2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது, கல்வெட்டு- வரலாற்று ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக தமிழ் விக்கி -தூரன் விருது என்கிற பெயரில் பல்துறை ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது அழகிய விருதுச் சிற்பத்துடன் இரண்டு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் கொண்டது.
'தமிழ் விக்கி- தூரன் விருது 2025 ' வழங்கும் விழாவில் விருது பெறுபவரின் தகுதிச் சான்றிதழை ஈரோடு கிருஷ்ணன் வாசித்தார். விருதாளருக்கு ஜா.ராஜகோபாலன் பொன்னாடை போர்த்தினார். ஜெயமோகன் சந்தன மாலை அணிவித்தார். விருதுச் சிற்பம் மற்றும் பரிசுகளை ஆந்திர அறிஞர் இருவரும் இணைந்து வழங்கினர்.விழாவில் வெ. வேதாசலம் சார்ந்த வாழ்க்கைப் பதிவுகள், நேர்காணல் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் வசந்த் ஷிண்டே - எ.சுப்பராயலு மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் உரைகளுக்குப் பிறகு ,தமிழ் விக்கி தூரன் விருதைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர் வெ.வேதாசலம் ஏற்புரையாற்றினார்.
" இங்கே மேடையில் வீற்றிருக்கிற பேராசிரியர் சுப்பராயலு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. அவருடன் நான் சேர்ந்து 50 ஆண்டுகளாகப் பயணம் செய்திருக்கிறேன.பல இரவுகள், பல பகல்கள் அவரோடு நான் பயணித்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் இருந்த காலத்திலும் சரி அல்லது மதுரை பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்திலும் சரி அல்லது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்திலும் சரி தற்போது கோயம்புத்தூரில் இருக்கும் போதும் சரி, எல்லா இடங்களுக்கும் அவரோடு நான் சென்று பழகி இருக்கிறேன். அவரும் என்னோடு வந்திருக்கிறார்.
அவர் இந்த கூட்டத்துக்கு வந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. என்னை உருவாக்கிய முக்கியமானவர்களில் அவரும் ஒருவர். அவர் எப்போதும் சொல்வார் ஆய்வாளன் உணர்ச்சிவசப்படக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும்.பரபரப்புக்காக பிளாஷ் நியூஸ் சொல்லி விடக்கூடாது என்று. பரபரப்புக்காக நான் எதையும் செய்வதில்லை அதனால் தான் நான் வெளியே தெரியவில்லை.
பேராசிரியர் ஷிண்டே அவர்கள் இங்கே வருவார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.அவரை இரண்டு முறை சந்தித்துள்ளேன். அவர் மூலமாக இந்த விருதைப் பெறுவது எனக்குப் பெருமை.
எனக்கு 75 வயதாகிறது இதில் 50 ஆண்டுகள் என்னுடைய வாழ்க்கையில் இந்த தொல்லியல் பயணம்தான்.இதில் நிறைய மேடுகள், நிறைய பள்ளங்கள், சந்தோசம் ,அவமானம் ,வருத்தம் தாண்டியே வந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் எவ்வளவு பயணங்கள் ஆய்வுகள் புத்தகங்கள் என்று செய்திருக்கிறோம் .ஒரு கட்டத்தில் நினைத்துப் பார்க்கும் போது ஒரு சோர்வு வந்தது. ஆய்வாளனுக்கு இது இயற்கை. ஆய்வாளனுக்கு அங்கீகாரம் என்பது முக்கியம். நான் எவ்வளவு நூல்கள் எழுதி இருந்தாலும் அது நான் தான் என்பது பலருக்கும் தெரியாது. நிறைய மாநாடுகள், கருத்தரங்கங்கள் சென்றிருக்கிறேன்.
‘இயக்கி வழிபாடு’ என்று ஒரு புத்தகம் 80களில் மீரா அவர்கள் வெளியிட்டார்கள். அது நிறைய பேரால் படிக்கப்பட்டது ஆனால் நான்தான் எழுதினேன் என்று தெரியாது. பிறகு கேட்பார்கள் நீங்களா அதை எழுதியது ?என்று.
ஒரு நாள் எங்கள் வீட்டில் கேட்டார்கள எவ்வளவோ இவ்வளவு குறிப்புகள் எடுத்து வச்சு ’இவ்ளோ எழுதி வச்சிருக்கீங்களே இதெல்லாம் எப்படி ? நம்ம ரொம்ப காலத்துக்கு பிறகு இதை என்ன செய்ய போறாங்க?’ என்று கேட்டார்கள்.
அந்த நிலையில் எனக்கே ஒரு வெறுப்பு வந்தது. நான் எழுதி கஷ்டப்பட்டுச் சேகரித்த அந்த ஆய்வுக் குறிப்புகள் ஏராளமாகச் சேர்ந்திருந்தது. அடிப்படையான சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவை எல்லாவற்றையும் திரட்டி ஒரு குட்டி லாரி நிறைய நிரப்பி அதை நான் பேப்பர் கடைக்கு எடைக்குதான் போட்டேன்.
இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் ஜெயமோகனிடமிருந்து இருந்து ஒரு போன் வந்தது.முதலில் நான் எடுக்கவில்லை. அவ்வளவு வெறுப்பான மனநிலையில் இருந்தேன். மீண்டும் வந்தபோது எடுத்தேன். தமிழ் விக்கி தூரன் விருது வழங்குகிறோம் என்று அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை.உடனே போனை ஈரோடு கிருஷ்ணன் கையில கொடுத்துட்டார். அவர் சார் உங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் என்றார். அத்துடன் அது முடிந்து விட்டது , ஆனால்அதற்குப் பிறகு திடீரென்று பனாமா கால்வாயில இருந்து ஒருத்தர் போன் செய்தார்.’சார் நான் பனாமா கால்வாயில இருந்து கடந்து போய்ட்டு இருக்கேன். இப்ப அட்லாண்டிக் ஓசன்க்குள்ள போக போறேன் கப்பல்ல’ என்றவர் வாழ்த்துக்கள் கூறினார்.
வெளிநாட்டு அழைப்புகள் வந்தால் எடுக்கக்கூடாது என்ற செய்தி என்னை வேறு பயமுறுத்தியது. அந்தப் பயத்தினால் சில அழைப்புகளை எடுக்கவில்லை. எனக்கு தென் கொரியாவில் இருந்து ஒரு அழைப்பு, எனக்கு பயம். எடுக்கவில்லை. பிறகுதான் அவர் மதுரைக்காரர் என்று தெரிந்தது. பிறகு வரிசையாக பல்வேறு நாடுகளில் இருந்து தொலைபேசிகள் வந்து கொண்டே இருந்தன.இப்படி உலகம் முழுக்க எனக்கு வந்து கொண்டே இருந்தது.பிறகு எனது இரண்டு பேட்டிகள் வந்தன.எல்லாமே மாறிவிட்டது. இருபது நாட்களுக்குள் என் முகத்தை உலகம் முழுக்க காட்டிவிட்டீர்கள்.
ஜெயமோகன் சார் தெளிவாக கூறியபடி தொல்லியல் ஆய்வாளர்களுக்கு எப்போதுமே மரியாதை கிடையாது. ஒரு காலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.ஆனால் அதற்குப் பிறகு கிடையாது .அதுவும் தொல்லியல் ஆய்வாளன் எல்லாம் சுத்தமாகவே மரியாதை கிடையாது.
இப்போது நிறைய கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் கண்டுபிடிப்புகளை விட கண்டுபிடித்தவரின் முகம் தான் முன்னே வருகிறது.காட்டுகிறார்கள்.நீங்கள் பார்க்கலாம் ஒரு சிலையைக் கண்டுபிடிப்பார்கள் அந்தச் சிலைக்கு முன்பாக அவர் உட்கார்ந்து கொண்டிருப்பார்.பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கும் சிலை முக்கியமா? அவர் முக்கியமா?சிலையை விட்டு விட்டு அவரைக் காட்டக்கூடிய அப்படிப்பட்ட காலம் இது. நாலே நாலு மணி இருக்கும். அதுவும் உடைந்து போய் இருக்கும். அதைத் நான்தான் கண்டுபிடித்தேன் என்று பெரிய விளம்பரம் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட நிலைமை இன்று உள்ளது.
எங்கள் காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்களுக்கு எப்போதுமே அந்த வட்டம் சிறிதுதான்.அந்த மாதிரியான எங்களுக்கு இந்த மாதிரி ஒரு விளம்பரம் உலகம் முழுக்க நம்ம முகத்தைக் காட்டக்கூடிய ஒரு வாய்ப்பாக விருது கிடைத்த போது இப்போது வரைக்கும் என்னால் நம்ப முடியவில்லை.
இங்கே மதுரையில் இருந்து வந்து இறங்கியபோது ஏராளமான பேர் வரவேற்க நிற்கிறார்கள். அந்த வரிசையில் ஜெயமோகன் சாரும் இருக்கிறார் எனக்கே வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. இதெல்லாம் நான் பார்த்ததே கிடையாது. சுப்பராயுலு சார் எப்போதும் கூறுவார் இந்த மாதிரி விஷயங்களுக்கு மயங்கக கூடாது என்று.எனக்கு விருது கொடுத்த போது நீங்கள் செய்த ஆரவாரம் நான் காணாத ஒன்று.நான் புத்தகம் எழுதிய காலத்தில் என் புத்தகங்கள் அதிகம் விற்பனையானது இந்த 20 நாட்களில் தான் . அவ்வளவு பேர் வாங்கினார்கள். வாங்கியதோடு நிற்காமல் படித்தார்கள். என் பல புத்தகங்கள் மறு பதிப்பு கண்டது இந்தக் காலத்தில் தான்.
நான் பல கூட்டங்களுக்குச் சென்று இருக்கிறேன் ; மாநாடுகள் கருத்தரங்குகள் சென்றிருக்கிறேன். ஆனால் வந்த கூட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை அச்சடித்தது மாதிரி கவனம் கலையாமல் இருந்தது இங்கே தான் பார்த்தேன்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கூட்டங்கள் தொடங்கும் போது தொடங்குவது கொஞ்சம் கொஞ்சமா கரைவார்கள்.மெல்ல மெல்ல கரைந்து போய் விடுவார்கள். அவர்களுக்குள்ளேயே பேசிக் கொள்வார்கள். ஒரு கட்டத்தில் நாமே பேச்சை முடித்துக் கொள்ள வேண்டி இருக்கும்.தன்னார்வத்தோடு சமூகப் பொறுப்போடு இங்கே இருந்த கூட்டம் தெரிந்தது. வியப்பாக இருக்கிறது . அதே நேரத்தில் பெருமையாகவும் இருக்கிறது .
நாம் எதற்காக புத்தகங்கள் எழுதுறோம்? நாம் நமக்காக புத்தகம் எழுதி வைத்துக்கொள்வது கிடையாது. சமூகத்திற்கு எதையாவது சொல்ல வேண்டும்,
சமூகத்தினுடைய வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அப்படி ஒரு பொறுப்புணர்வோடுதான் புத்தகத்தை எழுதுகிறோம்.
அப்படி எழுதும்போது அந்தப் புத்தகத்தை ஒரு வாசகன் படிக்கிறான். அதை . அப்படி வாங்கும் போது அந்த எழுத்தாளனுக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி கிடையாது. அந்த வகையில் இந்த 20 நாட்களுக்குள் என்னுடைய வாழ்க்கையில் திருப்பி போட்டமாதிரி முக்கியமான ஒரு அதிசயம்,ஒரு வியப்பு அப்படி என்றெல்லாம் நிறைய
சொல்லிச் சொல்லிக்கொண்டே போகலாம். அது நடந்தது. அதனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கக்கூடிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும்
குறிப்பாக இந்த தூரன் விருது எனக்குக் கொடுத்ததற்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நேரத்தில் என்னுடைய குடும்பத்தைப் பற்றி நான் கண்டிப்பாக, குறிப்பாக என்னுடைய மனைவி , என்னுடைய பிள்ளைகள் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வந்திருக்கவே முடியாது.இதை நான் என் மனைவியிடம் நேரடியாகக் கூறமாட்டேன்.
எனது எந்த பயணத்திலும் சரி, வெளிநாட்டுப் பயணங்களிலும் சரி என் மனைவி குறுக்கே நின்றதே கிடையாது.அதனால் அவர்கள் இல்லை என்றால் நான் இங்கே இல்லை என்பதை இந்தக் கூட்டத்தில சொல்ல ஆசைப்படுகின்றேன்.அவர்களுக்கு நன்றி. என்னுடைய பிள்ளைகளும் அப்படித்தான்.இன்றைக்கும் என்னுடைய பையனோ என்னுடைய பெண்ணோ என்னுடைய ஆய்வுக்கு எப்போதுமே குறுக்கே நின்றதில்லை. என்னுடைய வளர்ச்சி எல்லாவற்றிற்கும் அவர்கள் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்கள். குடும்பம் என்பது வேறு, ஆய்வு என்பது வேறு.நேரம் காலங்களில் தெரியாமல் பணியாற்றும் ஆய்வாளர்களுக்கு மனைவியாக இருப்பது மிகவும் சிரமம். இப்படி குடும்பம் அமைவது அரிது.
என் கல்லூரிக் காலம் வரை நான் வேறு மாதிரி இருந்தேன். நிறைய படித்தேன் .வானம்பாடி கவிஞர்கள் காலத்தில் நிறைய வாசித்தேன் . எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். சிறுகதை கூட எழுதினேன். நாவல்கள் எழுத விரும்பினேன்.காண்டேகரின் மராத்தி நாவல்கள் நிறைய வாசித்தேன். எனக்கு அவை பலவகையில் வழிகாட்டியாக இருந்தன.வாழ்க்கையில் சோர்வுற்ற போதெல்லாம் அந்த நாவல்கள் உத்வேகம் கொடுத்து எனக்கு உதவின.
ஆய்வுத்துறைக்கு வந்த பிறகு அதை எல்லாம் விட்டு விட்டேன். ஒரு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவன் இங்கு வரும்போது நிறைய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. தொல்லியல் நெறிகள் தெரிய வேண்டும், வரலாறு தெரிய வேண்டும் ,அதே நேரத்தில அகழ்வாராய்ச்சி போன்ற முக்கியமான விஷயங்கள் .முதலில் பெரிய சவாலாக இருந்தது. ஆய்வில் இறங்கிய போது புற உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அந்த அளவுக்கு ஆழ்ந்து போனேன்.அப்படி எல்லாவற்றையும் எதிர்கொண்டு மேலே வந்தேன்.இந்த 33 ஆண்டுகால ஆய்வு வாழ்க்கையில் அகழ்வாராய்ச்சி ஆய்வு செய்யக்கூடிய வாய்ப்பு,
கல்வெட்டு ஆய்வு, கோயில் ஆய்வு, சிற்பக்கலை ஆய்வு , நாணையவியல் ஆய்வு என்று நிறைய எனக்கு அனுபவங்கள் கிடைத்தன. ஒரு அரசு வேலையில் எப்போதுமே சுயமாகச் சிந்தித்து செயல்பட முடியாது .அதற்கான சிக்கல்களை எதிர் கொண்டேன்.
பணியாற்றும் தலைமை இடத்தை விட்டு எட்டு கிலோமீட்டர் வெளியே செல்வதற்கு அனுமதி வாங்க வேண்டும். ஆனாலும் நான் அனுமதி இல்லாமல் யாருக்கும் தெரியாமல் விடுமுறை நாட்களில் செமினார் சென்று இருக்கிறேன். தெரிந்ததும் அதற்காக நான் மெமோ வாங்கி இருக்கிறேன். இதற்காக இத்தனை ஆண்டுகள் நான் யாருக்கும் தெரியாதவனாக தலைமறைவு வாழ்க்கை போல் வாழ்ந்து இருக்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு நான் சேகரித்தவற்றை எல்லாம் வைத்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். என் ஓய்வு ஊதியப் பணத்தை முழுதும் செலவிட்டு இந்தப் புத்தகங்களை வெளியிட்டேன். 33 ஆண்டுகால பணியில் பல ஆண்டுகள் நான் தற்காலிகப் பணியாளர் போல் தான் இருந்தேன். எதற்கும் பயந்து கொண்டு இருக்க வேண்டும்.
பல நேரம் ராணுவத்தில் பணியாற்றுவது போல் இருக்கும். திடீரென்று மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு செல்லும்போது ஒரு போன் வரும் , அடுத்த நாள் எங்கே செல்ல வேண்டும் என்று. இப்படி நேரம் காலம் இல்லாமல் ஓட வேண்டும். லாரிகளிலெல்லாம் நான் இப்படி பயணம் செய்திருக்கிறேன். ரிசர்வேஷன் பண்ணாமல் லக்கேஜ் வைக்கிற இடத்தில் எல்லாம் அமர்ந்து ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். கிடைக்கிறதைச் சாப்பிட்டு கிடைக்கிற இடத்தில் பஸ் ஸ்டாண்டோ, திண்ணையோ மரத்தடியோ எங்கேயும் கவலைப்படாமல் படுத்து உறங்கி பயணம் செய்து பணியாற்றி இருக்கிறேன். இப்படி உருவான எனது அனுபவங்கள் குறித்து எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.
நான் என் ஓய்வுபெறும் ஆணையை வாங்கிய போது அந்த மாலையே எனக்கு சுதந்திரம் கிடைத்தது போல் உணர்ந்தேன். அதன் பிறகு எதை வேண்டுமானாலும் எழுதலாம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று சுதந்திரம் கிடைத்தது. அதன்படி உலகின் 24 நாடுகளுக்குப் பயணம் செய்தேன். நூல்கள் வெளியிட்டேன். பல விருதுகள் கொடுத்தார்கள். பிரசவம் வேதனைதான். குழந்தையைப் பெறுகிற வரைக்கும் அந்த தாய் துடிக்கிற துடிப்பு இருக்கும், குழந்தை பெற்ற பிறகு ஏற்படுகிற மகிழ்ச்சி இருக்கிறதல்லவா?அதுபோன்ற மகிழ்ச்சியைத்தான் இந்த விருதுகள் மூலம் நான் அடைகிறேன். என்னுடைய அனுபவங்கள் என்னோடு சென்று விடக்கூடாது என்று அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கிறேன். அதற்காக கடந்த 15 ஆண்டுகளில் 300 கூட்டங்கள் நடத்தி தொல்லியல் பயிற்சி அளித்து இருக்கிறேன்.இலங்கைக்கு எட்டு ஆண்டுகள் சென்று தொல்லியல் பயிற்சி அளித்திருக்கிறேன்.இப்படிப்பட்ட என் பயணம் தொடரும்.
விஷ்ணுபுரம் சார்ந்த வாசகர்களுக்கும் குறிப்பாக இந்த தமிழ் விக்கி தூரன் விருதை எனக்கு அளித்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைக் கூறி விடைபெறுகிறேன்"இவ்வாறு ஆய்வாளர் வெ. வேதாசலம் பேசினார்.