எடப்பாடி நிகழ்வு புறக்கணிப்பு? – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
Published on

அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று (பிப்ரவரி 9) நடைபெற்றது.

விழா மேடைக்கு மாட்டு வண்டியில் வந்திறங்கிய எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசும் போது, “நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன்; பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. மக்கள் நலனை பற்றி திமுக அரசுக்கு அக்கறை இல்லை; திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான்கு ஆண்டுக் காலம் இத்திட்டத்தை திமுக கிடப்பில் போட்டது. இந்த அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முயற்சி செய்யாமல் திறந்து மட்டுமே வைத்து வருகிறது. விவசாயிகளின் கனவை அதிமுக நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கித் திட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக திட்டங்களை நிறுத்தி வைக்கப்பட்டன” என்றார்.

இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை; என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com