‘தாக்குதல் வருத்தம் அளிக்கிறது...’ ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி

நரேந்திர மோடி / மசூத் பெஷேஷ்கியன்
நரேந்திர மோடி / மசூத் பெஷேஷ்கியன்
Published on

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று பேசினார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

''ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியானுடன் தொலைபேசி வாயிலாகப் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். ஈரானில் நடந்த சமீபத்திய நிகழ்வுகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். ஈரானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை விரைவில் திரும்ப வேண்டும். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்தினேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ஈரான் தனது அணுசக்தி உற்பத்தியை கைவிட வேண்டும் என இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே சனிக்கிழமை இரவு அதிசக்திவாய்ந்த குண்டுகளை பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் மூலம் ஈரானில் வீசியது அமெரிக்கா.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அணுசக்தி உற்பத்தி தளவாடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளதால், அமெரிக்கா தொடங்கி வைத்த போரை ஈரான் முடித்துவைக்குமென ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com