
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த பயம் காரணமாக மேற்கு வங்கத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போதே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று(நவ. 4) பிரமாண்ட பேரணி நடைபெற்றது,
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக கொல்கத்தாவில் இந்திரா காந்தி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து ரவீந்திரநாத் தாகூர் மாளிகை வரை 3.8 கிமீ தூரம் பேரணி நடைற்றது.
'கண்ணுக்குத் தெரியாத அமைதியான மோசடி இது' என்று வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மம்தா விமர்சித்துள்ளார்.
‘வாக்களர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த பயம் காரணமாக மேற்கு வங்கத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுக்கு எதிராக டெல்லியில் போராடுவோம். இந்த போராட்டத்திற்கு அனைவரும் தயாராக உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மம்தா பானர்ஜியை நான்காவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கான அல்ல; பாஜகவை முற்றிலும் தோற்கடிப்பதற்கானது.’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி பேரணியில் பேசியுள்ளார்.
எஸ்.ஐ.ஆருக்கு எதிரான இந்த பேரணியில் மேற்கு வங்க அமைச்சர்கள், திரிணமூல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.