
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பின்புலத்தில் இன்றளவும் நிலைத்திருக்கும் மதுரை நகரின் கடந்த காலம் விநோதமானது. கோட்டை கொத்தளம் மட்டுமின்றி, காலந்தோறும் மக்கள் வாழ்வதற்கேற்ற சூழல் தொடர்ந்து நிலவுவதுதான் மதுரையின் இருப்பினுக்கான அடையாளம். அதிகாரப் போட்டியில் பாண்டியர், சுல்தான், நாயக்கர், ஆங்கிலேயர் என யார்யாரோ மாறினாலும், மீனாட்சி அம்மன் கோவிலை மையமாகக்கொண்டு, நான்கு திசைகளிலும் வீதிகள் அலையென விரிகின்றன. 'தூங்கா நகரம்' எனச் சிறப்பிக்கப்படும் மதுரையின் இன்னொரு முகம் தமிழுடன் நெருக்கமானது. புலவர்கள்கூடிச் 'சங்கம்' என்ற அமைப்பின்மூலம் தமிழ்ப் படைப்புகளை அரங்கேற்றினர் என்பது முக்கியமான தகவல். முச்சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் உரைகாரரின் கண்டுபிடிப்புகள் புனைவின் உச்சமெனினும் சுவாரசியம் ததும்புகிறது. பாண்டிய நாட்டிலும் மதுரையிலும் புலவர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதற்குக் கணிசமான ஆதாரங்கள் உள்ளன. இன்றளவும் தமிழ் அடையாளத்துடன் மதுரை நகரம் வளமையோடு இருக்கிறது எனில், தமிழ்மொழி செல்வாக்குடன் விளங்குகிறதா? யோசிக்க வேண்டியுள்ளது.
தமிழ்ச் சங்கம் தமிழை வளர்த்தது என்ற பாரம்பரியமான நம்பிக்கையின் மறுபக்கமாக இன்று கல்வி நிறுவனங்களைக் கருத வேண்டியுள்ளது. பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரை நகரில் இன்றளவும் தனித்து விளங்குகிறது. உயர் கல்வியின் அடையாளமாக விளங்கிடும் பல்கலைக்கழகத்தைப் 'புதிய சங்கம்' என்று குறிப்பிட இடமுண்டு. அங்கே நுண்மாண் நுழைபுலம் மிக்க தமிழ்த் துறை சார்ந்த வல்லுநர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தப்படும் ஆய்வுகள், அறிவின் உச்சமாக வெளிப்படுகின்றன. சுதந்திரமான ஆய்வுப் போக்குடன் அறிவின் மையமாக விளங்கிடும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்மூலம் காத்திரமான மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்துச் சண்முகம்பிள்ளை முதலாகப் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது. பொதுவாகத் துறைத் தலைவர், பேராசிரியர் எனப் பலரும் பீதியைக் கிளப்பும் சூழலில், எப்பொழுது பார்த்தாலும் 'என்னய்யா' எனப் புன்முறுவலுடன் விளங்கும் சண்முகம்பிள்ளையின் எளிமை எங்களைக் கவர்ந்தது. பேராசிரியரின் அறைக்குள் யார் வேண்டுமானாலும் எப்பொழுதும் உள்ளே போய் வரலாம். எல்லோரிடமும் இயல்பாகப் பேசும் பேராசிரியர், முதுகலை முதலாண்டு மாணவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்டார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று. மொழியியல் ஆய்வுக்கு முக்கியத்துவம் தந்த பேராசிரியரிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. வெறுமனே பண்டைய இலக்கணம், இலக்கியம் எனச் சுழன்று கொண்டிருந்த நிலையை மாற்றித் தமிழாய்வினுக்கு வழி வகுத்தார். நாட்டுப்புறவியல், நாடகவியல், இதழியல், ஒப்பிலக்கியம், மொழியியல் எனப் பிற துறைகளைத் தமிழுடன் ஒருங்கிணைத்துப் புதிய வகைப்பட்ட போக்குகளை ஊக்குவித்தார். அவருடைய கட்டத்தில் முழுநோ ஆய்வாளர்கள் நிரம்பி வழிந்தனர். கல்லூரி ஆசிரியர்கள் எப்ஃ, ஐ. பி. திட்டத்தின் வழியாகப் பல்கலைக்கழகத்தில் கணிசமாக ஆய்வு மேற்கொண்டிருந்தனர். எங்கும் ஆய்வு என்பதே பேச்சாகத் தமிழ்த் துறையில் சூழல் நிலவியது.
வகுப்பறைகளில் முதுகலை மாணவர்களுக்குப் பேராசிரியர்கள் பாடம் நடத்தியபோது ஒவ்வொரு விஷயமும் முக்கியமானவை என்ற உணர்வுடன் மாணவர்கள் கவனித்தனர் என எழுதினால், உங்களால் நம்பமுடியாமல் போகலாம். அதுதான் உண்மை. வெறுமனே மாத ஊதியத்திற்காக ஒப்புக்குப் பாடம் சொல்லியவர்கள் யாரும் பேராசிரியர்களாக அப்பொழுது இல்லை. புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளுங்கள் எனத் தமிழ்த் துறையினரிடம் 'எழுத்து' பத்திரிகை மூலம் தொடர்ந்து எழுதிய சி.க. எனப்படும் சி.கனகசபாபதியின் வகுப்புகள் அற்புதமானவை. வகுப்பினுக்கு ஏழெட்டுப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு வந்து டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு, ஆதாரப்பூர்வமாகப் பேசும் சி.க.வின் பேச்சில் விமர்சனப் பார்வை, நுட்பமாக வெளிப்படும். மு.வ. எனப்படும் மு.வரதராசனார் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு', 'இலக்கியத் திறன்' போன்ற புத்தகங்கள் எங்களுக்குப் பாடமாக இருந்தன. 'இலக்கியத் திறன்' புத்தகம் ஒரு குப்பை, இலக்கிய வரலாறு அபத்தமானது என்று சி.கனகசபாபதி வகுப்பில் உறுதியாகச் சொன்னார். நான் அப்பாவிபோல ”மு.வ. பெரிய ஸ்காலர்” என்றேன். ”இருக்கலாம். அந்தப் புத்தகங்கள் வெறுமனே நகல்கள், குப்பைகள்” என்று உறுதியுடன் சொன்னார். எழுபதுகளில் மு.வ.வின் மறைவினுக்குப் பின்னர் அவாது பெயரைச் சொல்லிப் பஜனைபாடி வந்த பேராசிரியர் கூட்டம் இருந்தது, கவனத்திற்குரியது. பாடப்புத்தகங்களுக்கு அப்பால், தமிழ் தொடர்பான கருத்துக்களை மாணவர்களுக்குச் சொல்வதில் சி.கனகசபாபதி முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
பட்டவகுப்பில் பி.எஸ்ஸி(கணிதம்) படித்த நான் தொல்காப்பியம் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தால், தமிழ் முதுகலையில் சேர்ந்திருக்க மாட்டேன். சிறுபத்திரிகை சார்ந்த மனநிலையில் நவீன இலக்கியம் வாசித்த எனக்கு மரபிலக்கியமும் இலக்கணமும் தொல்லையாக இருந்தன. கணிதப் பாடத்திலிருந்து தப்பி வந்து இலக்கணத்தில் மாட்டிக்கொண்ட மனநிலை. வெற்றிலைப்பெட்டி நடராசன் எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பேராசிரியர் தி. நடராசன் நடத்திய தொல்காப்பிய வகுப்புகள் நேர்த்தியானவை. தொல்காப்பியர் என்ற இலக்கண மேதையின் பன்முகப் பரிமாணங்களை நுட்பமாக ஆராய்ந்து அளித்த விரிவுரைகள், ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஆழமாக ஊடுருவின. மொழியைப் புரிந்துகொள்ள அடிப்படையாக விளங்கும் நுட்பங்களைப் படம் பிடித்துக்காட்டின. இரண்டு மணி நேர வகுப்பினில் இலக்கணம் பற்றிய விளக்கத்துடன் நாட்டுப்புற இலக்கியம் பற்றி அவ்வப்போது குறிப்பிட்ட தகவல்கள் முக்கியமானவையாக விளங்கின. இலக்கண வகுப்பைச் சுவாரசியமாக நடத்தமுடியும் என நிறுவிய தி.நடராசன் சார் மாஸ்டர்தான். அவரை இலக்கணப் புலி என்று நினைத்துக்கொள்வேன்.
'என்னய்யா' என அழைத்துக் கேலியான தொனியில் பேசும் தி.சு.ந. என அழைக்கப்படும் தி.சு. நடராசன் வகுப்பில் புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். எந்தவொரு கஷ்டமான விஷயத்தையும் எளிமையாகச் சொல்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை. எப்பொழுதும் பாடம் பாடம் எனப் பாடப்புலியாக இருக்கும் மாணவிகளைப் பகடி செய்வார். விமர்சனத்தில் பெரிதும் ஆங்கிலப் புத்தகங்கள் செல்வாக்குச் செலுத்திய காலகட்டமது. இலக்கியக் கலை, இலக்கியத் திறன் போன்ற தமிழ்ப் பேராசிரியர்களின் விமர்சன நூல்கள் பொறுக்குகளாக இருந்தன. படைப்புகளை அணுகி விமர்சிப்பதற்கு எவ்விதமான கருவிகளும் தராத அந்த நூல்கள் மொக்கையாக இருந்தன. அவை தேர்வில் விடையளிப்பதற்காகப் பயன்பட்டன. அன்றைய காலகட்டத்தில் சோசலிச யதார்த்தவாதம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இடதுசாரி மனோபாவம் எங்கும் மேலோங்கியிருந்தது. மார்க்சிய அணுகுமுறையில் இலக்கியப் படைப்புகளை அணுகி ஆராய்ந்திடும் போக்கு நிலவியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் பொறுப்பாளராக விளங்கிய தி.சு.ந.வின் விமர்சன அணுகுமுறை புத்தொளியைப் பாய்ச்சியது. சமுதாயமும் இலக்கியமும் பற்றி தி.சு.ந. வகுப்பில் ஆற்றிய விரிவுரை, புத்தகம் போலச் செறிவாக இருந்தது. ஒவ்வொரு நொடியையும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஆழமான விஷயங்களை முன்னிறுத்திய தி. சு. ந. வின் மாணவர் மீதான அக்கறையும் அன்பும் அளவற்றவை. அப்பொழுது நான் மார்ச்சிய லெனினியக் கருத்தியல் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். மார்க்சியம் குறித்துச் சீண்டலாக என்னிடம் பேசும் தி.சு.ந.விடம் கடுமையாக மறுத்துப் பேசுவேன். ஒரு கட்டத்தில் இந்தியாவில் வரப்போகும் புரட்சிக்கு இந்தியப் பொதுவுடைமைக் கட்சிதான் முட்டுக்கட்டை என்றும் அவர் வலது சந்தர்ப்பவாதி என்றும் கூறியவுடன் 'என்னய்யா என்னைப் புரட்சிக்கு விரோதிங்கிறே' என்று கேட்டார். 'போல்ஷ்விக்-க்கு எதிரி மென்ஷ்விக்தான். நீங்க மென்ஷ்விக்' என்றேன். இப்பொழுது அச்சம்பவத்தை நினைக்கும்போது எனது செயல் அதிகப் பிரசங்கித்தன்மை போலத் தோன்றுகின்றது. கருத்துரீதியில் எதிர் எதிராக முரண்பட்டு நிற்கும் முதுகலை மாணவனான என்னை தி.சு.ந. வெறுக்கவில்லை. நேசமாகக் கருதி ஊக்குவித்தார். பேராசிரியரிடம் எதிர்க்கருத்துக் கூறினாலே, அந்த மாணவரை வர்க்கப் பகையாளியாகக் கருதும் சூழலில் தி.சு. ந. வின் பெருந்தன்மைக்கு அளவேது? அவருடைய கறாரான அணுகுமுறைதான் தமிழைப் பிழையின்றியும் தெளிவாகவும் எழுத வேண்டியதன் தேவையை எனக்கு உணர்த்தியது. அவருடய மாணவர்களில் அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார் ,சு.வேணுகோபால் போன்றோர் இன்று பெயர் விளங்கும் தமிழ்ப் பேராசிரியர்களாக விளங்குவதற்குக் காரணம் தி.சு.ந.வின் வழிகாட்டுதல்தான். ஆசிரியர்-மாணவர் உறவைமீறி ஒவ்வொரு மாணவரின் சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறித்தும் அக்கறைகொள்ளும் பேராசிரியர் தி.சு. ந.விடம் பாடம் கேட்டவர்கள், நிச்சயம் தமக்கெனப் புதிய தடத்தை வகுக்கும் வல்லமையாளர்கள்தான்.
எந்தவொரு விஷயத்தையும் நகைச்சுவையாகப் பேசும் பேராசிரியர் விஜயவேணுகோபாலின் வகுப்பு முழுக்கக் கேலி பொங்கும். வகுப்பில் கடினமானவற்றையும் பகடி கலந்த குரலில் உரையாற்றும் வேணுகோபால் பல்கலைக்கழக வளாகத்தில் எங்கே பார்த்தாலும் அன்புடன் பேசுவார். எவ்விதமான கவலையும் இல்லாமல் துறையில் உலா வரும் பேராசிரியரைப் பார்த்தவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். மொழியியல் நோக்குடன் இலக்கியத்தை அணுகும் பேராசிரியர், மரபு வழிப்பட்ட சிந்தனைப் போக்கினைச் சிதிலமாக்கி விடுவார். முதுகலை மாணவனையும் நண்பராகப் பாவித்துப்பேசும் பேராசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்ளுவதற்கு விஷயங்கள் எப்பொழுதும் இருந்தன.
வேதியியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்ற வேண்டியவர் தமிழ்த்துறைக்கு வந்து விட்டார் என்று பேராசிரியர் சீனிவாசன் அவர்களைப்பற்றி நினைக்கத் தோன்றும். எதிலும் துல்லியம், கறார், நுட்பமான அளவுகோலுடன் இலக்கியத்தை அணுகும் அவருடைய அகராதியில் சமரசம் என்ற சொல் இல்லை. அன்பின் ஐந்திணையா அல்லது ஏழு திணையா என நான்குமணி நேரமும் நெடு நல்வாடை அகமா? புறமா? என மூன்று மணி நேரமும் வகுப்பெடுத்தார். பல்வேறு தமிழறிஞர்களின் கருத்துக்களைக் கோவையாக்கி, வழக்கறிஞர்போல வாதப் பிரதிவாதங்களை முன்வைத்துச் சீனிவாசன் ஆற்றும் உரை, பிரமிப்புத் தரும். எந்தவொரு சின்ன விஷயமும் முக்கியம் என்பதுபோல எப்பொழுதும் தகவல்களைத் தேடியலையும் பேராசிரியர், வகுப்பறைக்குத் தந்த முக்கியத்துவம் அளவுக்கதிகமானது. தான் அறிந்த மாபெரும் உண்மைகளை எல்லா மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என விடாது போதிக்கும் இயல்புடைய பேராசிரியர் போன்றவர்கள் இப்பொழுது அருகி விட்டனர். முதுகலை பயிலும்போது நான் எழுதிய 'வண்ணதாசன் கதைமாந்தர்கள்' திட்டக் கட்டுரையையும் பிற அசைன்மெண்ட்டுகளையும் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அவை புத்தமாகப் போடப்பட வேண்டிய தரத்திலுள்ளன என்று கருத்துரைத்தது எனக்கு மிகவும் ஊட்டமாக இருந்தது.
தடித்த கண் கண்ணாடியணிந்த விழிகளின் ஊடே உற்றுப் பார்க்கும் சு.வே. எனப்படும். சு. வேங்கடராமன் வகுப்பறையை ஆய்வுக் களமாக்குவதில் வல்லவர். அவரது வகுப்பில் வெளிப்படும் கருத்துக்கள் ஆழமான நிலையில் மாணவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தின. மு.வ., அகிலன், நா.பா., போன்ற இலக்கியவாதிகளுடன் நட்புக்கொண்டிருந்த அவரது எழுத்து, வைணவ இலக்கியத்திலும் தடம் பதித்திருந்தது.
மொழியியல் பற்றிப் பாடம் நடத்திய பேராசிரியர் இஸ்ரேல் அவர்களின் பேச்சு கடுமையாகத் தோன்றும். அடிப்படையில் அவர் குழந்தை போன்றவர். திராவிட மொழியியல் பற்றிய பேராசிரியரின் புலமை நுணுக்கமானது. எந்த நேரத்திலும் மொழியியல் குறித்துப் பேசும் ஆற்றல் மிக்க போராசிரியர், மாணவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அவர் பர்ரோ, எமனோ உருவாக்கிய திராவிட வேர்ச் சொல் அகராதியின் முக்கியத்துவத்தை வகுப்பறையில் சொன்னவுடன் அன்று மாலைவேளையில் நூலகத்திற்குப் போய் அந்த அகராதியைப் புரட்டியது இப்பவும் நினைவிலுள்ளது.
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், எப்பொழுதும் தீவிரமான முகபாவத்துடன் விளங்கும் பேராசிரியர் தி.முருகரத்தினம் அவர்களின் வகுப்பு முடிவற்றது. ஒரு திருக்குறளை வைத்துக்கொண்டு ஒரு மணிநேரம் விளக்கும் ஆற்றல் மிக்க பேராசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன. தான் அறிந்ததை மட்டும் உண்மை என்று நம்பும் இயல்புடைய பேராசிரியர் எதிர்க் கருத்தினைக் கடுமையாக மறுத்துரைப்பார். அதேவேளையில் புதிய கருத்து சரியானது எனத் தோன்றினால் அன்போடு வரவேற்கும் இயல்புடையவர். காப்பியப் பாடத்தில் ’சிலப்பதிகாரக் காலச் சமுதாயம்’ என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த நாற்பது பக்கத் திட்டக் கட்டுரையை வாசித்த முருகரத்தினம் சார் அவருடைய அறைக்கு அழைத்துப் பேசினார். அப்பொழுது சங்க இலக்கியக் காலகட்டத்தில் பெரிய எண்ணிக்கையில் இருந்த குறுநில மன்னர்கள் ஏன் சிலப்பதிகாரத்தில் இடம் பெறவில்லை?, மூவேந்தர்களுக்குத் தரப்பட்டுள்ள கூடுதல் முக்கியத்துவத்துக்குக் காரணம் என்ன? என்ற என்னுடைய கருத்துகளைப் பாராட்டினார். சிலப்பதிகாரத்தைப் பல தடவைகள் வாசித்திருந்தாலும் தனக்கு அப்படி தோன்றவில்லை என்றார்.
அகமதிப்பீட்டுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்கும்போது, சரியான கட்டுரைகளுக்கு அதிகபட்சமான மதிப்பெண் வழங்குவார்.
மொழியியல் பேராசிரியரான ஜெ.நீதிவாணன் பேசாத இயல்புடையவர் என்றாலும் புன்முறுவலுடன் தோன்றுவார். ஆய்வரங்குகளில் அவரது பேச்சு அழுத்தம் திருத்தமாக இருக்கும். தருக்கமுறையில் சரியான ஆதாரங்களை முன்வைத்துப் பேராசிரியர் பேசுவதைக் கேட்க வியப்பாக இருக்கும். இவருக்கு மட்டும் எப்படி புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன என மாணவர்கள் நினைப்பர். அவரது வகுப்பறையில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் மிக்கதாக விளங்கும். வீண் பேச்சு என்பதற்குச் சிறிதும் இடமிருக்காது. பாடத்தில் தோய்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் தொகுத்து, வகுத்து விளக்கும் பேராசிரியரின் வகுப்பை உற்றுக் கேட்டால் போதும், மனம் நிறைந்துவிடும். தேர்வெழுதுதல் எளிதாகும்.
தேவாரப் பாடலை உருக்கமாகப்பாடி இறையருளை விளக்கிய பேராசிரியர் நவநீதகிருஷ்ணனின் பார்வையில் எப்பொழுதும் கண்டிப்புத் தோய்ந்திருக்கும். அவரது உருக்கமான பேச்சு, சமய இலக்கியம் பற்றிய புதிய திறப்பினை ஏற்படுத்தியது.
நகைச்சுவையுடன் மாணவர்களைக் கேலி செய்துகொண்டு, அதேவேளையில் மாணவர்களின் கமெண்டையும் ரசிக்கும் மனோபாவம் மிக்க பேராசிரியர் ஜெயராமன் ரசனைக்குரியவர். எப்பொழுதும் உற்சாகமான மனநிலையுடன் காணப்படும் பேராசிரியரின் வகுப்புகள் மாணவர்களுக்கு உவப்பானதாக விளங்கின. உடல் நலமில்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்த பேராசிரியரைச் சந்திக்க நானும் நண்பன் பாலகிருஷ்ணனும் போனோம். அவர் வரவேற்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென + 2 படிக்கிற மகளை அழைத்தவர் ”ஏதோ கணக்குத் தெரியவில்லை என்று சொன்னே இல்லையா? இவனிடம் கொடு மேக்ஸ் ஸ்டூடண்ட் போடுவான்” என்று சொன்னார். கணக்குப் புத்தகத்தை வாங்கியவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்ன விஷயம் என்பது போலக் கேட்டார். நான் தயங்கியவாறு சொன்னேன்:
“ சார் கணக்கை சால்வ் பண்ண பார்க்கிறேன். ஒருக்கால் முடியாவிட்டால் வகுப்பில் இவனுக்குக் கணக்குத் தெரியாது என்று சொல்லக்கூடாது.” வாய் விட்டுச் சிரித்தவர் எனக்கும் அந்தக் கணக்குத் தெரியாது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்றார். அப்புறம் அந்தக் கணக்கின் விடையைக் கண்டுபிடித்து அவருடைய மகளுக்கு விளக்கிச் சொன்னேன். எந்தவொரு விஷயத்தையும் பகடி பண்ணிய ஜெயராமன் சார் அசல் மதுரைக்காரர்தான்.
நிஜ நாடக இயக்கம் என்ற அமைப்பின் மூலம் மாணவர்களை வைத்து நவீன நாடகம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் மு.ராமசுவாமி கலகக்காரராக அறிமுகமாகி இருந்தார். அவரது தாடியும் எளிய தோற்றமும் எடுத்தெறிந்து கறாரான பேச்சும் அவரைப்பற்றிய பிம்பத்தை உருவாக்கியிருந்தது. அவரை 'நக்சலைட்' என்று சில மாணவர்கள் கருதினர். அதுவரை துறையில் நிலவிய மதிப்பீடுகளை விமர்சனம் செய்த மு.ரா.வைப் பேராசிரியராக மட்டுமின்றி வாழ்வின் ஆதர்சமாகக் கருதியவர்களில் நானும் ஒருவன்.
அப்பொழுது ‘தமிழியல்' என்ற திட்டத்தில் வித்துவான் ந.சேதுரகுநாதன், ச.தண்டபாணி தேசிகர் போன்றோர் பனியாற்றினர். அவர்களும், முதுகலை மாணவர்களாகிய எங்களுக்குப் போதித்தனர். புலவர் பரம்பரையின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்த அவர்களின் கருத்தாடல்கள் நல்ல அனுபவங்கள்தான். பேராசிரியர் சேதுரகுநாதன் சீவகசிந்தாமணி காப்பியப் பாடலை ராகமுடன் பாடி நடத்துவார். ஒவ்வொரு பாவிற்கும் உரிய ஓசையுடன் பாடலைப் பாடும்போது, மனதில் உற்சாகம் கொப்பளிக்கும், அவர் பாடும்போது, பின்னணி இசையாக, மேசையைத் தட்டி மாணவர்கள் தாளம் போடும்போது, அவர் சிரிப்பார். சைவநெறியில் தோய்ந்த பேராசிரியர் சீவகசிந்தாமணி நூலினை வரிக்குவரி போற்றுவார். திருத்தக்கதேவரைவிட ரகுநாதன் அய்யாவிற்குத்தான் சீவகசிந்தாமணி நூலின் மீது பெரும் விருப்பம் என நினைத்துக் கொள்வேன். தற்செயலாகப் பல்கலைக்கழக வளாகத்தில் சந்திக்க நேர்ந்ததால், கேண்டீனுக்கு அழைத்துப் போய் இனிப்பு, காரம், தேநீர் வாங்கித் தந்து மரபிலக்கியச் சிறப்பினையும் கவிதையின் சந்தத்தையும் பற்றி விளக்குவார். ஒருநாள் வகுப்பறையில் அவர் அண்மையில் எழுதிய ’வெண்பா'வைச் சொன்னார். சில நிமிடங்களில் மாணவர்கள் ரெ.பாலகிருஷ்ணனும் பாலுச்சாமியும் தங்களுடைய வெண்பாக்களை வாசித்தனர். அவற்றைக் கேட்டவுடன் திகைத்து நின்றவரின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ”இத்தகைய ஞானக் குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பது தான் பெற்ற பெரும் பேறு” என்றார். யாரும் எதுவும் பேசவில்லை.
( தொடரும்)