வயநாடு 4 குழந்தைகள்... நெஞ்சை உருக்கும் கதை!
கேரள மாநிலம் வயநாட்டில் மீட்புப் பணிகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பழங்குடியினக் குழந்தையின் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி பெரும் விவாதப் பொருளாக மாறியது. அந்தக் குழந்தை மட்டுமின்றி மொத்தம் 4 குழந்தைகள் மலை உச்சி குகையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநில வனத் துறையினரின் எட்டு மணி நேரத் தேடுதல் நடவடிக்கையில், நான்கைந்து நாள்களாகச் சாப்பிட வழியின்றி குகைக்குள் இருந்த குழந்தைகள் உட்பட்ட பழங்குடியினர் குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளனர்.
கல்பெட்டா மலைப்பகுதி வனச் சரகர் ஹசிஸ் தலைமையிலான நான்கு பேர் குழுவே அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
இந்த அணியினர் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது, அட்டமலை காட்டுக்குள் பெண் ஒருவர் உணவு தேடி அலைந்துகொண்டு இருந்தார். அவர்கள் விசாரித்தபோது, ஐந்து நாள்களாக தங்கள் குடும்பமே உணவு ஏதும் இல்லாமல் பட்டினி கிடப்பதாக அவர் வனத் துறையினரிடம் கூறியுள்ளார்.
பணியர் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், தங்களின் நான்கு குழந்தைகளும் அவர்களின் தந்தையும் மலையின் மீது உள்ள குகையில் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வனத்துறையினர் அவரை வழிகாட்டச் சொல்லி, அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். கொட்டும் மழையில் நனைந்தபடி, செங்குத்தான பாறைகளின் வழியாக அந்தக் குகையை அடைந்தார்கள். அங்கே ஒரு வயது முதல் நான்கு வயதுவரை உள்ள நான்கு குழந்தைகள் இருந்தார்கள்.
பெரும்பாலும், இந்தப் பழங்குடியினர் வெளி சமூகத்தினருடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். “ பொதுவாக காட்டில் விளையக்கூடிய பொருட்களை சேகரித்து உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்து அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டிவருகிறார்கள். கன மழை காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதால்ம் அவர்களால் எந்த உணவுப்பொருளையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.” என்கிறார், வனச்சரகர் ஹசிஸ்.
இடைவிடாமல் மழையைக் கண்டு ஒதுங்காமல் வனத் துறை தேடுதல் குழுவினர் எட்டு மணி நேரத்தில் ஆறு பேரையும் உயிரோடு காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவந்து விட்டார்கள். இந்தக் குழுவினருக்கு கேரளம் மட்டுமின்றி, பல மாநிலங்கள் வெளி நாடுகளிலிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக, வனக் காவலர் ஒருவர் ஏந்தியிருக்கும் குழந்தையின் பார்வையும் அவருடைய பார்வையும் பேசும்படமாக உலக அளவில் ஊடகங்களின் மூலம் வைரலான படமாக ஆகியிருக்கிறது.
தந்தையோடு குகையில் இருந்த நான்கு குழந்தைகளையும் பார்த்த வனத்துறைக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு அந்தக் குழந்தைகள் மிகமிக களைத்துப்போய் இருந்திருக்கிறார்கள்.
“எங்களிடம் என்ன உணவுப்பொருள் இருந்ததை அதையெல்லாம் அவர்களிடம் கொடுத்தோம். பிறகு அவர்களைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கத் தொடங்கினோம்.” என்கிறார் ஹசிஸ்.
அவர்கள் மலையின் மேலே ஏறும்போதும் சரி, இறங்கும்போதும் சரி மரங்களுக்கும் மலைகளுக்கும் இடையே கயிற்றைக் கட்டிக்கொண்டு தங்கள் பயணத்தை முடித்திருக்கிறார்கள்.
நான்கு குழந்தைகளுக்கும் ஒருவருக்குகூட சட்டைத்துணி இல்லை. தூரி கட்டுவதைப்போல துண்டில் கட்டிக்கொண்டுதான் அவர்களைக் கூட்டிவந்தார்கள்.
ஒருவழியாக, அட்டமலை வேட்டைத்தடுப்பு அலுவலகத்துக்குத் திரும்பியதும், அந்தக் குழந்தைகளுக்கு சரியான உணவையும் உடைகளையும் தந்தனர்.
எட்டு மணி நேரத்தில் தொலைவில் உள்ள மலைக் குடியிருப்பில் மதிப்பிடமுடியாத ஆறு மனித உயிர்களைக் காப்பாற்றியிருப்பது கேரள வனத்துறையினரின் துணிகரமான செயல் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
அவர்களின் இந்த வீரச்செயல் இப்போதைய இருள்கவிந்த துயரத்துக்கு வெளிச்சக் கீற்றாக ஒளிரும்படி செய்திருக்கிறது; நம்பிக்கையுடன் ஒன்றுபட்டு நின்றால் நம்மால் மீண்டும் பழைய நிலைமையைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹசிசுடன் வனத்துறை பிரிவு அதிகாரி ஜெயச்சந்திரன், பீட் அதிகாரி அனில்குமார், விரைவு நடவடிக்கைக் குழு உறுப்பினர் அனூப் ஆகியோரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்று வெற்றிகரமாக பணியைச் செய்துள்ளனர்.