புதுச்சேரியில் மாடலிங் செய்துவந்த இளம் பெண் சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் காந்தி மகள் சங்கரபிரியா (எ) சான் ரேச்சல் (26). மாடல் அழகியான இவர் மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழகம் 2019, குயின் ஆப் மெட்ராஸ் 2022, மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா 2023 என பல பட்டங்களை பெற்றுள்ளார்.
இவர் கடந்த ஓராண்டுக்கு முன் சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த ஜூன் 6ஆம் தேதி இரவு சான் ரேச்சல், அளவுக்கு அதிகமாக துாக்க மத்திரை மற்றும் ரத்தழுத்த மாத்திரைகளை உட்கொண்டுவிட்டதாக தந்தை காந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காந்தி உடனடியாக தனது மகளை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு, சிகிச்சையில் இருந்து வந்த சான் ரேச்சல், மருத்துவரின் அனுமதியின்றி 8ஆம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, 13ஆம் தேதி சான் ரேச்சலுக்கு திடீரென கை, முகம் வீக்கம் அடைந்ததால் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக கடந்த 20ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் சான் ரேச்சல் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து காந்தி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட சான் ரேச்சலுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததோடு, கடன் பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே முழுமையான விசாரணைக்கு பின்னரே சான் ரேச்சல் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். மாடல் அழகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.