கல்வியே ஆயுதம் என்ற நம்பிக்கை நனவாகி இருப்பதாக அகரம் தொண்டு நிறுவனத்தின் 15ஆவது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசி இருக்கிறார்.
நடிகர் சூர்யா ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அகரம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு இந்த நிறுவனம் உதவி செய்து வருகிறது.
இந்த நிலையில், அகரம் தொண்டு நிறுவனத்தின் 15ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசுகையில், “கல்வியே ஆயுதம். இதுதான் அகரத்தின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நனவாகி இருக்கிறது. கல்வி என்பது படிப்பு மட்டுமல்லாமல் பண்பைச் சொல்லிக் கொடுப்பதும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதும் தான். அதனை இன்று பல மடங்கு மாணவர்கள், மாணவிகள் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அந்த சந்தோஷத்தைப் பகிரும் நாள் இன்று. கிட்டத்தட்ட 6,700 முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரியாக மாறி இருக்கிறார்கள். கல்லூரியில் சேர்ந்து நல்ல மதிப்பெண் பெற்று வேலை சென்று நிறைய சம்பாதித்திருக்கிறார்கள். அவர்களின் தலைமுறையில் யாரும் பார்க்காத வளர்ச்சி அந்த மாணவி மூலமாகவும், மாணவர் மூலமாகவும் அந்த குடும்பங்களுக்கு கிடைத்திருக்கிறது. அது சந்தோஷம்.. ஆனால் பெருமை அளிக்கிறதா என்றால், அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அகரம் மூலம் படித்த மாணவர்களும், மாணவிகளும் பலமடங்கு திரும்ப கொடுத்திருக்கிறார்கள். இப்போது அகரத்தை நடத்திக் கொண்டிருப்பதே முன்னாள் மாணவர்களும், மாணவிகளும் தான். அப்படிப் பார்த்தால், இந்த சமுதாயத்தில் அவர்களைப் போல் கஷ்டப்படும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் உதவி செய்வதற்காகக் களமிறக்கி இருக்கிறார்கள்.
அதனை நினைத்து ஒவ்வொருவரும் பெருமை கொள்கிறோம். அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் நாள் இது. ஒவ்வொரு மாணவியும், மாணவரும் கல்வி மூலம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்று பகிரப் போகிறார்கள். கல்வி மூலம் கிடைக்கும் நம்பிக்கை கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.” என்றார்.