இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐ.பி.எல். போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவருமான கேதார் ஜாதவ் இன்று பாஜகவில் சேர்ந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் கேதார் ஜாதவ். மகாராஷ்டிரா அணியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர், பிறகு ரஞ்சி டிராபியில் பங்கேற்றார். 2013-2014 ரஞ்சி சீசனில் 1,223 ரன்களை குவித்தார். மொத்தம் 6 சதங்களை விளாசினார். இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்திய அணிக்காக 2014ஆம் ஆண்டில் அவர் அறிமுகம் ஆனார். முதல் போட்டியை இலங்கை அணிக்காக விளையாடினார். இந்தியாவுக்காக மொத்தம் 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கேதார் ஜதாவ் 1,389 ரன்களை குவித்தர். 27 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கேதார் ஜாதவ் மொத்தம் 4 அணிகளுக்காக விளையாடி உள்ளார். டெல்லி டேர்டேவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக கேதார் ஜாதவ் விளையாடினார். கடந்த ஆண்டு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.
இதையடுத்து அவர் விரைவில் அரசியலில் அடுத்த இன்னிங்ஸை தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழவில் அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.