நேற்று சேலத்தில், இன்று சிவகாசியில்... பட்டாசு விபத்தில் 7 பேர் பலி!

நேற்று சேலத்தில், இன்று சிவகாசியில்... பட்டாசு விபத்தில் 7 பேர் பலி!
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் நேற்று கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதன் சோகச் சுவடு மறைவதற்குள் இன்று விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். 

சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் 10.45 மணியளவில் வெடிவிபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 51), எஸ் கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி (வயது 48) , எம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (வயது 35) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பாக்கியலட்சுமி (வயது 55) , கோமதி (வயது 55), பாத்திமுத்து (வயது 55) , இராபியா பீவி (வயது 50) , இராமசுப்பு (வயது 43), இலட்சுமி (வயது 40), முனியம்மாள் (வயது 40) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.      

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று இரவு சுமார் 8.50 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது தீப்பிடித்து வெடித்தது. அதில் கஞ்சநாயக்கன்பட்டி செல்வராஜ் (வயது 29), குருவாலியூரைச் சேர்ந்த 11 வயது சிறுவர்கள் தமிழ்செல்வன், கார்த்தி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிவிபத்துகளால் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகள் பரவியுள்ளன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com