்டு வந்தவர்கள் கட்டும் வீடுகளின் மரவேலைகள் நிறைய அவனுக்கு வந்தன. மாதக் கணக்கில் பெத்தாச்சியைத் தனியாக விட்டு விட்டுப் பெயரே தெரியாத கேரளா ஊர்களுக்கு எல்லாம் போக வேண்டிய சூழ்நிலை. அப்போதுதான் அவன் அப்படியொரு சிப்பிப் பாறை நாயைக் கொண்டுவந்து காவலுக்கு வைத்தான். நல்ல கன்னங்கருப்பு. வில் மாதிரி உருவிட்ட மாதிரி உடல். போகப் போக, ஒன்றில் இருந்து ஒன்றாக அதை விருத்தி செய்யவும் அவனுக்குத் தெரிந்தது.

முதல் குட்டிக்கு வைத்த அதே பெயர் தான், அதற்குப் பின்னால் பெருகின எல்லாச் சிப்பிப்பாறைக் குட்டிகளுக்கும். ஒரு தடவை பெத்தாச்சியிடம் இதுவரை எத்தனை சிப்பிகள் வளர்ந்திருக்கும் நம் வீட்டில்? என்று கேட்டான். பெத்தாச்சி வெவ்வேறு சம்பவங்களின் ஞாபகத்தை இணைத்து, விரல் விட்டு எண்ணி, அவனிடமும் ஒப்புதல் கேட்டு உறுதிப்படுத்தினாள். சாஸ்தா குட்டி, அவற்றுள் துர்மரணம் அடைந்த ஒன்றைக் குறைத்துவிடச் சொன்னான். பெத்தாச்சி ஒன்று போக மற்றதன் எண்ணிக்கை சொன்னதும், ஒரே ஒரு சொடக்கு இட்டான். தற்சமயம் வாசலில் நின்றுகொண்டிருந்த சிப்பி ஓடிவந்து ஒரு மாதிரிக் குளறலாக ஊளையிட்டுக்கொண்டு அவர்கள் முன்னால் படுத்துக் கொண்டது. அசைவில்லை.

சாஸ்தா குட்டி மறுதலையாக உட்பக்கமாக வலது கையைச் சுழற்றி இடது உள்ளங்கையைத் தட்டி மீண்டும் ஒரு சொடக்கு இட, பெத்தாச்சியை முகர்ந்துகொண்டு, அவள் சொன்ன எண்ணிக்கையில் இதுவரை வளர்த்த சிப்பிகள் பூராவும் பளிங்கு மினுங்கும் கண்களுடன் நின்றன. கேந்திப் பூ போல எல்லாக் கழுத்திலும் கெட்டியான ஒரு அடர்மஞ்சள் நிற மாலையிருந்தது. பெத்தாச்சி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகத் தடவிக்கொடுக்கக் கொடுக்க, அவை புகைத் தகடாகிக் கரைந்தன. சடசடவென நீரை உதறுவது போலக் காதைச் சிலுப்பியபடி இதுவரை அசைவற்றிருந்தது எழுந்து வாசலுக்கு ஓடியது.

அதே போல் தான் அந்தக் கிளிக் கூண்டும். சிப்பிப் பாறை நாய் பாதுகாப்புக்கு என்றால், கிளிக்கூண்டு பெத்தாச்சியின் பேச்சுத் துணைக்கு. பெத்தாச்சி சில வருடங்கள் பிந்தித்தான் அய்யம்மாளை உண்டாகியிருந்தாள். ஏற்கெனவே தாயில்லாமல் வளர்ந்தவள். மாட்டுத் தரகுக்குப் பொள்ளாச்சிப் பக்கம் போன இடத்தில் அவளுடைய அப்பா பெருமாள் விஷக்கடியில் இறந்து போனதாக அவள் கேள்விப்பட்டாள். அவளுக்கு அப்பா அவளுடைய சின்ன வயதில் செய்த சமையல் வாசனை வந்து 

எச்சில் சுரந்தது. கொல்லுத் தெருவில் யாருடனாவது பேசவேண்டும் போல இருந்தது. ரத்தினாம்பா அக்காவின் அம்மாவுக்குப் பேறுகாலம் ஆகும் போது தலை இறங்குவதை அவள் பார்த்திருக்கிறாள்.

சாஸ்தா குட்டி அவள் கவலையைப் போக்குவதற்காகவே கிளிக்கூண்டைச் செய்ய ஆரம்பித்தான். கம்பியைப் போல ஈர்க்குக் கனத்தில் அவனால் மரத்தை இழைக்க முடிந்தது. கூண்டு நெளிவும் சரி, சுற்றுக் கட்டுக்கான வளையங்களும் சரி கம்பியை விட நேர்த்தியாக அமைந்திருந்தன. இரண்டு மூன்று நாட்களாக அதை அவன் வீட்டை விட்டு வெளியே போகாமல் செய்தபடி இருந்தான்.

குழந்தை உண்டாகியிருக்கும் காலத்தில் அவ்வளவு தூரம் இரண்டு பேரும் உடல் ஒன்றி இருக்கமுடியுமா என்று பெத்தாச்சிக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. செய்து முடித்த அதை சாஸ்தா அவளைத் தூக்கிப்பார்க்கச் சொன்னான். பிரம்பினால் பின்னப்பட்ட கூடை போல எடையே இல்லாத அதை அவள் வலது கையில் ஏந்தியபோதும் பெத்தாச்சி உடல் நிறைவிளக்காகவே இருந்தது.

சாஸ்தா குட்டி ஒன்று செய்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு அழகப்பன் காளையை ஓட்டிக் கொண்டு சொந்த ஊரான செவலுக்குப் போய், எதிரே வந்தவர்களுக்குக் குறி சொல்லி, அவனுக்கு மிகவும் பரிச்சயமான, கிழக்குத் தெருவும் தெற்குத் தெருவும் கூடும் இடத்தில், அந்த ஊரின் மேல் அதற்கு முந்திய மொத்தக் காலத்தின் நிழல் விழுவது போல் குடைபிடித்துக் கவிழ்ந்திருந்த வாகை மரப் பொந்திலிருந்து ஆண் ஒன்று பெண் ஒன்றாக இரண்டு கிளிகளைப் பிடித்துவந்து பெத்தாச்சிக்குக் செய்த அந்த மரக் கிளிக் கூண்டில் விட்டான்.

இரண்டோடும் அவளைப் பேசிக் கொண்டு இருக்கச் சொன்னான். அவள் அந்தக் கிளிகளிடம் ஒருநாள் ‘லாடக் காரனும் வேப்பமுத்தும்' என்று ஒரு கதை சொல்வாள்.. இன்னொரு நாள் அந்தக் கிளிகளின் உற்சாகத்திற்காக, ‘‘உங்கள் வாகையடி அம்மன் இன்றைக்கு என்ன சேலை உடுத்தியிருக்கிறாள்'' என்று கேட்பாள். அவளுக்குத் தெரியும். அந்த வாகை மரத்தடி அம்மனுக்கு எப்போதும் சிவப்பு வஸ்திரமே சாத்தியிருக்கும். கிளிகள் இரண்டும் சந்தோஷமாக ‘சிவப்பு, சிவப்பு' என்று சத்தம் போடும்.

சாஸ்தா குட்டி ஒருநாள் வேலையாக வெளியே போகும் போது, ‘‘கூண்டுக் கதவைத் திறந்து வை. சாத்த வேண்டாம். தானாக ஒன்று பறந்து போய்விடும். ஒன்று அப்படியே இருக்கும்'' என்று சொல்லிவிட்டுப் போனான். அப்படியே ஒரு செவ்வாய்க் கிழமை காலை எழுந்து பார்க்கையில் கூண்டில் ஒரே ஒரு கிளி மட்டும் இருந்தது,  கீச் என்ற சத்தத்தின் பச்சை நிற நீள் கோடு ஒன்றை அவளால் வீட்டிலிருந்து வாசல் வரை பார்க்க முடிந்தது.

இரண்டு முட்டைகளை, அப்புறம் இரண்டு குஞ்சுகளைச் சில காலத்தில் அவர்கள் பார்த்தார்கள். கிளிகள் இப்படிப் பெருகுவதும், ஒன்று மட்டும் இருக்க, மற்றவை பறந்து போவதுமாகத்தான் இப்போதுவரை இருந்து வருவதாக அய்யம்மாள் சொன்னாள்.

மீனா கையில் இருந்த கிளிக்கூண்டைப் பார்த்தாள். அதன் கதவு திறந்தே இருந்ததையும், எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு எதற்கும் சித்தமாக இருக்கிற கிளி தன் வட்டச் சிமிட்டல்களில் இந்த உலகம் முழுவதையும் தன் காலடியில் குவித்து மறுபடி வெளியே தள்ளுதையும் பார்த்தாள். ‘‘சிரிக்கிறாயா நீ?'' என்று மீனா அதைப் பார்த்துக் கேட்டாள். கடைசி ‘நீ'யை விட்டுவிட்டு அது பதிலுக்கு மீனாவிடம், ‘‘சிரிக்கிறாயா?'' என்று கேட்டது. ‘கொழுப்பு' என்று அய்யம்மா கையை ஓங்கினாள். அதையும் அது திருப்பிச் சொன்னது.

கதவைத் திறந்துகொண்டு இருக்கையில் மீனாவின் செல்ஃபோனில் அழைப்பு வந்தது. ‘‘சார் கூப்பிடுதாங்க. இதைப் பிடி'' என்று கூண்டை அய்யம்மாவிடம் கை மாற்றுவதற்குள்  அழைப்பு நின்று உள்ளே ஃபோன் மணி கனத்து ஒலிக்கத் துவங்கியது.

‘‘ இதை எடுக்கலை இல்லையா. அதுல கூப்பிடுதாங்க'' என்று சற்று வேகமாகப் போய் ரிசீவரை எடுத்தாள். முறுக்கு விழுந்து கருப்பு வளையமிடும்  வயரை அனிச்சையாகச் சரிபண்ணிக் கொண்டிருந்தது குட்டிக்கு கை.

‘‘ஆமாங்க. வீட்டில இல்லை. நம்ம அய்யம்மா அம்மா இரண்டு நாளைக்கு முன்னால திடீர்னு தவறிப் போச்சு. நீங்க வந்த உடனே சொல்லிக்கிடலாம்னு இருந்தேன். அழகரு வந்து விவரம் சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதுக்கு அப்புறம் தான் தோணுச்சு.  அய்யம்மா  இன்னைக்கோ நாளைக்கோண்ணு நகண்டுக்கிட்டு இருக்கு. எல்லாம் முடிஞ்சு, சாம்பல் கரைச்சாச்சு. இனிமே அங்கே என்ன வேலைண்ணு நான் போயி வீட்டைப் பூட்டிப் போட்டுட்டுக் கூட்டியாந்துட்டேன்.  இருட்டிக் கொஞ்ச நேரத்தில புறப்பட்டோம். வந்துசேர இப்பவே பதினொண்ணு ஆகப் போகுது. அதான் அய்யம்மாவை இங்கே இருந்துட்டுக் காலையில போண்ணு சொல்லியிருக்கேன்''  இதை எல்லாம் சொல்லிமுடித்துவிட்டு, அந்தப் பக்கம் சொல்வதை எல்லாம் மீனா கேட்டுக் கொண்டு இருந்தாள்.

சிப்பியை, அது பெத்தாச்சி இறந்த இந்த மூன்று நாளும் சாப்பிடாததை, ஒரு கிளிக்கூண்டு கொண்டுவந்திருப்பதை, அது எதைச் சொன்னாலும் திருப்பிச் சொல்வதையும் மகிழினிக்கு அதை ரொம்பப் பிடிக்கும் என்றும் இரண்டு பேரும் புதன்கிழமை காலை வந்துவிடுவார்கள் அல்லவா என்றும் உரையாடிக்கொண்டு இருந்தாள். ‘‘அய்யா கூடப் பேசுதியா?'' என்று அய்யம்மாவிடம் கேட்டாள். இல்லை என்று அய்யம்மா சைகை செய்து மறுத்தாள். அவளுக்கு அழுகை வந்தது.

‘‘எனக்கு இனிமே யாரு இருக்கா?'' என்று நின்ற நிலையிலேயே சத்தமாக அழ ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட வாசலில் இருந்து இந்த அறைவரை எல்லா விளக்குகளும் எரியும் இந்த வெளிச்சத் தில் அய்யம்மா அந்தக் கிளிக்கூண்டும் கையுமாக அழுவதில் தரையிலிருந்து  பீறிட்டு ஒரு இழப்பின் மூர்க்கம் அதனுடைய தோகையை விரித்துப் பாய்ந்தது. அய்யம்மா முற்றிலும் பெத்தாச்சியை விட்டு அப்புறம் போன வேறொரு கிழிந்த முகத்துடன் ‘‘யப்பா. நீ எங்களை எல்லாம் விட்டுட்டு எங்கப்பா போனே?'' என்று அழுதாள்..

‘‘உட்காரு. அப்படியே உட்காரு அய்யம்மா'' மீனா அவளைப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் தோளைப் பிடித்து அமர்த்தினாள். அவள் அப்படியும் உட்காராது நின்றதால் கையிலிருந்த கூண்டை வாங்கியபடி அழகரை வரச் சொல்லி உரக்கக் கூப்பிட்டாள். வேகமாக உள்ளே வந்த அழகர், ‘‘பெத்துக்குட்டி, பெத்துக்குட்டி''என்று அவளைத் தன்மேல் தாங்கிக்கொண்டு, மீனா இருப்பதையும் பார்க்காமல் அவளுடைய தளர்ந்து கிடக்கும் பின் சிகையில் முகம் புதைத்து முத்தம் கொடுத்து, ‘‘ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை, அழக்கூடாது'' என்று திருப்பித் திருப்பி மெதுவாகச் சொன்னான்.

மீனாவுக்கு அழகர் அய்யம்மாளை அப்படி அந்தரங்கமாகப் பெத்துக்குட்டி என்று அழைத்ததும், சிகையில் முகம் வைத்துக்கொண்டதும் நெகிழ்வாக இருந்தது. எல்லாவற்றையும் திறந்துவிட்டது போல, இந்த உலகில் எதுவும் மூடப்படாதது போல உணர்ந்தாள். ஒரு கூசாத வெளிச்சத்தில் இரு கைகளையும் அகல விரித்து நிற்பது போல, குறைந்த பட்சம் வெளியே போய் வீட்டு வாசலிலாவது நிற்க வேண்டும் என்று தோன்றிற்று. கையிலிருந்த கூண்டைச் சுவரோரம் வைத்தாள்.

‘‘இருங்க வந்திருதேன்'' என்று இரண்டு பேரையும் அந்த அறையில் விட்டுவிட்டு வெளியே போனாள். மகிழினியுடன் பேச வேண்டும் போல இருந்தது. மகிழினி அப்பாவுடன் பேசவேண்டும் போல இருந்தது, முடிந்தால் ‘‘எங்களை எல்லாம் விட்டுட்டு எங்கேப்பா போனே?'' என்று அழும் அய்யம்மாளின் அப்பா சாஸ்தாக்குட்டியிடம் பேசவேண்டும் போல இருந்தது.

எப்படி சாஸ்தாவுக்கு பெத்தாச்சியை, அய்யம்மாளை, அந்தச் சிப்பியை, கிளிக்கூண்டை எல்லாம் விட்டு விட்டுக் கண்காணாமல் போக முடிந்தது? இது எல்லாம் ஒரு வித்தையா? இந்த வித்தையைக் காட்டுகிறதுக்குத்தான் அதற்கு முந்தி எல்லா வித்தையையும் சாஸ்தா குட்டி காட்டினது போலவா?

மீனா  குனிந்து கொண்டு நின்றாள். ஒரு பெரிய அடுக்குப் பாத்திரத்தில் அதை விடச் சிறிய அளவுப் பாத்திரத்தை வைப்பது போல, தனக்கு உள்ளேயே தன்னைச் செருகிவிட முயன்ற நிலையில் சற்றுத் தடுமாறி இரும்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்று சமன் செய்தாள்.

இரும்புக் கம்பியில் சங்கிலியோடு இருந்த சிப்பியின் தோற்றம் வேறு மாதிரி இருந்தது. காதுகள் தொய்ந்து மடங்கியிருந்தன. படுத்திருந்தது போல. ஆனால் படுத்திருக்கவில்லை. வாசலுக்கு வெளியே வெகுதூரம் பார்க்க உயர்த்தியது போல் தரையோடு முகம் விலகியிருந்தது.

மீனா மடிந்து உட்கார்ந்து அதன் காதுகளைத் தொட்டுப் பார்த்தாள். வெயிலில் வதங்கிய இலைகள் போல அவை தொய்ந்து கிடக்கவும் முகத்தைப் பார்த்தாள். அது வேறொரு பாகையில் தன்னை வைத்திருந்தது. மேல் பக்கமாகத் தெரிந்த மூடின வலது கண்ணின் ஓரத்தில்  ஒரு போதும் உருளவே முடியாத மிகச் சிறு துளி திராட்சை விதை போல உறைந்து நின்றது.

அவளுக்கு உடனடியாக அய்யம்மாளின் கையிலிருந்து வாங்கித் தரையில் வைத்த கூண்டு ஞாபகத்திற்கு வந்தது. யாரையும் கூப்பிடத் தோன்றவில்லை. அவசரமாக எழுந்து உள்ளே போனாள்.

வாசல் நிலைப் பக்கத்தில் மீனாவின் தலையை உரசினபடி  கிளி வெளியே பறந்து போயிற்று.

டிசம்பர், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com