, terஅந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025இல் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு, அவர் எழுதிய ‘கனவுப்படிக்கட்டுகள்’ நூல் வெளியீடு ஆகிய இரு விழாக்களும் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கடந்த ஜூலை 19ஆம் தேதி மாலை நடைபெற்றன.
நிகழ்வின் தொடக்கமாக அந்திமழை ஆசிரியர் அசோகன் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர், சிறுகதைகளைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவினர் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர் பாக்கியம் சங்கர் ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடலை, எழுத்தாளர் தீபலட்சுமி நெறிப்படுத்தினார்.
பாக்கியம் சங்கர் பேசுகையில், “ ஒரே நாளில் நிறைய சிறுகதைகளைப் படிப்பது பெரும் மகிழ்ச்சியான வாய்ப்பு எங்களுக்கு... இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், பாரததேவி எழுதிய கதை படிக்கப் படிக்க அவ்வளவு ஜாலியாக இருந்தது. ஒவ்வொரு கதையும் ஒரு விதம்...” என்றார்.
கவிதாவோ,” அந்திமழை சிறுகதைத் தேர்வு என்பது எங்களுக்கு திருவிழாவைப் போல இருக்கும். இந்த ஆண்டில் வந்திருந்த கதைகள் பலதரப்பட்டவையாக இருந்தன. பெண்கள் நிறைய கதைகளை எழுதியிருந்தார்கள்.” என்று குறிப்பிட்டார்.
மாநில போக்குவரத்து - மின் துறை அமைச்சர் சிவசங்கர், அந்திமழை இளங்கோவன் எழுதிய ‘கனவுப்படிக்கட்டுகள்’ நூலை வெளியிட, எழுத்தாளர் இமையம் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்வில், ஆர்வமாக வந்து கலந்துகொண்ட அந்திமழை வாசகரும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் செயலாளராக இருந்தவருமான பிச்சாண்டிக்கு மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வில் எழுத்தாளர் இமையம் பேசியதாவது :
“ இன்றைய சூழலில் அச்சுப் பத்திரிகையை நடத்துவதென்பது பெரும் சவால் நிறைந்தது. அதிலும் பத்திரிக்கையைத் தொடங்கியவர் இல்லாத சூழலிலும் தொடர்ந்து நடத்துவது பாராட்டிற்குரியது. அந்திமழை இளங்கோவனின் குடும்பம் போற்றப்பட வேண்டிய குடும்பம். முடிந்தால் அவர்களை நாம் பின்பற்ற வேண்டும்.
இந்த மொழிக்காக, பண்பாட்டுக்காக, கலாச்சாரத்துக்காக, இலக்கியத்துக்காக தங்கள் குடும்பத்துக்கு எவ்வளவு இழப்பு வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம் என்று உறுதியோடு செயல்படும் குடும்பத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. நிச்சயம், எனக்கு அந்தத் துணிச்சல் இல்லை.
நான் இலக்கியத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் சேவை செய்திருக்கிறேன் என்று ஒரு வார்த்தைகூட சொல்லாதவர் அந்திமழை இளங்கோவன். அவரை நான் நேரில் சந்தித்தது ஒரு முறைதான். தொலைபேசியில் நான்கைந்து முறை பேசியிருக்கிறேன்.
சிறு பத்திரிக்கை நடத்துகிறவர்கள் கிறுக்கர்கள் என்ற அபிப்ராயம் இருக்கிறது எனக்கு. ஒரு கதை, ஒரு நாவல் எழுதினால் இந்த உலகயே திருத்த முடியும் என ஒருவர் நம்புகிறார் என்றால், அவரை விட ஒரு பைத்தியம் இருக்க முடியுமா? உலகத்திலேயே இல்லாத சிறுகதையை, நாவலை எழுதியிருக்கிறேன் என நம்புகிறவன் உண்மையிலேயே மனநோயாளியாகத்தான் இருக்க முடியும். அந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
ஒரு முறை பெங்களூர் சென்றிருந்தபோது இளங்கோவனைச் சந்தித்தேன். சாப்பிட அழைத்துச் சென்றார். இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியத்தைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை நாங்கள்.
அந்திமழை இளங்கோவன் இன்று இல்லையென்றாலும் அவரின் நோக்கம், கனவு தொடர்கின்றது. இன்றைய வாழ்வை ஆவணமாக்கி அடுத்த தலைமுறைக்கு சொத்தாக மாற்றுகின்ற வேலையை அந்திமழை செய்கிறது. அதற்கு வித்திட்ட இளங்கோவன் நம் நினைவில் போற்றுதலுக்குரியவராக இருப்பார்.” என மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசி முடித்தார்.
அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
“துறைசார்ந்த வேலைகளுக்கு இடையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக் காரணம் அந்திமழை இளங்கோவனின் அன்பு, பாசம், பழக்கம்தான். எப்போது பேசினாலும் பாசிட்டிவாகப் பேசுவார். நான் முகநூலில் எழுதியதை அசோகன் படித்துவிட்டு, அதை இளங்கோவனுக்கு அனுப்பியிருக்கிறார். அவரும் அதைப் படித்துவிட்டு, ‘நீங்கள் ஏன் கட்டுரை எழுதக்கூடாது’ என ஊக்கப்படுத்தி, அரசியல் குறித்து மட்டும் எழுதிக்கொண்டிருந்த என்னை, பல்வேறு தலைப்புகளில் எழுதவைத்து எனக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்தவர் இளங்கோவன்.
அந்திமழை இதழுக்கு அவ்வப்போது என்னிடம் கட்டுரை கேட்பார்கள். வழக்கம்போல் கடைசி நாள் வரைக்கும் கொடுக்காமல் இருப்பேன். அசோகன் தொடர்ந்து முயற்சி செய்து பார்த்துவிட்டு இளங்கோவனிடம் சொல்லிவிடுவார். அவர் அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்தாலும், “சார் அதை மட்டும் கொடுத்துடுங்களேன்… நல்லாருக்கும்..ல” என்பார். நான் மிகப்பெரிய ஆளுமைகளாக மதிக்கின்ற பல பேர் அந்திமழையில் வரும் என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு, அழைத்துப் பாராட்டியுள்ளார்கள். ஆத்மார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பழகக்கூடியவர் இளங்கோவன். அந்திமழை மிகப்பெரிய பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது. இந்தப் பணி தொடர வேண்டும்.
இந்தச் சமூகத்தை ஒரு கட்டுரையால், ஒரு கதையால் திருத்த முடியும் என நம்பிக் கொண்டிருக்கும் மனநோயாளி கூட்டத்தில் நானும் ஒருவன் எழுத்தாளர் இமையம் பேசியது சங்கடமாகப் போய்விட்டது. அப்படி இல்லையென்று நினைக்கிறேன் நான்.
அண்ணன் இமையம் ஆனந்தவிகடனில் எழுதிய ‘கட்சிக்காரன்’ கதையைப் படித்தேன். அவர் வேறு ஒருவரை மனதில் வைத்து எழுதியிருக்கிறார். ஆனாலும் அதில் என் தந்தையின் வாழ்க்கை சார்ந்த சம்பவங்கள் இருந்தன. படித்துமுடித்ததும் கையோடு விருத்தாசலத்துக்குப் போய் அவரைச் சந்தித்துப் பேசினேன். அந்தத் தாக்கத்தோடு இன்றும் நான் இருக்கிறேன். நாம் எழுதுவது எங்கேயோ, யாரையோ சென்றுசேர்ந்து சரிசெய்யும்.
எழுத்து நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும், வழிநடத்தும். அதனால் எழுத்தை கைவிடாமல், அதைக் கைகொள்ள வேண்டும்.” என ஊக்கமாகவும் பாசிட்டிவாகவும் பேசினார்.
அரங்கு நிறைந்த இந்த நிகழ்வில், அந்திமழை நிறுவனத்தின் தலைவர் சரஸ்வதி இளங்கோவன், தமிழ் இளங்கோவன், கதிர் இளங்கோவன், விகடன், குமுதம் இதழ்களின் முன்னாள் ஆசிரியர் ராவ், மருத்துவர் சி. பழனி ஐ.ஏ.எஸ், சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவர் நடராஜன், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தலைமை கணக்காயர் கேபி ஆனந்த், கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஜெகன் கவிராஜ் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.