விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் 'தமிழ் விக்கி- தூரன் விருது ' வழங்கும் விழாவில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் ‘’வரலாற்று நூலுக்குள் போக போக போக ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கான பேசு பொருள்கள் பெருகிக் கொண்டே இருக்கும். அவனுக்கு எழுதுவதற்கான கோணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் . அவன் எழுதுவதற்கான தரவுகள் குவிந்து கொண்டே இருக்கும்’’ என்றார். அத்துடன் நமது இலக்கிய முன்னோடிகளுக்கு வரலாற்று ஆய்வுகள் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் 'தமிழ் விக்கி- தூரன் விருது ' வழங்கும் விழா 2025 ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் ஈரோடு, கவுண்டச்சிபாளையம், சென்னிமலை சாலையில் உள்ள ராஜ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது, கல்வெட்டு- வரலாற்று ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக தமிழ் விக்கி -தூரன் விருது என்கிற பெயரில் பல்துறை ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது அழகிய விருதுச் சிற்பத்துடன் இரண்டு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் கொண்டது.
விருது விழா இரண்டாவது நாள் 16.08.2025 மாலை தான் என்றாலும் முன்னதாகப் பல்வேறு அமர்வுகள் நடைபெறும். அவ்வகையில் முதல் நாள் மாலை 4 மணிக்கு ஆறுமுக சீதாராமன் நடத்திய நாணயவியல் குறித்த அரங்கு நிகழ்ந்தது.நாணயங்களைப் பற்றி அரிய தகவல்களை அவர் கூறியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். அவரது பேச்சில் அத்துறையிலான அவரது ஆழ்ந்த அனுபவம் வெளிப்பட்டது.
மாலை முனைவர் வெ. வேதாசலம் நடத்திய தொல்லியல் கல்வெட்டு ஆய்வுகள் குறித்த அரங்கு நிகழ்ந்தது. அவருடனான உரையாடலில் பல்வேறு ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆர்வமாகப் பதில் அளித்தார்.
அவரது நூல்களைப் படித்து விட்டு வந்து வாசகர்கள் கேள்விகள் கேட்டதால் அவர் வியந்து மகிழ்ந்தார். அவர் அதை எதிர்பார்க்காதது அவரது மகிழ்ச்சியில் தெரிந்தது.
அதன்பிறகு இரவு 7 மணிக்கு கலிலியோ அறிவியல் கழகத்தின் வானியல் ஆசிரியர் ஜி .கண்ணபிரான் வானியல் ஆய்வு சார்ந்து ஓர் அறிமுக நிகழ்வை நடத்தினார்.
அதற்குப் பிறகு இரவு 9 மணிக்கு தொலை நோக்கி வழியாக வானத்தைப் பார்க்கும் 'வானியல் பார்வை' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாசகர்களும் ஆவலோடு இருந்தார்கள்.ஆனால், மேகமூட்டமாக இருந்ததால் அதைத் திட்டமிட்டபடி நெடு நேரம் தொடர முடியவில்லை.
இரண்டாவது நாள் ஆகஸ்ட் 16 விருது வழங்கும் விழா அன்று காலை 9.30 மணிக்கு தொல்லியல் ஆய்வாளர், சிற்ப ஆர்வலர் வேலுதரன் பங்கேற்கும் அரங்கு நிகழ்ந்தது. அவரது சிற்றுரைக்குப் பின் கலந்துரையாடல் நிகழ்ந்தது. வாசகர்கள் தங்களுக்குள் தோன்றிய கேள்விகளை நேரடியாகக் கேட்டுப் பதில் பெற்றார்கள்.
காலை 10:30 மணி முதல் புனே டெக்கான் கல்லூரியின் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் வசந்த் ஷின்டேவின் அரங்கு நடைபெற்றது. வழமைபோல் ஆய்வாளரது அறிமுக உரை அதன் பின் கேள்வி பதில் என்று தொடர்ந்தது.
அடுத்தாக நண்பகல் அமர்வாக 12:00 மணி முதல் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் , தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் எ.சுப்பராயலு அனுபவ உரை நிகழ்த்தினார். அதன் பிறகு அவரிடம் பல்வேறு சந்தேகங்கள் -கேள்விகள் எழுப்பி பார்வையாளர்கள் துலக்கம் பெற்றனர். தங்கள் துறையில் ஆழங்கால் பட்ட அந்தப்பேரறிஞர்களுடனான உரையாடல் என்பது வந்திருந்தவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தன.இவை தேடினாலும் கிடைக்காத அரிய வாய்ப்புகள்.
மதிய உணவுக்குப் பிறகு மாலை இரண்டரை மணி முதல் நாதஸ்வர தவில் இசை அரங்கு.
தமிழிசை முன்னோடிகளில் ஒருவரான தூரன் நினைவாக நிகழும் இந்த இசையரங்கத்தில் தூரனின் பாடல்களே வாசிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிறப்பு நாதஸ்வரம் வாத்திய விசாரதா, சங்கீத சிரோன்மணி மயிலை எம். கார்த்திகேயன் , கலை வளர்மணி கோளேரி ஜி. வினோத்குமார் ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்க, இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சார்பாக உலக சாதனையாளர் விருது பெற்ற அடையாறு ஜி. சிலம்பரசன், வாத்திய விசாரதா கும்மிடிப்பூண்டி ஆர். ஜீவா ஆகியோர் தவில் வாசிக்க இசை நிகழ்ச்சி அரங்கேறியது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு போனசாக இன்னொரு இசை அனுபவம் கிடைத்தது.
பீத்தோவனின் புகழ் பெற்ற 'ஃபர் எலிஸ்' (Fur Elise) என்கிற இசைத் துணுக்கை இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கர்நாடக இசையை ஒட்டி 'பீத்தோவனப்பிரியா' என்று ஒரு கீர்த்தனையாக இசையமைத்திருந்தார். அதனை மயிலை எம். கார்த்திகேயன் முதலில் பாடி பின்பு நாதஸ்வரத்தில் வாசித்துக் காட்டினார்.
அதற்கு முன்பாக பீத்தோவனின் அந்த அசல் இசைத் துணுக்கையும் வாசித்தார்கள். இது ஒரு புதுமையான இசை அனுபவமாக இருந்தது. இந்த அமர்வை ஜெயமோகனின் அணுக்க வட்டத்தில் ஒருவராக இருப்பவரும் இசைக் கலைஞருமான யோகேஸ்வரன் ராமநாதன் உரிய கலைஞர்களை ஏற்பாடு செய்ததுடன் சிறப்பாகத் தொகுத்தும் வழங்கினார்.
அதற்குப் பிறகு 'தமிழ் விக்கி- தூரன் விருது 2025 ' வழங்கும் விழா தொடங்கியது. விருது பெறுபவரின் தகுதிச் சான்றிதழை ஈரோடு கிருஷ்ணன் வாசித்தார். விருதாளருக்கு ஜா.ராஜகோபாலன் பொன்னாடை போர்த்தினார். ஜெயமோகன் சந்தன மாலை அணிவித்தார். விருதுச் சிற்பத்தை ஆந்திர நாட்டு அறிஞர் வசந்த் ஷிண்டே வழங்கினார். காசோலையை மூத்த ஆய்வாளர் எ.சுப்பராயலு வழங்கினார். விழாவில் வெ. வேதாசலம் சார்ந்த வாழ்க்கைப் பதிவுகள், நேர்காணல் அடங்கிய தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, "ஒரு நிறைவான நாள் நிறைவாக முடிய போகும் தருணம் இது . நண்பர்களே தமிழ் விக்கி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகப்போகின்றன.2022-ல் இந்த இணைய கலைக்களஞ்சியத்தைத் தொடங்கினோம்.இந்த இணைய கலைக்களஞ்சியம் தமிழின் மிக வெற்றிகரமான ஓர் இயக்கமாக இன்றைக்கு மாறி இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவே தமிழின் மிக வெற்றிகரமான இணையப்பக்கம் -இணையதளம் என்பது 'தமிழ் விக்கி'தான்.
ஒவ்வொரு நொடியும் பிழை களையப்படக்கூடிய,மிகச் சிறப்பாக பேணப்படக்கூடிய ஒரு இணையப்பக்கம் இது. இதில் ஏறத்தாழ 50 பேர் தொடர்ச்சியாகப் பங்களிப்பாற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட பணமே இல்லாமல் இலவசமாகத்தான் இந்த மாபெரும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நானே சொல்லி நானே விரும்பக்கூடிய ஒரு மேற்கொள் உண்டு 'இலவசமாக நடத்தப்படக்கூடிய உழைப்புதான் இந்தியாவைப் பொறுத்த அளவில் நேர்த்தியாக இருக்கும்'. பணம் கொடுத்து செய்யப்படும் எந்த வேலையும் சரியாக நடக்காது.
எங்களுடைய வெற்றிக்குக் காரணம் இதில் மொத்தமாய் அனைவருமே இலவச சேவை ஆற்றுகிறார்கள் என்பதுதான். ஆகவே தமிழ் விக்கியுடன்தொடர்புள்ள அத்தனை நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ ஒரு வகையில் தமிழ் விக்கியின் அந்த தொடக்க விசையாக நான் அமைந்தேன் என்பதனால் அதனுடைய புகழ் என்னை வந்து சேர்வதுண்டு . ஒவ்வொரு முறையும் அப்படி அல்ல- நான் வெறும் ஒரு நிமித்தம் மட்டுமே; நானும் ஒரு பங்களிப்பாளன் மட்டுமே, இது நண்பர்கள் கூடி முன்னெடுக்கக்கூடிய ஒரு முயற்சி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது ஒரு வழக்கமாக வைத்திருக்கிறேன் .
சரியான தகவல்கள், பரிசோதிக்கப்பட்ட தரவுகளுடன் ஆசிரியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தரவுகளுடன் கூடிய இணைய கலைக்களஞ்சியம் ஒன்று வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.குறிப்பாக கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்து மட்டுமாவது ஒன்று வேண்டும் என்று .இதை என்னுடைய இணையதளத்தில் அறிவித்த இரண்டு மணி நேரத்திற்குள் இந்தத் தளம் பதிவு செய்யப்பட்டு முழுமையாக அதனுடைய அமைப்புடன் எனக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
என்னுடைய அமெரிக்க கனடிய நண்பர் ஒருவர் இதை செய்தார். பிறகு ஏராளமான நண்பர்கள் மூன்று நாட்களுக்குள் உள்ளே வந்து விட்டார்கள்.இன்றைக்கு வரைக்கும் செயல்படக்கூடிய அத்தனை பேருமே ஒரு வாரத்திற்குள் இதற்குள் வந்திருந்தார்கள்.
2022-ல் வாஷிங்டனில் இதனுடைய தொடக்க விழா நிகழ்ந்தது. இதன் மேல் பலவிதமான குற்றச்சாட்டுகள், அவதூறுகள், வசைகள், ஏளனங்கள் எல்லாமும் வந்தன. எந்த பெருஞசெயலுக்கும் அந்த மாதிரி தடைகள் வரும். அந்தத் தடை என்பது இயற்கையுடைய விதிகளில் ஒன்று. அந்தத் தடைகளை தாண்டி ஒன்று வளரும் என்றால் மட்டும்தான் உண்மையில் வளர வேண்டியது .இல்லாவிட்டால் அழிய வேண்டியதுதான். இந்தத் தடையை உருவாக்கிய அத்தனை பேருக்கும் இன்றைக்கு நன்றியுடன் இருக்கிறோம். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு ஆற்றலுடன் நாங்கள் வந்திருக்க மாட்டோம் . அவர்களும் ஒரு இயற்கை சக்திதான்.
தமிழ் விக்கி மே மாதம் தொடங்கி இங்கே ஆகஸ்ட்டில் வந்து உடனடியாக அந்த மேடையிலேயே தமிழ் விக்கி சார்பில் ஒரு விருது கொடுக்க போகிறோம். தமிழுக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித்தூரன் பெயரில் அதை அளிப்போம் என்று அறிவித்தோம். ஏன் பெரியசாமித்தூரன் பெயர் என்றால், இந்த மேடையில் ஒவ்வொரு ஆண்டும் அவரை நினைவு கூர்கிறோம். ஏனென்றால், ஒரு மனிதர் தன்னுடைய வாழ்நாள் முழுக்க பேருழைப்பைச் செலுத்தி முதல் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவது என்பது- அவருக்கு துணைக்கு ஆள் இருந்தது, அரசு உதவி இருந்தது என்பது உண்மை .ஆனால் அவருடைய 25 ஆண்டு கால உழைப்பு அதில் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு மாபெரும் உழைப்பைச் செய்த ஒரு மாபெரும் முன்னோடி எந்த அடையாளமும் இல்லாமல் அப்படியே மறைந்து போய்விடக்கூடாது.
இது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளக்கூடிய ஒரு உறுதிப்பாடு. இங்கே மு. இளங்கோவன் இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தினுடைய முக்கியமான தமிழ் அறிஞர்களை தேடித் தேடி ஆவணப்படுத்துகிறார்.நேற்றைய பெரியசாமித்தூரன் மறைந்து போய்விடுவார் என்றால் இன்றைய மு.இளங்கோவனும் நாளைக்கு மறைந்து போய்விடுவார். ஆகவே பெரியசாமித்தூரனை நினைவு கூர்வது, இளங்கோவவன் நாளைக்கு இருப்பதற்கான உத்திரவாதம் கொடுத்தாக வேண்டும் இல்லையா ?ஆகவே இது நமக்கு நாமே சொல்லிக்கொள்வது அறிவியக்கத்தில் ஈடுபடக்கூடியவன் ஒருவன்,
சாதனையாளன் ஒருபோதும் மறைந்துவிடக்கூடாது.அவனைப் போற்றுவது நமக்காகத்தான்.
நமக்கு நாமே ஒரு உறுதிப்பாடைக் கொடுத்துக் கொள்கிறோம். ஆகவே அந்த கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதையை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்வதற்காக இந்த விருதை உருவாக்கினோம்.பெரும்பாலும் அவர் ஈரோட்டில் வாழ்ந்திருக்கிறார், சென்னிமலையில் வாழ்ந்திருக்கிறார் ஆகவே ஈரோட்டில் இந்த விருது கொடுக்கப்படுகிறது. நான்காவது விருதாக திரு வேதாசலம் அவர்கள் கல்வெட்டு, வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர் இந்த விருதைப் பெறுகிறார். இந்த விருதுகளை நாங்கள் அளிப்பதில்லை,நாங்கள் இதைச் சமர்ப்பிக்கிறோம்.
ஆகவே, பணிந்து வணங்கி இந்த விருதை அவருக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே!
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இன்றைக்கு ஏறத்தாழ உலக அளவிலே பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு விருதை மட்டும் கற்பனை செய்தோம் இன்றைக்கு நான்கு விருதுகள் அளிக்கக்கூடிய இடத்துக்கு வந்திருக்கிறோம். மூன்று விருதுகளை அளிக்கிறோம். இன்னொரு விருது எங்களுடைய திட்டத்தில் இருக்கிறது. அதனை விரைவிலேயே அறிவிப்போம்.
இந்த நாளில் இப்போது தமிழ்விக்கி தூரன் விருது விழா இங்க நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கா விஷ்ணுபுரம் இலக்கியவட்ட அமைப்பின் சார்பில் கம்பன் பாடலுக்கான ஒரு மகத்தான இசைவிழா அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்னால் ஐரோப்பாவில் விஷ்ணு புரம் இலக்கிய வட்டம் சார்பில் ஒரு தத்துவ முகாம் ஒன்று நடத்த வேண்டும். இன்னும் ஒரு மாதத்திற்குள் லண்டனில் ஒன்று நடக்கப்போகிறது.அது முடிந்து வந்தவுடனே கோவையில் நடக்கும். அது முடிந்து வந்த உடனே மறுபடியும் அமெரிக்காவில் இன்னொரு பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். போன தமிழ் விக்கி விழாவில் அதை அறிவித்தோம். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன . விசா சம்பந்தமான அமெரிக்க அரசின் திடீர் மாற்றங்கள் தொடர் மாற்றங்களால் நாங்கள் அதை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய ஒரு சிக்கலில் இருக்கிறோம். ஆனால் அந்த விழா ஒரு சர்வதேச இலக்கிய விழா என்று அமெரிக்காவில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் நடத்தப்பட உள்ளது.
நண்பர்களே பொதுவான இலக்கிய வாசகர்கள் ஏன் தமிழ் வரலாற்றை, இந்தியவரலாற்றை, உலக வரலாற்றைப் படிக்க வேண்டும்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.
நாமெல்லாம் நவீன எழுத்தாளர்கள், நவீன வாசகர்கள் . இந்த நவீன என்கிற வட்டத்துக்குள் வரக்கூடிய அறிவியக்கம் வரலாறு சார்ந்த ஒரு உதாசீனத்தை தமிழகத்திலே காட்டி வருகிறது . அதற்குக்காரணம் முன்னோடிகள்தான். ஏன் என்றால் எனக்குத் தெரிந்து புதுமைப்பித்தன் வரலாற்று ஆய்வைப் பற்றி காமெடியாக, கேலியாக மட்டும்தான் பேசிஇருக்கிறார் . அதிலிருந்து நம்முடைய முன்னோடிகள் அத்தனை பேருக்குமே சமகால வரலாற்று ஆய்வு பற்றி அறியாமையோ சின்ன பரிகாசமோதான் இருந்திருக்கிறது. அது ஏதோ வகையில புதையுண்ட மண்ணைக் கிண்டிக் கொண்டிருக்கும் ஒரு தேவையற்ற வேலை என்ற எண்ணம் நம்முடைய இலக்கிய முன்னோடிகளுக்கு இருந்தது . எனக்குத் தனிப்பட்ட முறையிலே தெரிந்த வகையிலே சுந்தரராமசாமியோ அசோக மித்ரனோ அதுபோன்ற இலக்கிய முன்னோடி யாருக்குமே வரலாற்று ஆய்வில் ஆர்வம் கிடையாது. தங்கள் அளவில் ஒரு வரலாற்று நூலை எடுத்து படிக்கக் கூடியவர்கள் அல்ல . சிலருடைய பெயர்கள் தனிப்பட்ட முறையில தெரிந்திருக்கும். சுந்தர ராமசாமிக்கு நாகர்கோவிலில் வாழ்ந்ததால் கே.கே. பிள்ளை பெயர் தெரிந்திருக்கலாம்.கே என் சிவராஜ பிள்ளை பெயர் தெரிந்திருக்கலாம். இலக்கிய வரலாற்று ஆசிரியர்களை ஓரளவு தெரிந்திருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து கவனித்துப் படிக்கக்கூடியவர் அல்ல. அது அவருக்குத் தேவையில்லை என்ற எண்ணம் இருந்தது. இந்த எண்ணம் எப்படியோ முன்னோடிகளால் நம் அனைவருக்குமே கடத்தப்பட்டிருக்கிறது.
ஒரு தமிழ் சிற்றிதழை எடுத்துக்கொண்டால் அந்த சிற்றிதழில் திரைப்படம் பற்றி ஒரு கட்டுரை இருக்கலாம். பண்பாடு சார்ந்த அந்த பொதுவான ஒரு கட்டுரை இருக்க வாய்ப்பு இருக்கிறது. மொழியியல் பற்றி ஒரு கட்டுரை இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு வரலாற்று ஆய்வு சார்ந்த ஒரு கட்டுரை இருக்க வாய்ப்பே கிடையாது.
சமகாலத்திலே வந்த ஒரு வரலாற்று நூலை பற்றி ஒரு மதிப்புரை இருக்க வாய்ப்பு கூட கிடையாது. நீங்கள் மணிக்கொடியிலிருந்து காலச்சுவடிலிருந்து உயிர்மை வரைக்கும் இதழ்களை நினைவில் ஓட்டிப் பாருங்கள். எந்த இதழிலும் அந்த மாதிரி விவாதம் இல்லை. விதிவிலக்காகச் சில இதழ் இருந்தன.
'படிகள்' இதழில் கே. கே. பிள்ளையுடைய வலங்கை, இலங்கை பூசல் பற்றின கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது .இப்படி உதிரியாகச் சில நினைவுகள்தான் எனக்கு வருகின்றன. நமக்கு வரலாறு சார்ந்த ஒரு ஆர்வமின்மையை நவீன சூழல் உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் தத்துவார்த்தமாக நவீன இலக்கியம் என்பது தனி மனிதன் சார்ந்தது ஒரு இன்டிவிஜுவலைத்தான் நாம் முன்வைக்கிறோம். அந்தத் தனி மனிதனுடைய அகம், அவனுடைய உணர்ச்சிகள் ,சிந்தனைகள், அவனுடைய பதற்றங்கள், ஆன்மீகமான தேடல்கள், நிலையின்மைகள், இப்படி எவ்வளவோ விஷயங்கள் காலத்தின் முன் ஒரு தனி மனிதனைக் கொண்டு நிறுத்துவதுதான் இலக்கியமாக, அந்த தனி மனிதன் வரலாற்றால் கட்டமைக்கப்பட்டவன்.அந்த தனி மனிதன் அவனை சுற்றிக்கூட பண்பாட்டால் கட்டமைக்கப்பட்டவன். ஆனால் அந்த எண்ணம் நவீன எழுத்தாளர்களுக்குப் பெரும்பாலும் இல்லை. அவர்கள் திரும்பத் திரும்ப தனிமனிதனுடைய அகத்துக்குள் சென்று கொண்டே இருக்கிறார்கள்.
வரலாற்று ரீதியான பார்வை என்பது கிட்டத்தட்ட கிடையாது. இந்தக் காரணத்தினால்தான் தமிழில் பெரிய நாவல்களும் எழுதப்படவில்லை.
91-ல் ஏன் தமிழில் பெரிய நாவல்கள் இல்லை? என்ற ஒரு விவாதத்தை நான் உருவாக்கினேன் . அதனைத் தொடர்ந்து விவாதம் நடந்திருக்கிறது. அதில் நான் சொன்ன காரணங்களில் முக்கியமான ஒன்று பெரிய காலத்தை உள்ளே கொண்டு வரக்கூடிய பிரக்ஞை இல்லை. அதனாலதான் பெரிய நாவல் வரவில்லை. சின்ன காலம் ,சின்ன மனிதன் சின்ன உலகம், அது சிறுகதைக்குத் தான் பொருந்தும்.ஒரு தருணம் தான் சிறுகதை.
பெரிய காலத்தை உள்ளே கொண்டு வரக்கூடிய கனவு பெரிய ஒரு சித்திரத்தை உருவாக்கக்கூடிய கனவு தமிழ் நவீன இலக்கியத்துக்கு இல்லை.ஆகவேதான் பெரிய நாவலைச் சார்ந்த கனவு நமக்கு இல்லை. உருவாகவும் இல்லை.பெரிய பக்கங்கள் எழுதப்பட்டிருக்கிறது, அந்த தனி மனிதனுடைய வாழ்க்கையே ஆயிரம் பக்கத்துக்கு எல்லாம் எழுதி இருக்கிறார்கள். ஆனால் 91ல் அந்த விவாதத்திற்கு பிறகு உண்மையிலேயே ஒரு வரலாற்று ஆர்வம் தமிழ் நாவலாசிரியர்களுக்கு வந்தது .அதன் பிறகு எழுதின பெரும்பாலான நாவலாசிரியர்கள் ஒரு பெரிய காலத்தை உள்ளே கொண்டுவரவும் பெரிய சித்திரங்களை உருவாக்கவும் முயன்றிருக்கிறார்கள்.
பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஜோ -டி க்ரூஸ் அல்லது சோ. தர்மன் அல்லது சு. வெங்கடேசனுடைய காவல் கோட்டம்.
இம்மாதிரி நிறைய படைப்புகளில் அந்தப் பெரிய சித்திரத்துக்கான ஒரு கனவும் முயற்சியும் இருந்தது. அதற்குப் பிறகு நாவலுடைய முகம் மாறியது. அதைத்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
என்ன காரணத்தினால் ஒரு வாசகன் - ஒரு இலக்கிய வாசகன் வரலாற்று ஆய்வைக் கவனிக்க வேண்டும்?முதல் காரணம் நாம் எதைச் சிந்திக்கிறோம் எப்படி எப்படிச் சிந்திக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காக.
புதிதாகச் சிந்திக்கிறதுக்கு இல்லை, உண்மையில் நான் ஏன் இப்படி சிந்திக்கிறேன் என்னுடைய சிந்தனை ஏன் இப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, நீங்கள் இன்னொரு வரலாற்று ஆசிரியரைப் படிக்க வேண்டியிருக்கிறது.
உங்கள் வாழ்க்கைச் சூழல் இருக்கக்கூடிய உங்களுடைய காலகட்டத்தை எழுதக்கூடிய ஒரு வரலாற்று ஆசிரியர் கூட உங்களுக்கு தேவைப்படலாம்.சமகால வரலாற்று ஆசிரியர், நீங்கள் ஒரு ஈரோடுக்காரர் என்றால் ஈரோடுடைய 2000 ஆண்டு என்ற வரலாறு உங்களுக்குத் தெரியும் என்றால் நீங்கள் இங்கே பிறந்த ஒருத்தர் ஏன் இப்படி யோசிக்கிறேன்? நீங்களே கண்டுபிடிக்க முடியும். அதுதான் முக்கியமானது என நான் நினைக்கிறேன். இது என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.
நான் ஏன் குறிப்பிட்ட விதமாக யோசிக்கிறேன்? நண்பர்களே,பத்மநாபபுரத்தில் ஒரு ஏரி இருக்கிறது. பட்டாணி ஏரி என்பது பெயர். அந்த ஏரியில் தண்ணீர் நல்லபடியாக வந்தது என்றால் அடியில் ஏழு அன்னையருடைய சிலை இருக்கும். அது அங்கே ஒரு சமணப் பள்ளி முன்னாடி இருந்திருக்கிறது.
அப்போது செதுக்கப்பட்ட ஒரு சிலை. ஒரு அரைச்சாண் அளவுதான் இருக்கும். ஆனா ஏழுஅன்னையர் இருக்காங்க. அந்த சிலையை அடிக்கடி நான் பார்க்கிறது உண்டு .அந்த சிலையைப் பற்றி ஒரு முறை ஒரு நண்பரிடம் கேட்டால் அது சமணர் வழிபட்டது என்றார்.அப்ப ஏழு அன்னையர் வழிபாடு சமணர்களுக்கு உண்டா என்று கேட்டால் அ.கா. பெருமாள் சொன்னார், ஏழு அன்னையர் வழிபாடு சமணர்களுக்கு உண்டு .அதற்கு ஒரு நாலைந்து நாள் பிறகு என்னுடைய நண்பர் மறைந்த ஹெச்.ஜி. ரசூலை சாலையில் பார்க்கறேன்.
அப்ப அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் சொன்னார், அந்த ஊர்ல இஸ்லாமியர்ல ஏழு ஹூரிகள் வழிபாடு என இதே மாதிரி இன்னொரு வழிபாடு என்று. இதனுடைய இஸ்லாமிய வெர்ஷன். அது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அப்புறம் தொடர்ந்து என்னுடைய ஊர் முழுக்க இருக்கக்கூடிய பெண் தெய்வங்கள் பற்றி ஒவ்வொன்றாக நான் யோசிக்கும் போது எல்லாமே இந்த ஏழு அன்னையரில் வந்து சேர்வது மாதிரி எனக்குத் தோன்றியது.
பத்மநாபபுரம் அரண்மனைக்குள் நீங்கள் வந்து பார்த்தால் அங்கே ஏழு அன்னையர் சிலை இருக்கும்.வெவ்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகள் அவை.உள்ளே கொண்டு வைத்திருக்கிறார்கள்.வெவ்வேறு தனிக் கோவிலில் இருந்த சிற்பங்கள் அவை.
குமரி மாவட்டம் முழுக்க இந்த அன்னையரை ஏழாம் எட்டாம் நூற்றாண்டு வரைக்கும் வழிபட்டிருக்கிறார்கள்.அதற்குப் பிறகு அவர்கள் சமணத்திற்குள் போகிறார்கள். வெளியே வந்திருக்கிறார்கள்.
என்னுடைய படைப்புகளில் ஏன் தொடர்ந்து ஒரு அன்னை இருந்துகிட்டே இருக்கிறார்கள்?நான் ஏன் திரும்பப் திரும்ப இந்த அன்னையரைப் பற்றி எழுதுகிறேன் ?தாய்த் தெய்வங்களைப் பற்றி எழுதுகிறேன்? இன்னும் நான் எழுதக்கூடிய பெண் கதாபாத்திரங்களிலும் அந்தத் தாய் தெய்வத்துடைய பாதிப்பு இருக்கும்.
நான் வரலாற்று நாவல்கள் மட்டுமல்ல சாதாரண கதைகளில் இருக்கக்கூடிய சாதாரண பெண் சித்திரத்தில ஏதோ வகையில இந்த தெய்வங்களுடைய ஒரு தாக்கம் இருக்கும்.
நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்? இதைப் பார்ப்பதற்கு நான் என் மண்ணுடைய வரலாற்று ஆசிரியரைப் படிக்க வேண்டியிருக்கிறது. கே.கே .பிள்ளையிலிருந்து அ.கா. பெருமாள் வரைக்கும். அவர்கள்தான் என்னை எழுத வைக்கிறார்கள். இது ஒரு முக்கியமான அடையாளம் என நான் நினைக்கிறேன்.
ஏன் குமரி மாவட்டத்து எழுத்தாளர்களில் ஒரு படி கூடுதலாக வரலாற்று பிரக்ஞை இருக்கிறது? ஏனென்றால் எங்கள் ஊரில் நாங்கள் ஒவ்வொரு நாளும் வரலாற்று ஆசிரியர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 2000 ஐ ஒட்டி தினசரி என்னுடைய வீட்டில ஏ.கே.பெருமாள், குமரி மைந்தன் மாதிரியான வரலாற்று ஆய்வாளர்கள் வருவார்கள். என்னுடைய வீட்டிலிருந்து நடந்து போகக்கூடிய தூரத்திலதான் திரிவிக்கிரமன் தம்பி, முக்கியமான வரலாற்று ஆசிரியர் வாழ்ந்தார். பெரும்பாலும் அவரைச் சந்திப்போம் . தொடர்ந்து சுந்தரராமசாமி வீட்டில் அது மாதிரி வரலாற்று ஆசிரியர்கள் வருவதுண்டு . அதற்கு முந்தைய காலகட்டத்திலேயே கவிமணி தேசிக விநாயகமே ஒரு வரலாற்று ஆசிரியர்தான்.
அவரும் அவருடைய காலகட்டத்தில் இருந்த பிற வரலாற்று ஆசிரியர்களுடன் தொடர்ந்து உரையாடினார்கள்.
அப்போது இலக்கியமும் வரலாற்றும் ஆய்வும் கிட்டத்தட்ட பக்கம் பக்கம் இருக்கக்கூடிய ஒரு சூழல் குமரி மாவட்டத்தில் இருக்கிறது.
ஆகவே ஒட்டுமொத்தமான குமரி மாவட்டத்தைப் பற்றி ஒரு பெருஞ்சித்திரத்தை உருவாக்க குமரி மாவட்ட எழுத்தாளர்களால் முடியும். பிறபகுதிகளில் இலக்கியம் அந்த அளவுக்குத் தழைக்காததற்கு ஒரு காரணம் அவர்களுக்கு அவர்களுடைய நிலம் பற்றிய வரலாற்று புரிதல் ரொம்ப குறைவு என்பதுதான் காரணம். உதாரணமாக திருநெல்வேலி எழுத்தை எடுத்துப் பார்த்தால் திரும்பப் திரும்ப சமகாலம் அவர்கள் அந்த எழுத்தாளருடைய வாழ்க்கை சார்ந்த குறிப்புகள் அன்றாடக் குறிப்புகள் மட்டும்தான்.
யோசித்துப் பாருங்கள் திருநெல்வேலி எழுத்தாளருடைய யாருடைய கதையிலயாவது அவர்கள் ஊரில் இருக்கக்கூடிய அவ்வளவு பெரிய கோயில் இடம் பெற்றிருக்கிறதா?
அந்த கோவிலுடைய பிரம்மாண்டம், அதனுடைய வரலாறு அதனுடைய வெவ்வேறு காலகட்டங்கள் இடம் பெற்றிருக்கிறதா? அதனாலதான், திருநெல்வேலியில் இருந்து ஏன் ஒரு பெரிய நாவல் வரவில்லை என்கிற கேள்வி அங்கேதான் இருக்கிறது.
நான் இன்னும் பெரிய பெரிய நாவல் எழுத
முடியும். ஏன் என்றால் என்னுடைய மாவட்டத்து வரலாற்றில தான் என்னுடைய முதன்மையான
ஆர்வம் இருக்கிறது. உங்களுக்குத் தெரியும் 'அசோகவனம்' என்கிற பெயரில் திருவிதாங்கூர் வரலாற்றுப் பின்னணியில் ஒரு பெரிய நாவல் எழுதி கிட்டத்தட்ட முடிக்காமல் வைத்திருக்கிறேன். முடிக்க கூடும்.
நான் ஏன் சிந்திக்கிறேன்? ஏன் இந்தக் கோணத்தில் இந்த விஷயத்தைப் பார்க்கிறேன் என்பதை நானே ஒரு கண்ணாடி பார்ப்பதற்கு எனக்கு வரலாற்றாய்வு நூல்கள் மிகப்பெரிய உதவி செய்கின்றன.
இன்னொன்று நாம எடுத்துட்டு பேசக்கூடிய பிரச்சினைகள் இருக்கிறது இல்லையா? நாம் எந்த விஷயத்தை ஒரு பேசு பொருளாகக் கொள்கிறோம் என்பதற்கும் இந்த வரலாற்றில ஒரு தொடர்ச்சி இருக்கிறது.
இப்போது நான் இந்த ஏழு அன்னையரைப் பற்றிச் சொன்னேன் . வேதாசலம் அவர்களுடைய ஏழு அன்னையர் பற்றிய நூல் இங்கே இருக்கிறது. என்னுடைய வீட்டில அந்த நூல் இருக்கிறது. அந்த நூல் எனக்குத் தெரிந்த வரலாற்றை இன்னொரு பெரிய கோணத்தில் சொல்கிறது.
நான் நெடுங்காலமாக இந்த ஏழு அன்னையர் வழிபாடு குமரி மாவட்டத்திற்கு வெளியே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.அந்த புத்தகம் தமிழ்நாடு முழுக்க தழுவிய ஒரு பெரும் சித்திரத்தைக் கொடுக்கிறது. இந்திய அளவில நம் பயணங்களில் தொடர்ந்து இந்த சப்த கன்னியர் வழிபாடு, சப்த மாதாக்கள் இரண்டின் வித்தியாசங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறோம்.
அண்மையில் நான் எழுதிய 'காவியம்' நாவலில் கூட , வராகி பெரிய பாத்திரமாக வருகிறது.இது எல்லாமே ஒரு வரலாற்றுச் சித்திரத்தை நான் அடைவதிலிருந்து எனக்குக் கிடைக்கிறது
வேதாசலத்தின் ஏழு அன்னையர் பற்றிய நூலை தமிழகத்தின் ஒவ்வொரு இலக்கிய வாசகருக்கும் பரிந்துரைப்பேன்.
அவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள மட்டும் தான் நம்மால் முடியும்.அதை மட்டும் தான் நாம் செய்ய வேண்டும்.அதிலிருந்து நாம் செய்யக்கூடிய பயணம் ஒன்று இருக்கிறது.அது மிகவும் முக்கியம். அதற்கு வரலாற்று நூல் எவ்வாறு உதவுகிறது என்று சொல்கிறேன்.
நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிற காலத்தில் தான் 'எண்பெருங் குன்றம்' புத்தகத்தைப் படித்தேன். அந்த புத்தகத்தை நான் அன்னம் பதிப்பகத்தில் வாங்கியதாக நினைவு . ரொம்ப வேற மாதிரி இருந்த சின்ன புத்தகம். அந்தப் புத்தகத்தின் தலைப்பு எனக்கு நினைவு இருக்கிறது. வேதாசலத்தின் பெயர் நினைவு கிடையாது. பிறகு தான் தெரியும்.
ஆனால் ஒரு நகரத்தை சுற்றி எட்டு சமண மையங்கள் இருந்தது என்பது எனக்கு பெரிய ஆச்சரியமான விஷயம். அதன் பிறகு நான் மதுரைக்கு போய் சு. வெங்கடேசன் என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் இரண்டு பேரும் அந்த சமண மையங்களை மூன்று நாளில் சுற்றிப் பார்த்தோம்.
பள்ளிக்காலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள சமண மையங்கள் பார்த்தது நினைவு வருகிறது. சமணத்தை தெரிந்து கொள்ளாதவர்களும் பேசக்கூடிய பெரும்பாலான பிரச்சினைகள் அல்லது தத்துவ பிரச்சினைகள் சமணத்துடைய நீட்சியாகத்தான் இருக்கின்றன.
ஒரு அறவோர் ஒரு இடத்தை உருவாக்குகிறார்கள் சமணத்துறவி .அதற்குள் வன்முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்குள் ஒருவன் வன்முறையில் இறங்கினால், வன்முறை செய்தவனுடைய வீட்டு முன்னாடி போய் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பார்கள்.
அப்ப பழி வந்து சேரும். அந்த பழிக்கு அஞ்சி அவர்களுடைய இடத்துக்குள் யாரும் கொலை செய்ய மாட்டார்கள்.அப்படி என்றால் தர்மத்தின் சக்தி என்று ஒன்று இருக்கிறது.வல்லமை என்று ஒன்று இருக்கிறது. அதை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வட்டம் இது. உச்சக்கட்ட வன்முறை நிலவிய சங்க காலத்தில அல்லது சங்கம் மறுவிய காலகட்டத்தில ஒவ்வொரு குறுநில மன்னனும் மாறி மாறி கொன்றுக் கொண்டு இருந்தார்கள்.
திருவிதாங்கூரில் கிட்டத்தட்ட வெள்ளையர் வரக்கூடிய காலம் வரைக்கும் கொலை என்பது ஒரு அன்றாட செயலாக இருந்த ஒரு மண் . அது ஏனென்றால் வளமான மண். வளமான மண் வன்முறையால் தான் ஆளப்பட முடியும்.
அப்படி இருந்த ஒரு வரலாற்று அந்த மண்ணுல , ஒரு இரத்தம் இல்லாத ஒரு நிலத்தை ஒருவன் உருவாக்குவான் என்றால் தன்னுடைய தர்மத்தின் பலத்தால் அதை உருவாக்குவான் என்றால் அது எவ்வளவு பெரிய ஒரு கனவு ஒரு தவம் ! ஒரு குறியீட்டு ரீதியா பார்த்தீங்கன்னா ஒவ்வொரு எழுத்தாளனும் இப்படி ஒரு வட்டத்தை உருவாக்கத்தான் முயற்சி செய்கிறான். அறமின்மை விளங்கக்கூடிய ஒரு சமூகத்தில் அறத்தாலான ஒரு வட்டத்தை தன்னுடைய தவத்தின் பலத்தால் உருவாக்குவதுதான் எழுத்தாளனின் அறைகூவலோ அவனுடைய பணியோ என்று நான் நினைப்பேன். இந்த எண்ணம் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருந்த போது நான் வேதாசலத்தின் நூல்கள் படிக்க தொடங்கும்போது அவர் பாண்டிய நாட்டைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். பாண்டிய நாட்டுடைய நிலவுடைமை முறை, கிராமிய அமைப்புகள் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார். ஆனால் தொடர்ந்து அவருடைய சமணம் பற்றிய புத்தகங்களைத் தான் விரும்பி படிக்கிறேன்.
அண்மையில கூட அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். பாண்டிய நாடு எனக்கு முக்கியம் இல்ல, சமணம் தான் முக்கியம் .ஏன் என்றால் நான் பாண்டிய நாட்டுக்காரன் இல்லை. நான் சேரநாட்டுக்காரன்.
என்னுடைய ஊருடைய சமணம் எனக்கு முக்கியம் .இத்துடன் இணைந்து போகக்கூடிய இடங்கள் இவருடைய நூலில் எங்கெங்கே இருக்கும் இதுதான் எனக்கு ரொம்ப ஆர்வ மூட்டக் கூடியதாக இருந்தது. குறிப்பாக அந்த மொத்தபுத்தகத்திலே கழுகுமலை பற்றிய பகுதி மிகப் பயங்கரமாக ஆச்சரியத்தை அளித்தது.
அதில் ஒரு பட்டியல் கொடுக்கிறார். அதைப்பற்றி நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன் கழுகுமலையில இருந்த சமணப் பெண் துறவிகளுடைய பட்டியல். ஆணாதிக்கம், சாதிவெறி, வன்முறை எல்லாம் ஓங்கி நின்ற ஒரு சமுதாயத்தில், பெண்கள் வந்து துறவியாக முடியும் என்பது ஒரு விடுதலை.
அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இருக்க முடியும்? ஒரு பெண் தாசியாக இருக்க முடியும், அல்லது குலஸ்திரீயாக இருக்க முடியும். கற்புக்கரசியாக இருக்க முடியும் .இரண்டுமே சிறைவாழ்க்கைதான். இரண்டுமே இரண்டு வகையான அடிமை வாழ்க்கைதான். ஆனால் அதை விட்டு விட்டு மூன்றாவது வாய்ப்பாக துறவு.
துறவுப் பெண்ணுக்கு உடைமைக்கான உரிமை கிடையாது. துறப்பதற்கான உரிமை இருந்தது. அது எவ்வளவு பெரிய விஷயம்?அதைப் பற்றி நாவல் எழுதலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
இவர் எழுதி இருக்கிறது ஒரு வரலாற்று நூல் . அதை சுப்பராயலு அவர்கள் படித்தார் என்றால் அவர் எடுக்கக்கூடிய சித்திரம் வேறு. ஆனா நாம் இலக்கியவாசகனாகிய நாம அதிலிருந்து எடுக்கிறது பெரிய பெரிய பெரிய கனவுகளை எடுக்க முடியும் .பெரிய பெரிய தீம்ஸ் நமக்கு அதிலிருந்து வரும். நம்முடைய சிந்தனைகள் எல்லாமே ஒரு பெரிய தொடர்ச்சியில் இருக்கிறதை இந்த வரலாற்று நூல்கள் நமக்குக் காட்டுகின்றன.
இங்க தவ்வை அல்லது மூதேவி என்கிற தெய்வத்தை பற்றி முனைவர் வேதாசலம் எழுதிய ஒரு நூல் இங்கே இருக்கிறது. தவ்வை பற்றி முன்பு பேசப்படாதது இப்போது பேசப்படுகிறது.
பயணங்களில் நிறைய தவ்வை கோவில பார்த்திருக்கிறோம். கேரளாவில மலைப்பகுதிகளில் நிறைய தனித்த கோவில்கள் தவ்வைக்கு உண்டு. மூதேவி கோவில் எனக்கு தனிப்பட்ட முறையில'கிராதம்' நாவல் எழுதும்போது பெரிய ஒரு கனவுகளும் சிக்கல்களும் வந்து ஒரு பெரிய மன அழுத்தம் மாதிரி இருந்த காலத்தில் கேரளா நண்பருடைய ஆலோசனைப்படி நான் கேரளாவில் இருக்கக்கூடிய ஒரு தவ்வை ஆலயத்துக்கு போனேன்.
என்னுடைய வாழ்க்கையில் அது ஒரு பெரிய திருப்புமுனை . அது ஒரு பெரிய அனுபவம். அதிலிருந்து என்னுடைய வாழ்க்கை மொத்தப் பார்வையும் வேறொன்றாக மாறி இருக்கிறது. அதுக்கு முன்னாடி இருந்த லாஜிக் வேறு. அதுக்கு பிறகு இருந்த லாஜிக் வேறு . அந்த தவ்வை மூதேவி என்கிற அக்காள் என்கிற அமங்கலத்தின் வடிவாக நாம் சொல்லக்கூடிய தெய்வம் அதனுடைய பரிணாமம்,
தமிழகம் முழுக்க அது வெவ்வேறு வகையில் வழிபடக்கூடிய இடங்கள், எங்கெங்கெல்லாம் இந்த ஆலயம் இருக்கிறது என்று ஒரு பெரிய அட்டவணையோடு இருக்கக்கூடிய ஒரு புத்தகம், ஒரு கலைக்களஞ்சியம் போல இருக்கிறது. பிரமிப்பூட்டக்கூடிய ஒரு பெரும் உழைப்பு செலுத்தப்பட்ட புத்தகம்.
தவ்வை என்பது நம் அம்மா தான்.உண்மை சொன்னால் மூதேவி என்கிற வார்த்தை நல்ல வார்த்தைதானே? மூத்த தேவிதானே மூத்ததேவி. மூத்தவள் நல்ல வார்த்தைதான் அது. நம்முடைய உள்ளம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கு?
அடியில என்ன இருக்கு என்று நாம திரும்ப திரும்ப சென்று கண்டடையக் கூடிய நூல்களாக இந்த வரலாற்று நூல்கள் இருக்கின்றன. வரலாற்று நூலுக்குள் போக போக போக ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கான பேசு பொருள்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.
ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கான கோணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் .அவன் எழுதுவதற்கான தரவுகள் குவிந்து கொண்டே இருக்கும்.
எல்லாவற்றுக்கு மேல் தன்னுடைய சிந்தனையை தானே திரும்பி பார்ப்பதற்கான,தானே மதிப்பிடுவற்கான ஒரு வழியை இலக்கியவாசகனுக்கு வரலாற்று நூல்கள் அளிக்கின்றன .
இலக்கிய வாசகர்களாகிய எங்களுக்கு இவருடைய நூல்கள் மிகப்பெரிய ஒரு தூண்டுதலை, திறப்பை, விரிவை அளிக்க கூடியதாக இருக்கின்றன என்பதுதான் இந்த விருதுக்கான பின்னால் உள்ள முதன்மையான உணர்ச்சி நிலை என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
கேரளத்தில் நாம் பார்க்கக் கூடியது பத்திரிகைகளில் குறிப்பாக வரலாற்று ஆசிரியர்களை முடிந்தவரை எல்லா இடத்திலும் குறிப்பிடுவார்கள். அங்கே அவர்களை ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்டுக் கொண்டே இடருப்பார்கள்.
தமிழ்நாட்டில கிட்டத்தட்ட யாருமே செய்யாத ஒன்று, ஒரு வரலாற்று ஆசிரியர் பெயர் இந்த மாதிரி ஒரு விருது வழியாகத்தான் பாதி பேருக்குத் தெரியவருகிறது. ஒரு அறிவுச் சூழலில் செயல்படக்கூடிய ஒருவர் செய்ய வேண்டியது வரலாற்று ஆசிரியர் நூலை படிப்பது மட்டுமல்ல கூடுமான வரைக்கு நேரடியாக மேற்கோள் காட்டுவதும் கூடத்தான் அடக்கத்துடன் நாம் வரலாற்று ஆசிரியர்களைப் பற்றிக் கூடுதலாகத் தொடர்ந்து பேச வேண்டும் என நான் நினைக்கிறேன்.
நண்பர்களே,இந்த மேடையில் பெரும் கனவுகளைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். தொடர்ந்து அந்த கனவுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.நானும் நண்பர் அரங்கசாமியும் சேர்ந்து லண்டனிலிருந்து ஒரு ஆங்கிலப் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கக்கூடிய கனவை கடந்த சில மாதங்களிலே வரையறுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த அறிவிப்பு வரும். தமிழ் நூல்களை கூடுமான வரைக்கும் லண்டனில் பிரசுரிப்பது என்பது எங்களுடைய அடுத்த கட்ட கனவுகளில் உண்டு." இவ்வாறு ஜெயமோகன் பேசினார்.
விழாவுக்கு பார்வையாளர்களாக வந்திருக்கும் முக்கிய ஆளுமைகளை விழாவில் பங்கேற்க வைத்துப் பெருமைப் படுத்துவது இந்த அமைப்பின் வழக்கம். அவ்வகையில் கவிஞர் தேவதேவன் ,எழுத்தாளர் சோ. தர்மன்,கடந்த காலங்களில் தூரன் விருது பெற்ற மு. இளங்கோவன், மோ.கோ.கோவை மணி, எஸ்.ஜே.சிவசங்கர் ஆகியோரையும் விஷ்ணுபுரம் ஜா. ராஜகோபாலன்,செந்தில் ஜெகநாதன், அருண்மொழி நங்கை போன்றவர்களையும் மேடையில் ஏற்றிப் பங்காற்ற வைத்தார்கள்.
அரங்குகளுக்கு நெறியாளர்களாக சபரிஷ், ஜி எஸ் .எஸ் . வி நவின் ,ஸ்ரீ வித்யா, ரம்யா,தாமரைக்கண்ணன் ஆகியோர் செயல்பட்டனர். ஈரோடு கிருஷ்ணனின் வழிகாட்டுதலில் பிரபு, பாரி,சிபி, மெய்யரசு, அழகிய மணவாளன் எனப் பல நண்பர்கள் வந்திருந்தவர்களை வரவேற்பது உபசரிப்பது போக்குவரத்து வசதிகளைச் செய்வது என பம்பரமாகச் சுழன்றுக் கவனித்துக் கொண்டார்கள்.